ஞானக் குறள்
***************
3. தன்பால்
*************
28. ஞானம் பிரியாமை (271-280)
************************************
271. பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.
ஞானவினைக்கு வேண்டிய தத்துவங்கள் வெளிப்படுமிடம், திருமால் வாழும் மணிபூரகமாகிய உந்திக் கமலமே. அவ்விடத்தைத் திறக்காமலிருப்பின், நாம் இறந்தபின் சேரவேண்டியது வன்னியாகிய அக்கினியிடமே.
272. சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.
இறவாது தடுக்கும் பொருள்களின் இருப்பிடமே மவுனமாகிய நாபிக்கமலம்தான். அங்கே, நோக்கைக் கருத்துடன் இணைத்துச் சலனமின்றி இரு. உந்திக்கமலம் திறப்பதற்கு முந்தி தோற்றாமல் அதற்குச் சம்பந்தமில்லாத வினையினால் திறந்து எல்லாவற்றையும் தோற்றுவிப்பதால் மவுனம் எனப் பெயர் பெற்றது.
273. வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.
அண்டத்திலுண்டான கனியாகிய அன்னமே, மூலாக்கினியில் கலந்து வெண்ணிற ஒளியாய் நிற்கும்.
274. மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.
பினை = பின்னர்
நினைப்பு மறப்பற்று மவுன நிலையில் ஞானவினை ஆற்றியவனுக்கு பிறப்பு, இறப்பு கிடையாது.
275. குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.
உந்திக்கமலத்தில், நந்தி குருவாம் சிவம் உதிக்குமட்டும் மவுனத்தில் நிலைத்து நில்.
276. சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.
சக்கரமாகிய திருவடிகளைக் கண்டு அதனால் புரியும் ஞானவினையால் மந்திரமாகிய பிரணவம் வெளிப்படும். அதன் மத்தியில் உள்ள உந்திக்கலமாகிய மவுனத்தில் இருந்து வெளிவரும் அழகிய சோதியே சிவம்.
277. தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.
278. ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.
குருநந்தி எனும் சிவன், மேலும் கீழுமாய் இருக்கும் நாத ஒளியையும், பிந்து ஒளியையும், இதுதான் எனக் குறிப்பாலுணர்ந்து, அதன் மத்தியில் உள்ள நீர்மண்டலமாகிய உந்திக்கமலத்திலிருந்து ஒளி வெளிப்படும் இடமே மவுனமெனச் சொன்னான்.
திருமந்திரம்:
"மேலொளி கீழதன் மேவிய மாருதம்
பாரொளி யங்கி பரந்தொளி யாகாசம்
நீரொளி செய்து நெடுவிசும் பொன்றிலும்
மேலொளி யைந்து மொருங்கொளி யாமே."
மேலொளி = ஆகாயம்.
மாருதம் = காற்று.
பார் ஒளி = மண்.
ஐம்பூதங்களில் மேலாக நிற்கும் ஒளி ஆகாயம். அதைத் தடவி வரும் ஒளிப்பொருள் காற்று. காற்றைச் சார்ந்து ஒளி வீசுவது தீ. எல்லா இடத்தும் பரந்துள்ளது நிலம். அதன்மேல் விளங்குவது நீர். மேற்கூறிய ஐந்து ஒளிகளும் ஒருங்கிணைந்து ஒறே ஒளியாகிய சிவவொளியாய்த் திகழ்கிறது.
279. அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.
முதலும் முடிவுமற்ற அருமைப்பொருளாம் கருத்தில் நினைவே ஞானச் சுடராம்.
280. இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.
இதுதான் முத்திக்கு வழியென ஏட்டில் வரைந்து பதியாகிய இறைவன் குரு (இருள்நீக்குபவன்)வை நம்கபாலக் குகையில் வைத்தான்; அதைப் பார்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 28. ஞானம் பிரியாமை (271-280)
Posted by ஞானவெட்டியான் at 4:24 PM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment