Saturday, December 29, 2007

62.தந்தையுடனே யெனது

ஞானம் எட்டி
***************
உடல் உற்பத்தி

*****************


62.தந்தையுடனே யெனது தாயுமிருவர்
சரச வுல்லாசலீலை யாடையிலே
மந்திரமதா கவிந்து நாதமுங்கூடி
வருகிற வழிசொல்லுவே னான்டேயிதுகாண்
இந்திரிய சாதிலிங்க முலகுக்கெல்லா
மேகபர நாதவிந்து யாகமதாகி
வந்தவிதங்கோசபீச பிரபஞ்சமதாய்
வாய்த்த விதமுலகில் வகுத்தனர்காண்.

என் ஆண்டையே! கேளும். தந்தையும், தாயும் மகிழ்வுடனே கூடிப் புணர்ச்சி செய்தபோது, மந்திரம்போல் நிதானமாக அவ்விருவர்களிடத்திலிருந்தும் உண்டான விந்துவும், நாதமுங்கூடி இவ்வுலகத்தின்கண் உயிர் பிறக்கும் வழியைச் சொல்லுகின்றேன். தந்தையினிடத்திலிருந்து உண்டாகிய இந்திரியமெனும் சாதிலிங்கமானது இவ்வுலக உற்பத்திக்கெல்லாம் முதற்காரணமான மேலான பரநாத விந்துவாகும். அதுவே, இத்தேகமாக உருவாகியதாம். அதுவே உலக உற்பத்திக்கு வித்தாகிப் பரவுதலுக்கும் காரணமாகும் என்று ஆன்றோர்கள் வகைப்படுத்தினர்.

ஞானக்குறள்:

"பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.'

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தக்க அளவின்படி அன்னத்தில் கலக்கிறது. அந்த அன்னத்தினாலேயே, நாதபிந்து கலைகள் உண்டாகின்றன. நாதம் என்பது ஒலி, இந்திரியம் (சுக்கிலம், முட்டையாகிய அண்டம்). பிந்து என்றால் புள்ளி, விந்து.

திருமந்திரம்:

"விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதலுச்சி உள்ளே ஒளித்ததே."

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து அன்புகொண்டு இன்புறும் வேளையில் யோனி விரிந்தது; அதனுள் லிங்கம் விழுந்தது. அதிலிருந்து உணர்வு கலங்கி ஒழுகியது விந்து. நுண்ணுடலில் தங்கியிருந்த ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் எனும் நுண்மையாகிய(கூர்மை, நுட்பம், நேர்த்தி) ஐந்து தன்மாத்திரைகளும், அறிதற்(அறிய உதவும்) கருவி ஐந்து செய்தற்(செய்ய உதவும்) கருவி ஐந்து ஆகப் பத்துடன் கூடிய மழையாகப் பொழியும் நீர் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும்(ஐந்து பொறிகள்) தோன்றின. புருவநடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடைவிடாது நிகழத் தொடங்கியது.

ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தங்களுடைய கலைகளிலிருந்து பிறப்புக்கு வேண்டிய கலைகளைப் பிரித்து நாத சக்தியில் கலப்பதினால் பிறப்பு உண்டாகிறது.

0 Comments: