Saturday, December 29, 2007

74.உள்ளொளியாஞ் செந்தணலி

ஞானம் எட்டி
**************
74.உள்ளொளியாஞ் செந்தணலி லுற்பனமாஞ் சொற்பனத்தில்

வள்ள லெனுநாத விந்து காண் தெள்ளியதோர்

கத்தரிக்கோல் மாறல் கனக சபைவீட்டில்

வித்தாய் முளைத்ததுகாண் விந்து.


உள் ஒளியாம் சிவந்த மூலாக்கினியில் சொப்பனம்போல் உதிக்கும் வள்ளலாகிய நாதவிந்து, சூரிய கலையும் சந்திரகலையும் பாம்பு புணர்வதுபோல் திருகிக் கத்தரிக்கோல் போல் மாறி உள்ளே போய்த் தெளிந்த கனகசபையில் வித்தாகி முளத்ததைக் காணுங்கள்! ஒன்று பத்தாகும் விந்தையால் இங்கு விந்துவை வள்ளலெனக் கூறினார்.

திருமந்திரம்:

"மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்

கோலால் நடத்திக் குறிவழி யேசென்று

பாலாம் அமிர்துண்டு பற்றப் பற்றினால்

மாலா னதுமாள மாளுமவ் விந்துவே."


மேலா நிலம் = தலை. கோலால் = காலாம் காற்றால்.
குறி = ஞானாசிரியன் குறிப்பிட்டபடி.
மாலானது = இருளாம் மருளானது.
மாளும் = கட்டுப்படும்.

மேல் நிலமாம் தலையில் உதிக்கும் விந்துவையும் நாதத்தையும் காலால் நடத்திக் குறிக்குள்ளே சென்றால் ஊறும் அமுதத்தை உண்டு, பற்ற வேண்டியதைப் பற்றினால் இருளாகிய மருள் கட்டுக்குள் வரும்.

"வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமு மண்டமும் பாரிப்பக்

காயவைம் பூதமுங் காரிய மாயையில்

ஆயிட விந்து வகம்புற மாகுமே."


காயஐம்பூதம் = ஆகாய முதலாகிய ஐம்பூதங்கள்.
காரிய மாயை = விந்துவின் விகாரமான அசுத்த மாயை.

பெருமையுடைய விந்துவின் ஆற்றலால் அண்டமும் அகண்டமும் ஆக்கப்பட்டன. ஆகாய முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயையாகிய விந்துவின் காரியம்; பால் தயிரானது போன்ற திரிபு. இதுவே தூமாயையின் கீழ்ப்பகுதியாகிய தூவாமாயை.

0 Comments: