Friday, December 28, 2007

2. குகனருளின் கிருபையினா

ஞானம் எட்டி
***************

2. குகனருளின் கிருபையினா லிந்நூல் ஞானங்

....... கூர்ந்துநவ சித்தர்மொழி குறித்து ஆய்ந்து
புகழமிர்தச் செந்தமிழா யிரத்தைந் நூறு
.........புகலவும்பூ தலங்க ளெல்லாஞ் செழித்து வாழ்க
அகமகிழு மம்பிகைப் பெண் ணருளி னாலே
..... யவனிதனில் ஞானவெட்டி யருள யானும்
நிகழ்திருவள் ளுவநாய னுரைத்த வேத
...... நிரஞ்சனமா நிலவுபொழி ரவிகாப் பாமே.

உரை:

குகனின் கிருபையால் இந்நூலில் நவசித்தர்களும் இயம்பிய ஞானநூல்களிலுள்ள ஞானக் கருத்துக்களை நன்றாக ஆய்ந்து உலகத்திலுள்ளோர் உய்யும்வண்ணம், ஆயிரத்து ஐந்நூறு செந்தமிழ்ப்
பாக்களால் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த "வேத நிரஞ்சனம்" என்னும் நூலை, ஞானவெட்டியான் என்னும் பெயரமைத்து யான் சொல்லுவேன் என இந்நூலாசிரியர் இயம்புவதிலிருந்து, இந்நூல் திருவள்ளுவ நாயனாரால் இயற்றப்பட்டது அல்லவென்றும், இதையியற்றிய ஆசிரியர் தன்பெயரை இந்நூல் முழுவதும் வெளியிடாததாலும், ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.

ஆக, மூலநூல் வேத நிரஞ்சனம் என்றும், அதன் வழிநூலே இந்த "ஞானமெட்டி" என்றும் விளங்குகிறது. ஆயினும், பரம்பரைபரம்பரையாக, இந்நூல் திருவள்ளுவர் அருளியது என்று கூறப்படுவதாலும், இந்நூலுள் ஆங்காங்கு திருவள்ளுவர் இயற்றியதாகவே கூறப்பட்டிருப்பதாலும், இவ்வற்புத நூலை
திருவள்ளுவர் இயற்றியதாகவே கொள்வதில் தவறில்லை.

அகமகிழும் உமாம்பிகை அருளாலே இயற்றிய இந்நூலுக்கு இரவி காப்பாம் என முடிக்கிறார்.

0 Comments: