Friday, December 28, 2007

1.அண்டபிண்ட நிறைந்து

ஞானம் எட்டி
**********

(ஞானம் + எட்டி = ஞானமெட்டி)
பாயிரம்
**********
காப்பு:
********
1.அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுரதமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழு மெந்தன் குருவைப் போற்றி
யிடைகலைபின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்த விநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணைகள் போற்றி போற்றி.

அண்டமாகிய வெளியிலும், பிண்டமாகிய உடலினுள்ளும் நிறந்து நிற்கும் பிரும்மா, விட்டுணு ஆகியோர் போற்றி. அகண்ட பரிபூரணமாகிய இறையின் அருள் போற்றி. இப்பூவுலகம்சூழ் சூரிய, சந்திரர் ஆகியோரின் சுடர் போற்றி. இனிய தமிழோதும் அகத்தியனைப் போற்றி.

எட்டுதிக்குகளும் போற்றும் என் ஞானாசிரியனாகிய சுவாமி போற்றி.
இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகியவை சந்திக்குமிடமாம் கமலம் போற்றி. யோகநூல்களில், குண்டலினி எனப்படுமிடத்தில் அமர்ந்திருக்கும் விநாயகன் போற்றி.
அத்துடன், குகமணியாம்(குகை + மணி) சுப்பிரமணியம் போற்றி.

பிரம்ம விட்டுணுக்கள் அண்டத்திற் செய்வது போலவே பிண்டத்திலும் தத்தம் செயல்களை செய்யவேண்டியது மிக அவசியமாகிறது. ஆதலால், அவர்களை, அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால்போற்றி என்றார். எங்கும் பரந்து கிடக்கும் திருவருளையே இந்நூல் உட்கிடையாகக் கொண்டிருத்தலின் அகண்டபரிபூரணத்தி னருளைப்போற்றி என்றார்.

இந்நூல் தேமதுரத் தமிழில் இயம்பப்பட்டிருப்பதால், அத்தமிழுக்குரியவனாகிய குருமுனியாம் அகத்தியனைப் போற்றினார்.

குருவருள் இல்லையெனில், இம்மாகாவியம் இனிதே உலகத்தோருக்குக் கிடைக்காதென்பதால், எண்டிசையும்புகழும் குருவைப் போற்றினார்.

இந்நூல் முழுவதும், பிண்டக் கருத்துக்கள் அண்டக் கருத்துக்களில் மறைவாக இயம்பப்பட்டிருப்பதால், முக்கலையின் மூலாதாரமாம் விநாயகனைப் போற்றினார். அத்துடன், (கபாலக்)குகை மணியையும் போற்றினார்.

3 Comments:

Anonymous said...

அன்பின் ஞானவெட்டியான் அவர்களே

சித்தர் திருவள்ளுவர் பல சிறப்பான நூற்களில் குருநூலாக அவர் கருத்தும் ஞானவெட்டியானை தெளிவுரையோடு விளக்கத் தொடங்கிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அவரும் ஏனைய சித்தர்களும் தாங்கள் கூறியிருப்பதுபோல "பிண்டக் கருத்துக்கள் அண்டக் கருத்துக்களில் மறைவாக இயம்பப்பட்டிருப்பதால், முக்கலையின் மூலாதாரமாம் விநாயகனைப் போற்றினார்.
அத்துடன், (கபாலக்)குகை மணியையும் போற்றினார்" என்றே அமைந்துள்ளது. இதுவே
அவர்களது அறிவியல் திறத்தையும் காட்டுவதாக நான் கொள்கிறேன். 1500 பாடல்களுக்கு மேலுள்ள இப்பெரும் நூலை எப்படி முற்றாக அறிமுகம் செய்யப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. எனினும் இறையருள் துணை நிற்க ஆகாதது ஒன்றுமில்லை.

Anonymous said...

ஐயா, மற்றப் பாடல்களை விட இந்தப் பாடல் எளிதாக இருக்கிறது. உங்கள் விளக்கமும் அதனைவிட எளிதாக இருக்கிறது. இந்தப் பாடலின் கருத்து மனதிலும் அறிவிலும் நிற்கும் என்று எண்ணுகிறேன். மிக்க நன்றி.

Anonymous said...

அன்பு குமரன்,
மிக்க நன்றி