ஞானக் குறள்
***************
3. தன்பால்
*************
31. உயர்ஞான தரிசனம் (301-310)
*************************************
301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.
சூரிய சந்திர அக்கினி கலைகளை உந்திக்கமலத்தில் உள்ள அக்கினி மண்டலத்தில் சேர்த்துவிட்டால், உயிரையும் உடலையும் காலம்(ன்) பிரிக்கச் சக்தியற்றுப் போய்விடும்.
302. வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும், சந்திர கலையைப் பிங்கலையில் சேர்க்க வேண்டும்.
303. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.
செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சூரிய கலையைச் சந்திரனிடம் சேர்க்க இடறொன்றும் வராது.
304. வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.
வளர்பிறை வியாழக் கிழமைகளில் சந்திரகலையை சூரியகலையிலும், தேய்பிறை வியாழக் கிழமைகளில் சூரியகலையைச் சந்திரகலையுடனும் சேர்க்கவேண்டும். இவ்விரண்டு ஞானவினையும் வளர்பிறையாம்.
305. வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.
சனிக்கிழமைகளில் மட்டும் இரவும் பகலும் சூரியகலையைப் பிரித்து இடப்பக்கம் பாய்ச்சும்போது, அபானனையும் சேர்த்துப் பாச்சுதல் வேண்டும்.
306. இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.
குண்டலியின் மத்தியில் உதிக்கும் பிராணாபான வாயுக்கள், பகலில் வலத்திலும், இரவில் இடப் பக்கத்திலும் உலாவிவரும்.
307. அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.
அரசன் தன் உருவத்தை வெளிப்படுத்தாது நாட்டை அரசாளுவது போலத்தான், ஞானவினை புரிதலும்.
308. கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல்.
படிக்காத (ஞானம் புரியாத) மூடர்கள் திருவுருவை அடையவேண்டி, புண்ணிய காரியங்கள் என்று சொல்லப்படும் காரியங்களைச் செய்தால், இறைப் பதத்தை அடைய இயலாது. ஞானவினையில் முழுவதும் சலனமில்லது ஈடுபட்டால்தான் இறைப்பதம் கிட்டும்.
309. திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள்.
ஞானக் குறள் - திருவருட்பாலின் உட்கருத்தை அறிந்து, தெளியும் நிலையில், வழிநடாத்த ஞானாசிரியன் நம்மைத்தேடி வருவான்.
310. கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.
ஞான நூல்களைப் படிப்பதாலும், கேட்பதாலும், ஞான எண்ணமுதித்து, ஞானவினை செய்வானேயாகில், வீடுபேறு என்றழைக்கப்படும் சிவத்தையடைவான்.
*****************************************
இறையருளால் ஞான குறள் முற்றிற்று
******************************************
அன்புடையீர்,
வணக்கம்.
ஞானக் குறள் உருவில் சிறியது. அது அடக்கிக் கொண்டிருப்பதோ ஞானக் கடல். இறையாணையால், அவன் துணையுடன் அக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முயன்றுள்ளேன். பிரும்ம இரகசியம் என்று மறைக்கப்பட்டு வந்ததை, என்னால் இயன்ற அளவுக்கு விளக்க முயன்றுள்ளேன். விதை தூவப்பட்டுவிட்டது; நீர் தெளித்தாயிற்று; முளை வெளிவந்து கதிர் முற்றி அறுவடையாகவேண்டியது உங்கள் செயலில் உள்ளது. செயல் இல்லையேல் இறைவனை அடைய இயலாது என்பது முன்னோர் வாக்கு.
பட்டறிவுதான் உங்களின் ஞானாசிரியன்;
எல்லாப் புகழும் இறைவனுக்கே;
கட்டாயம் துணையிருப்பான்.
வாழ்க ஞானம்; வளர்க அருள்.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 31. உயர்ஞான தரிசனம் (301-310)
Posted by ஞானவெட்டியான் at 4:48 PM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment