Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 29. மெய்நெறி (281-290)

ஞானக் குறள்
***************
3. தன்பால்
************
29. மெய்நெறி (281-290)
****************************

281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.

உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம்:

"விளங்கிடும் வாயுவை மேலெழ வுன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே."

கும்பிச்சு = நிறைந்து.
நலங்கிடுதல் = ஒடுங்குதல்.

ஒடுங்கும் கழுத்திலும் கொப்பூழிலும் உள்ள உயிர்ப்பை மேல்நோக்கி எழுமாறு நினைந்து கழுத்தைச் சுருக்கிச் சாலந்திரை முத்திரை, ஒட்டியாணப் பிணிப்பு முத்திரை ஆகியவைகளைச் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்ய சாலந்திரையால் மெய்யமிழ்து கீழ் ஒழுகுதல் தடைப்படும்.

ஒட்டியாணப் பிணிப்பால் உயிர்ப்பு மடங்கும்.

நெற்றி மண்டிலத்தே அமிழ்து நிறையும்.

"சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகு மிவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தரிசனந் தானே."

மாகம் = பரவெளியாம் விண்.
தூரம் = பரவெளி.

நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய ஐம்பூதங்களும் உடலில் ஒருமுகப்பட்டுக் கூடினால் உயிர்ப்பு கைவயப்படும். உயிர்ப்பு வயப்பட பரவெளி முழுமுதற் சிவத்தை அருட்கண்ணால் கண்டு கும்பிடலாம்.

"தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்திட்
டேராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே."

ஆருலகம் = உலகியல் துய்ப்பு.
கடைஞானம் = முடிந்த ஞானம்.

பரவெளியில் சிவத்தை வணங்குவதைச் சொல்வேன். மழைபோன்ற கண்ணையுடைய திருவருளால் முடிஞானம் எனப்படும் அறிவில் அறிவாம் (ஞானத்தில் ஞானமாம்) திருவடி உணர்வை உணர்வில் கொண்டால், அவ்வுணர்வு உள்ளத்தே அழகு மிக்க ஒளிவடிவாகும். உள்ளம் அழகு மிக்க உள்ளமாகும். இவ்வுள்ளம் அமைந்தோர்க்கு உலகும் உலகியல் துய்ப்பும் பகலில் கணப்படும் பொருள்போல் தெள்ளிதே விளங்கும்.
தூரதெரிசனம் முக்காலத்தையும் உணர்த்தி விடும்.

282. பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.

மூலாக்கினியை எழுப்பி அறிவுடன் இணைத்துவிட்டால், பஞ்சில் பட்ட நெருப்பு போல அறிவுச் சுடரானது பரவி, மறையாமலிருந்து அவியாது ஒளிவீசிக்கொண்டிருக்கும்.

283. இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.

இமைகொட்டும் நேரத்தில் உதித்துப்பரவி, உதித்த இடத்திலேயே மறையும் மின்னலைப்போல், சிவன் செயலும் நம்முள் தோன்றி மறையும்.

284. குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.


ஒரே சிந்தையுடன், மனதில் நினைப்பற்று பிரணவத்தின் மத்திய பாகத்தில் எழும் கலைகளைக் கூட்டி மேலேற்றி நிற்க அதைவிட மேலானதில்லை. செப(வ)ம் செய்தும் பலன் இல்லை.

285. காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு.

காலாகிய பிராணாபான வாயுக்களும், தலையாகிய பிரணவ உச்சியும் ஒன்றாய்க் கலந்தவிடம் நாலாம் நிலையாகிய துரியம் ஆகும்.

திருமந்திரம்:

"துரிய மிருப்பதுஞ் சாக்கிரத் துள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரிய மிறந்திடஞ் சொல்லவொண் ணாதே."

துரியாதீதம் = துரியம் இறந்த இடம்; அப்பால்.
நரிகள் பதினாலு = கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, அகக்கலன்களாம் அந்தக்கரணம் 4, ஆக 14.
பரிய புரவி = விரைந்து செல்லும் ஓசை முதலிய 5.

பேருறக்கமாகிய துரியம் இருப்பது நனவாகிய சாக்கிரத்துக்குள்ளேதான். இப்பதினான்கு கருவிகளும் புற நுகர்ச்சியில்லாததால் நஞ்சுண்டது போலாகி ஒத்து அடங்கின. புலன்கொள்ளும் புலன்கள் பத்தும் புரவியைப் போல் தொடர்வின்றிப் பறந்தது. உயிர்ப்பு அடங்கலாகிய துரியாதீதத்தில் நிகழும் நிலயிலுள்ள இன்பம் இத்தன்மையது எனச் சொல்ல இயலாது.

286. மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.

உடலின் மூலமாம் கண்களுக்குள் இருக்கும் மணிபூரகமாகிய நாபிக்கமலத்துள் விடமருந்திய நீலகண்டமுள்ளான்.

திருமந்திரம்:

"மூலத்து மேலது முச்சது ரத்தது
காலொத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே."

மூலத்து = எருவாய்க்கு.
கால் = உயிர்ப்பு.
சந்தினில் = இணைப்பில்.
கோலங்கள் = தோற்றங்கள்
மேலைப்பிறை = மேலேயுள்ள சந்திர மண்டிலம்.
நெற்றிநேர் = புருவ நடுவு.

மூலத்துக்கு மேலாக முக்கோணமும் நாற்சதுரமும் உள்ளன. உயிர்ப்புகள் ஒத்துப் பொருந்த கூடும் இணைப்பில் திங்கள் மண்டிலத்திலிருந்து கணப்படும் அழகிய திருக்கோலங்கள் வெவ்வேறாகும்.

"மூலத்து வாரத்து மூளு மொருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."

மூலாதாரத்தில் உள்ள நடுநாடி வழியாக உயிர்ப்பினை ஏற்றி உச்சித்துளையினுள் செலுத்தல் ஞானவினையின் அடிப்படை. அங்ஙனம் செலுத்தப் பரவெளியில் சிவம் காட்சியளிக்கும். அவ்வாறு வழிபாடு செய்தவனின் ஆவியைக் கொண்டுபோக வந்த காலனைக் காலால் உதைத்துக் காய்ந்தவன். எவராலும் கடக்க முடியாத மரணத்தைக் கடக்க நிலைகளமான இடமாதலின் அவ்வூர் கடவூர் ஆயிற்று.

287. எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.

உந்திக்கமலித்திலிருந்து எழும் சுடரின் உச்சியின்மேல் மனம் அசைவற்று நின்றால் சுடரும் அசைவற்ற நிலையில் நின்று ஒளிவீசும்.

288. அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.

மூடியிருக்கும் இரு உதயக் குகையின் வாசலின்மேல் அசைவற்ற மனத்தை நிறுத்தித் தன்னை அகண்டமாகப் பார். இங்கு படைத்தவன் என்பதற்கு, கண்கள் எனப் பொருள்படும். கண் பார்த்தவுடன்தான் எல்லாம் தெரிகிறது. மனம் விழிக்கிறது. பொருள் தெரிந்து புரிகிறது.

289. அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர்.

சந்திர கலைகள் பதினாறையும், அவற்றைச் செலுத்த வேண்டிய தந்திரங்களின் வழியையும் ஒரு வருட காலம் பழகவேண்டும்.

திருமந்திரம்:

"முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டி
லணிந்த அணிமாகை தானா மிவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே."

முடிந்திட்டு = அடக்கி.

அகத்தவமாம் யோகத்தில் திளைத்து இருந்து கலவி இன்பத்திற்கேங்கி விந்துவை விரயம் செய்யாது (பானுவில் விடாது) முடிந்து(அடக்கி) வைக்க புகழ்ந்து கூறப்பட்ட பஞ்சினும் நுண்ணிய(நொய்) அணிமா ஓராண்டினில் கைவரப்பெறும்.

290. அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.

மேற்கூறிய விடயங்களை அறிந்து, தெளிந்து, செயலாற்ற ஓராண்டினில் அட்டமா சித்திகளுஞ் சேரும்.

0 Comments: