Friday, December 28, 2007

3. நிலவுபொழி யிரவிமதி

ஞானம் எட்டி
***************


3. நிலவுபொழி யிரவிமதி யருளினாலே
....................நின்றிலங்கு நாதவிந்தி னிமலி காப்பு

வலமிடமாய்ச் சூழ்ந்துவருங் கார சாரம்
...................வழலையெனு மாமதுர வாணி காப்பு

உலகமதிற் கடல்சூழ்ந்த புவனை வாலை
..................யோங்கார மூலகண பதியே காப்பு

தவமதித சனகாதி ரிஷிகள் பாதஞ் சடாதார
.................சூக்ஷம்சடா தாரங் காப்பாம்.



கிரணங்களை வீசுகின்ற சூரிய சந்திரர்களின் கிருபையால் விளங்குகின்ற நாதமும், விந்துவும், உடலினுள்ளே வலம் இடமாகச் சுற்றிவருகின்ற கார சாரமெனவும், வழலையெனவும் உருவகிக்கப்படும் சரசுவதியும், ஆழிசூழ் உலகத்தோரால் வணங்கப்பெறும் வாலையும், பிரணவமயமான ஓங்கார கணபதியும், மிகவும் மேம்பாடுடைய முனிவர்களான சனகாதி முனிவர்களின் பாதங்களும், தூல சடாதாரமும் (ஆறு ஆதாரங்கள்), சூக்கும ஆதாரங்கள் ஆறும் இந்நூல் இனிதே முடிய காப்பாம்.


தூல சடாதாரமும் (ஆறு ஆதாரங்கள்)
*****************************************
இவை இரு வகைப்படும்.
1.கீழாதாரங்கள் - 6
2.மேலாதாரங்கள் - 6

இவைகள் கண்ணுக்குப் புலப்படாது.

கீழாதாரங்கள் உடலிலும், மேலாதாரங்கள் தலைக்குள் மட்டும் இருப்பவை.

கீழாதாரங்கள் பிண்ட ஆதாரங்கள்.
மேலாதாரங்கள் சூக்கும ஆதாரங்கள். அநுபவத்தினால் மட்டுமே உணரத்தக்கவை.

கீழாதாரங்கள் ஆறு:-
*********************
1.மூலம் - மூலாதாரம்
2.கொப்பூழ் - சுவாதிட்டானம்
3.மேல்வயிறு - மணிபூரகம்
4.நெஞ்சம் - அநாகதம்
5.மிடறு - விசுத்தம்(விசுத்தி)
6.புருவநடு - ஆக்ஞேயம்.

மூலம் என்னும் மூலாதாரம்
*****************************
குதம் என்னும் மலவாய்(எருவாய்), நீர்த்தாரை(மரும இடம்) ஆகியவற்றின் நடுவில் குண்டலி வட்டமும், அதனுள்ளே முக்கோண சக்கர வடிவமும், அதன் நடுவே நான்கு இதழ்கொண்ட கடம்ப மலரும், அதன் உள்ளே ஓங்கார வட்டமும், அதனுள்ளே "ஓம்" என்னும் பிரணவமும் அமைந்திருக்கும். ஓங்காரத்தில் ஒளிவீசும் "அ"காரத்தில் மாணிக்க வண்ணமுடைய கணேசரும், முக்கோணத்தில் ஒளிவீசும் "உ"காரத்தில் மரகத வண்ணமுடைய வல்லபை சக்தி அமர்திருக்க, கோணத்தின் முனையில் குண்டலி சக்தியானவள் எட்டு இதழ்களுடைய வாழைப்பூ தலைகீழாகத் தொங்குவதுபோலிருப்பாள். இவ்வெட்டு இதழ்களும் அட்டசக்திகளெனப்படும் எட்டு இலக்குமிகளாவார்கள்.

மண்(பிருதிவி) தத்துவம் .

போகர்:
********
1."காணவே மூலமது அண்டம் போலக்
..............காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
.............புறம்பாக இதழதுதான் நாலு மாகும்
நாணவே கமத்தட் சரத்தைக் கேளு
............நலமான வயநமசி ரீரீ யாகும்
மூணவே முக்கோணத் தொளிவோங் காரம்
...........முயற்சியா யதற்குள்ளே அகார மாமே."

2."அகரத்தின் மேலாகக் கணேசன் நிற்பார்
..........ஆதியொரு கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாள் சத்தி நிற்பாள்
.........ஒடுங்கியதோர் முனையொன்றிற் கதலிப் பூவாய்
புகாரமாய் முகங்கீழ்குண் டலியாஞ் சத்தி
.........பெண்பாம்பு போற்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையோ டுருவி நிற்பாள்
........துரியாதீ தம்மென்ற அவத்தை தானே."

3."ஓங்கியே மாணிக்கத் தொளீபோல் தோன்றும்
........உத்தமனே மூலத்தி னுண்மை காணும்
தேங்கியே வல்லபையாஞ் சத்தி தானும்
.......சிறந்திருந்தாள் பச்சைநிற மாகத் தானே"

4."பச்சைநிறம் வல்லபையைப் பணிந்து போற்று
.......பாங்கான ஆறுக்கும் பருவஞ் சொல்வாள்
மொச்சையாய் மூலமது சித்தி யானால்
.......மூவுலகுஞ் சஞ்சரித்துத் திர்ய லாமே."

ஞானம் எட்டி:-
***************
1."மதியிருந்து குமுறி விளை யாடும் வீடு
......மகத்தான செங்கதிரோன் மகிழ்ந்த வீடு
பதியிருந்து விளையாடு மூல வீடு
......பத்திதரும் சித்திதரும் பரம வீடு
துதிபெறவு நாற்சதுர மேலு நின்று துலங்கு
.....மெழிற் கணபதி வல்லபையைப் போற்றி
நிதிபெறவு மெனையீன்ற குருவின் பாதம்
.....நெகிழாம லனுதினமுங் காப்புத் தானே."

2."திருவிருந்து கனலெழுந்து ஆடும்வீடு
.......சிறந்தசத்தி வல்லபைதன் கணவ னான
மருவிருந்து கொஞ்சு தமிழ் நாவில்மேவு
.......மகிழ்ந்த மதகரி யினிரு தாளைப் போற்றி
கருவிருந்த பெருவீடு தாண்டி யப்பால்
.......கண்குளிர நின்று நடுவணையி லேறி
மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம் வணங்கியிந்த
.......நூல் வகையைப் புகல்வே னாண்டே."

3."தந்திரமாய் முக்கோணந் தன்னில் நின்ற
தந்திமுகன் கமலபதங் காப்புத் தானே."

திருமந்திரம்:-
***************
"எருவிடு வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடு சோதியை யுள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே."

2.கொப்பூழ் - சுவாதிட்டானம்
*******************************
இது மூலாதாரத்திற்கு நான்கு அங்குலம் மேல் உள்ள இலிங்கத்துக்கும், நாபி எனப்படும் கொப்பூழுக்கும் நடுவில் உள்ளது. நாபியைக் குய்யம் என்பதுவுமுண்டு. இது நாற்சதுர வீடு. இதன் நடுவில் ஆறிதழ் தாமரை வட்டமும், அதன் நடுவே "ந"கார எழுத்தும் உடையது. அந்த நகார வட்டமாம் இலிங்க பீடத்தின் நடுவே அக்கினிபோல் செந்நிறத்தையுடைய பிரும்மனும், சரசுவதி தேவியும் கொலுவீற்றிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

போகர்
********
"துதிசெய்து மூலத்தைத் தாண்டியப்பால்
......துடியான வொருநாலங் குலமே தாண்டப்
பதிசெய்த பிரமனுட வீடு மாகும்
......பகர்ந்தசுவா திட்டான மென்னும் பேரு
அதிசெய்த நாலுவட்டம் வளையஞ் சுத்தல்
......ஆறிதழ்தான் அட்சரத்தை அறியக் கேளே."

ஞானம் எட்டி
***************
"கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி
.......கனகரத்ன மிலகுதிரு மண்ட பத்தில்
மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிட் டானம்
.......வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில்
நிகரொத்த பிரமன் சரசு வதியின் பாதம்
.......நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து
உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு
.......மோரெழுத்தா நாதவிந் தமைத்த வாறே."

திருமந்திரம்
**************
"நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே."

3.மேல்வயிறு - மணிபூரகம்
******************************
இது சுவாதிட்டானத்திற்கு மேள் ஆறங்குலத்தில் உள்ள நாபி என்னும் உந்தி எனச் சொல்லப்படும் இடம். உந்தி என்பதை உன்+தீ என்பார். இது கோழி முட்டையைப்போல் 1008 நரம்பு நாடிகள் சூழப்பட்டுள்ளது. இதுதான் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஆதாரத் தானம். இது நீர் தத்துவம். எட்டு நாட்பிறை போன்ற வடிவமும் அதன் நடுவே 10 இதழ் தாமரை வட்டமும். அதன் நடுவே "ம"கார எழுத்தும், அதன் நடுவே மரகத வண்னமான மகாவிட்டுணுவும், மகா இலக்குமியும் கொலுவிருப்பதாய்க் கூறப்பட்டுள்ளது. இதில் மின்னல் போல் பிரகாசம் தோன்றும்.

ஞானம் எட்டி
***************
"சொல்லரிய மந்திரத்துக் கெட்டா வீடு
......சோதிமணி பூரகத்தி லமைந்த மூர்த்தி
வெல்லரிது நாபியதின் கமலத் துள்ளே
......விளைந்த விதழீரைஞ்சு பத்து மேலும்
வல்லபமாய் நின்றிலங்கு மாலின் தேவி
......வளர்ந்தசபைத் திருமாலை வணங்கிப் போற்றித்
தொல்லுலகி லுள்ளபெரி யோர்கள் பாதந்
......துதித்திந்நூல் விளம்புகின்றே னாண்டே கேளீர்."

போகர்
********
"மாலினுட வீடதுத னறுவி ரன்மேல்
.....மாசற்ற பிறைபோலே கோட்டை யாகும்
பாலினுட வளையம்போற் பத்தி தழ்தான்
....பத்திதழி னட்சரத்தின் பயனைக் கேளு
தாலினுட சனகமகா முனியின் தாயார்
....தயங்காத நரபர்ப்பர் தன்மையாகும்
ஆலினுட மனநடுவிற் பூத மப்பு
....அதின்பீசம் வங்கென்று அறிய லாமே."

4.நெஞ்சம் - அநாகதம்
************************
இது மணிபூரகத்துக்கு 8 அங்குலம் மேல் இருதயத் தானத்தில் முக்கோண வடிவாய் உள்ளது. இதன் நடுவே 12 இதழ்த் தாமரையும், அதன் நடுவே "சி"கார அட்சரமும் தோன்றும். அதிலே உருத்திரனும், பார்வதியும் கொலுவிருப்பர். அங்கு மின்மினியின் பிரகாசம் தோன்றும். இது வாயுவாம் தேயுவின் கூறு. இதை இருதயக் கமலம் என்பர்.

ஞானம் எட்டி
**************
"வட்ட மிட்ட சட்கோணப் பாரின் மேலும்
......வளர்ந்த வித மீராறா மங்கு லத்தில்
திட்டமிட்ட வனாகதத்தில் வீற்றி ருந்த
......சிறந்தருளும் ருத்திர னுத்திரியைப் போற்றி
வெட்டவெளி வேதமறை நான்கு மோதும்
......வேத மெலாந் திருநீறா யான வாறும்
அட்ட திசை யறிந்துணர்ந்த பெரியோர்பாத
......மைம்பத் தோ ரட்சரமுங் காப்புத் தானே."

போகர்
********
"அறிவுக்கு மேலேயெட் டங்கு லத்துக்
.......கப்பால் நாகத்தின் வீட்டைக் கேளு
முறிவுக்கு முக்கோண மாகி நிற்கும்
.......முதிர்வளையம் பன்னிரண்டு இதழு மாகும்."

5.மிடறு - விசுத்தம்(விசுத்தி)
*******************************
இது அநாகதத்திற்கு 12 அங்குலத்துக்கு மேல் உள்ள கண்டம் என்னும் தானத்தில் அறுகோண வடிவாயிருக்கும். அதன் நடுவே 16 இதழ்த் தாமரையும், அதன் நடுவே "வ"கார அட்சரமும் பிரகாசிக்கும். அவ்வட்சரத்தின் நடுவே மேகவண்ணத்துடன் மகேசுவரனும், மகேசுவரியும் கொலுவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஞானம் எட்டி
**************
"ஆறுகொண்ட வம்பலத்தி னின்ற சோதி
.....யம்பரமாந் தற்பரத்தை யேறி நித்தம்
வீறுகொண்ட வறுகோண வீட்டின் மேலும்
.....விளங்குமிதழ் பதினாறு மேவு பீடம்
பேறுபெற்ற மயேசன் மயேசு வரியு மங்கே
.....பேணியவ ரிருவர்பதக் கமலம் போற்றிப்
பாரிலுள்ள வேதமறி யாமல் நின்ற
.....பழம் பொருளைப் பாடுகிறே னாண்டே கேளே."

போகர்
********
"ஏறவே பன்னிரண்டங் குலமே தாண்டி
......ஏற்றமாம் விசுத்தியென்ற தலமு மாகும்
மாறவே அறுகோண வளையம் ஒன்று
......மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்."

6.புருவநடு - ஆக்ஞேயம்.
***************************
விசுத்திக்கு 16 அங்குலத்துக்குமேல் நெற்றியில் புருவமத்தியில், இரண்டிதழ் கொண்ட தாமரையும் அதன் நடுவே "ய"காரமும், அதன் நடுவே சதாசிவனும், மனோன்மணியும் கொலுவிருப்பதாகக் கூறுவர். இது சூரியனின் ஒளியோடு இருக்கும் ஆகாயத்தின் கூறு.

ஞானம் எட்டி
***************
"காலை வட்ட மாலை வட்ட மாகி நின்ற
......கதிர் முனையிற் சுருதி முனை யாடுஞ் சோதி
நீல வட்டங் கொண்டெழுந்து கலையெண் ணான்கும்
......நின்றிலங்கு மாக்கினையி லிதழிரண்டு
ஞாலமதி லாதியந்த ரூப மான
......நற்கமல மாயிரத்தெட்டிதழின்மேலும்
ஆலவிட முண்ட சதா சிவனைப் போற்றி
......யம்பிகையின் கமலபாத மர்ச்சித் தேனே."

போகர்
********
"மேலேறி யிரண்டுபுரு வத்தி னூடே
......மிகையான அண்டம்போல் நிற்கு மப்ப
வாலேறி வட்டமாம் வீடு போலே
.....வளையமொன்று இரண்டிதழ்தான் எரஸ்ரீ யாகும்
ஆளேறி அங்கெனுமட் சரத்தி னூடே
.....ஆகாச பூதமாம் பூத பீசம்
ஆலேறி மனோன்மணி சதா சிவன்றான்
.....அவத்தைதான் சாக்கிரத்தின் வீடு மாமே."

பிரபுலிங்க லீலை
********************
"இரண்டோ டிரண்டு மூவிரண்டை யிரண்டா றிரண்டு மீமிசையெண்
ணிரண்டோ டிரண்டு கொண்டிருந்த இதழ்ப்பங் கயங்கள் கடந்து
இருந்த குளத்தின் மேலோராயிரத்தோட் டமல கமலமிசை போய்
யிருந்த சோதி தனைக்கண்டெம் எண்ண முடிப்பே மெனவெழுந்து."

திருமந்திரம்
***************
"நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறு
மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே."

இவ்வாறு ஆதரங்கள் அல்லாது ஏழாம் ஆதரம் ஒன்றுளது. அது கீழாதரம், மேலாதாரம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்(பொது). அதுவே பிரம்மரந்திரம்.

பிரம்மரந்திரம்
****************
ஆக்கினைக்கு எட்டு அங்குலத்திற்குமேல் சகத்திரதளமெனப்படும், ஆயிரவிதழ் அல்லது ஆயிரதெட்டிதழ் தாமரை எனச் சொல்லப்பட்ட இதழ்களையுடைய ஒரு தாமரைப்பூ உள்ளது. அதில், நாதவிந்துத்தானம் ஐங்கோனத்துள் ஓரிதழ்த் தாமரையாய் உளது. இதுவே, பரகாயமெனவும், பிரம்மரந்திரமெனவும் சொல்லப்படுகின்றது.

போகர்
********
"தானான மனோன்மணியைத் தாண்டி யப்பால்
.....தனித்தோ ரெட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபதந்தான் கூட்டிப் பாரு
.....குறிப்பான இதழோரா யிரத்தெட் டாகும்
ஆனான நடுமையம் ஐங்கோ ணந்தான்
.....அகரமாம் மகாரமொடு வகார மாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும்
.....நலமுளவைங் கோணத்தில் நிற்கும் பாரே."

ஞானக் கும்மி
****************
"விந்து இருந்த விடந்தனிலே குரு
.....நந்தி யிருந்தார் கொலுவாகிச்
சிந்தை தெளிந்து மகாரம்வைத் தாலந்தச்
.....சீமானைக் காணலாம் ஞானப்பெண்ணே."

0 Comments: