Monday, December 31, 2007

77.ஆவீன மழைபொழிய வில்லம்வீழ

விவேக சிந்தாமணி
*********************
77.ஆவீன மழைபொழிய வில்லம்வீழ
..........அகத்தடியாள் மெய்நோவ வடிமைசாவ

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
.........வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
கோவேந்த ருழுதுண்ட கடமைகேட்கக்
........குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கேநிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்கப்
........பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

இவ்வுலகில் பாவியாய் இருப்பவன் படும் துன்பங்கள்:
தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது.

அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் தருத்தரித்த மனைவி, பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே, தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக, அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான்.

அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான்.

அப்போது அரசனுக்காக வரி வசூல் செய்பவன் தீர்வை செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்த, அந்த நேரத்திலே இறைவனுக்கு பூசை செய்ததற்காகப் பணம் கேட்டு குருக்கள் நிற்கிறார்.

இக்கட்டான நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.
இங்ஙனம் பல துன்பங்கள் படுகின்ற பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலாது.

இப்பாடலை இப்படியும் சொல்கிறார்கள்:

அகத்தடியாள் மெய்நோவ வடிமைசாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ளச்
சாவோலை கொண்டொருவ னெதிரேசெல்லத்

தள்ளவொணா விருந்துவரச் சர்ப்பந்தீண்டப்

பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்கப்
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது. அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் தருத்தரித்த மனைவி, பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே, தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக, அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான். அப்போது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த செய்தி கொண்டுவருபனிடம் விவரம் கேட்டு அறிவதற்குமுன், தட்ட முடியாத விருந்தினர் வீட்டிற்கு வருகிறான்.
அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் தொடர்ந்து வயலுக்குப் போகும்போது அவனைப் பாம்பு கடித்து மயங்கி விழும் நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.
இங்ஙனம் பல துன்பங்கள் படுகின்ற பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலாது.

0 Comments: