Saturday, December 29, 2007

72.தூண்டிய நாதபரி பூரணத்தின்

ஞானம் எட்டி
**************
72.தூண்டிய நாதபரி பூரணத்தின்
சுகந்தமலர்க்கமலந் துதித்துக்கொண்டேன்
பூண்டுபொற்பதம் பணிந்தேன் என்னாண்டையேகேள்
பூரகத்தினிலும் வந்து போற்றிசெய்தேன்
வேண்டியமதிமலர் கொண் டாராதனைகள்
மிகுத்தவம் பிகாயோகம் விதரணையாய்க்
காண்டிபமென்றாலறிய வாசியைக்கொண்டு
கருத்திலிருத்திக்கண்ட தாரையூதினேன்.

நாதமாகிய பரிபூரணத்தின் இருப்பிடமாம் சுவாதிட்டானம் என்னும் தாமரை மலரை வணங்கினேன். அதன்பிறகு மணிபூரகத்திற்குச் சென்றேன். அங்கும் வணங்கினேன். அப்படித் துதிக்கும் போது அறிவென்னும் மலரால் அருச்சனை செய்து, செய்தற்கரிய அம்பிகா யோகம் செதேன். அப்பொழுது வாசிகுதிரையைக் நன்றாகக் கண்டத்தில் ஊதினேன்.

மேல்வயிறு - மணிபூரகம்
*************************
இது சுவாதிட்டானத்திற்கு மேள் ஆறங்குலத்தில் உள்ள நாபி என்னும் உந்தி எனச் சொல்லப்படும் இடம். உந்தி என்பதை உன்+தீ என்பார். இது கோழி முட்டையைப்போல் 1008 நரம்பு நாடிகள் சூழப்பட்டுள்ளது. இதுதான் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஆதாரத் தானம். இது நீர் தத்துவம். எட்டு நாட்பிறை போன்ற வடிவமும் அதன் நடுவே 10 இதழ் தாமரை வட்டமும். அதன் நடுவே "ம"கார எழுத்தும், அதன் நடுவே மரகத வண்னமான மகாவிட்டுணுவும், மகா இலக்குமியும் கொலுவிருப்பதாய்க் கூறப்பட்டுள்ளது. இதில் மின்னல் போல் பிரகாசம் தோன்றும்.
ஞானம் எட்டி
***********
"சொல்லரிய மந்திரத்துக் கெட்டா வீடு
......சோதிமணி பூரகத்தி லமைந்த மூர்த்தி
வெல்லரிது நாபியதின் கமலத் துள்ளே
......விளைந்த விதழீரைஞ்சு பத்து மேலும்
வல்லபமாய் நின்றிலங்கு மாலின் தேவி
......வளர்ந்தசபைத் திருமாலை வணங்கிப் போற்றித்
தொல்லுலகி லுள்ளபெரி யோர்கள் பாதந்
......துதித்திந்நூல் விளம்புகின்றே னாண்டே கேளீர்."

போகர்
*****
"மாலினுட வீடதுத னறுவி ரன்மேல்
.....மாசற்ற பிறைபோலே கோட்டை யாகும்
பாலினுட வளையம்போற் பத்தி தழ்தான்
....பத்திதழி னட்சரத்தின் பயனைக் கேளு
தாலினுட சனகமகா முனியின் தாயார்
....தயங்காத நரபர்ப்பர் தன்மையாகும்
ஆலினுட மனநடுவிற் பூத மப்பு
....அதின்பீசம் வங்கென்று அறிய லாமே."

0 Comments: