ஞானக் குறள்
***************
3. தன்பால்
************
30. துரிய தரிசனம் (291-300)
********************************
291. வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள.
முதன்மையான சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கிக்கு எட்டு கலைகளும், சந்திரனுக்குப் பதினாறு கலைகளுமுள்ளன.
292. சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.
சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆநந்தத்தை நீங்களே உணர்ந்து அறிக.
திருமந்திரம்:
"குரவ னுயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்திபேச் சற்று
வுருகிட என்னையங் குய்யக்கொண் டானே."
உயிர்முச்சொரூபம் = தூலம், சூக்குமம், காரணம்.
அரிய பொருள் = உடல், பொருள், ஆவி.
முத்திரையாக = காணிக்கையாக.
பேச்சற்று = மவுனமாய். குரவன் = ஞானகுரு.
சிவகுருவாம் இறைவன், உயிருடைய பருமை(தூலம்), நுண்மை(சூக்குமம்), முன்மை(காரணம்) எனும் மூவகை உடல்களையும் இரவலை ஏற்பதுபோல் தன்னுடைமை ஆக்கிக்கொள்ளுகிறான். உடல், பொருள், ஆவி ஆகியவைகளைக் காணிக்கையாகக் கொள்கிறான். சிவத்திருவடியாம் நந்தி என்னை உய்யக் கொண்டான். அதனால் உள்ளமுருகி இன்பவெள்ளம் பெருகியது.
293. மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.
சந்திரனோடு அக்கினி ஒன்றாய்க் கலந்து வெளிப்படில் சூரியான் தானாக வெளிப்படுவான்.
294. மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
சூரியன் அக்கினியுடன் கலந்துவந்து சந்திரனுடன் ஒடுங்கில் அதுவே பதினாறு கலைகளோடு கூடிய பருவமாம்.
திருமந்திரம்:
"அங்கி மதிகூட வாகுங் கதிரொளி
யங்கி கதிர்கூட வாகு மதியொளி
யங்கி சிவத்தினிற் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே."
மூலத்தீயும் திங்களின் கதிரும் சேரப் பகலவன் கதிரொளி விளங்கும். மூலத்தீயும் கதிரவன் கதிரும் சேர்ந்தவிடத்து மதியொளி திகழும். மூலத்தீ திருவட் உணர்வோடு கலந்தக்கால் விண்மீனை ஒத்த ஆவிகளின் ஒருநிலைத் தங்குதல் ஏற்படும். அந்நிலையே எல்லாம் ஆகும் நிலையாம்.
295. தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.
உடலினுள் சூரியகலையும் சந்திர கலையுமொன்ற காருவா (அமாவாசை)தான். ஆக அமாவாசையில் செய்யவேண்டிய காரியங்களை ஞானியர், சூரிய கலையும் சந்திர கலையும் கலக்கும்போது செய்வர்.
296. வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
காருவா (அமாவாசை), வெள்ளுவா (பூர்ணிமை) எல்லாம் உடலுக்குள், சூரிய சந்திர கலைகளின் புணர்ச்சியால்தான்.
297. அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
சூரியனிருக்கும் ஓரை(இராசி)யில் சந்திரன் சேர அமாவாசையும், சந்திரன் சூரியனுக்கு ஏழாம் இராசியில் சேரும்போது பூர்ணமையாகவும் ஆகும்.
அதைச் சூக்குமத்தில் உடலில் செய்து உணர்வோருக்கு, உடலும் உயிரும் சமமாக ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமலும் இருக்கும்.
298.அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.
அண்டத்தில் எப்படி சூரிய சந்திரர்களின் சேர்க்கையுண்டோ அப்படியே பிண்டத்திலுமுண்டாம். "அண்டத்திலுள்ளது பிண்டத்தில்."
299. ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.
சூரியன் சந்திரன் இரண்டும் சேரும்நாள் காருவா(அமாவாசை)யாகவும், பிரிந்த நாள் முதல் மறுபடியும் சேர்வதற்கு முன்னாள் வரை வெள்ளுவா (பூர்ணிமை) வாகவும் ஞானிகள் கொள்ளல் வேண்டும். ஏனெனில், தேய்வுக்கு ஞானவினையில் இடம் கொடுக்கலாகாது. பூரண கலையொடு சந்திரன் சூரியனுடன் சேருவதால், இரவும் பகலும் ஒழிந்து, இராப்பகலற்றவிடத்தில் ஆநந்தத்தில் உதிக்க இயலும்.
திருமந்திரம்:
"எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
யெய்துவ தூல மிருவகைப் பக்கத்து
ளெய்துங் கலைபோல வேறி யிறங்குமாந்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே."
மதியின் தேய்தலும் வளர்தலுமாகிய இருவகைப் பக்கத்துமுள்ள கலைகள் நூண்மையிலிருந்து பருமையாய் விளங்குவதற்கும், பருமையிலிருந்து நுண்மையாய் ஒடுங்கி மறைவதற்கும் எடுத்துக்காட்டாய் இருப்பன. அதுபோல, மனு உடலும் நுண்மையிலிருந்து பருமையாய் விளங்குதலும், பருமையிலிருந்து நுண்மையாய் ஒடுங்குதலும் இருக்கிறதெனக் கொள்ளவேண்டும். உடல் மல நீக்கத்திற்காகத் தரப்பட்டது.
"ஆகின்ற சந்திரன் சூரிய னங்கியு
ளாகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்து
ளேகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
யாகின்ற யோகி யறிந்த வறிவே."
சந்திரன் ஈரெட்டு = சந்திரகலை 16.
சூரியன் ஆறிரண்டு = 6 X 2 = 12.
அங்கி ஈரைந்து = 2 X 5 = 10.
இடைவழி = இடகலை.
ஞாயிறு, திங்கள், தீ ஆகிய முக்கலைகளையும் அகமுகப் பயிற்சியால் நடுநாடி வழியாக மேலேத்துவர். அங்ஙனம் செய்தவரின் உடல் எழிலுற விளங்கும்.
300.உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.
அண்டத்தில்:
காருவா(அமாவாசை)க்கு அடுத்த நாளாம் பிரதமை திதியில் சந்திரனைக் கண்டுறங்க நல்லது என்பர் மூத்தோர்.
பிண்டத்தில்:
சூரியனை(சூரிய கலையை) விட்டு சந்திரன் (சந்திரகலை) பிரியும்பொழுது விழி எப்படியிருக்குமோ, அந்நிலயில் இருந்து ஞானவினையாம் தவம் செய்ய, அமாவாசையாம் இருளாம் (சூனிய இருளாம் கன்சூல் மகபியாவென்னும்) அன்னையைக் காணலாம்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 30. துரிய தரிசனம் (291-300)
Posted by ஞானவெட்டியான் at 4:32 PM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ஞானிகள் கொள்ளல் வேண்டும்.
ஞானிகளும் தெரிந்துகொள்ளும் நிலையில் தான் இருக்கிறார்களா?
ஆம். கற்றது கைமண் அளவே!
மிகவும் நன்று.
கண்டு களித்தேன் ஐயா!
வளர்பிறையே நன்று; தேய்பிறைக்கு ஞானவினையில் இடம் கொடுக்கலாகாது எனும் கருத்தைப் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி!
மிக்க நன்றி,SK.
Post a Comment