Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 27. ஞான நிலை (261-270)

ஞானக் குறள்
***************
3. தன்பால்
************
27. ஞான நிலை (261-270)

*****************************

261. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.


தற்புருடம் = பிந்துகலை;
மா = பெருமைபொருந்திய;
அஞ்சை = பஞ்சேந்திரியங்கள்;
உற்பனம் = தோன்றும்;
உரை = கலக்கிவை ( தயிர் எடுக்க உரை ஊற்றுதல்).

பிந்து கலையின் பெருமை பொருந்திய முகத்தில் பார்வையை மட்டும் வைத்து அதை நிறுத்தி, தோன்றும் பஞ்சேந்திரிய சக்திகளைக் கலக்கவை.

திருமந்திரம்:

"ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பலகோடி களத்தினா
லூழ்கொண்ட மந்திரந் தன்னா லொடுங்கே.”

சனவேதசத்தி = திரோதாயி.
ஊழ்கொண்ட மந்திரம் = அசபா மந்திரம்.

உயிர்களை நன்னெறிப்படுத்த உடன் உறைந்து நடத்துவிக்கும் மறைப்பாற்றலினிடத்து அவ்வாற்றல் வனப்பாற்றலாக மாறும்படி அவ்வுயிர்கள் அன்பு செய்தால், நெல்வித்து ஒன்று பல்லாயிரக் கணக்காகப் பெருகுதல்போல் மீண்டும் மீண்டும் வினைக்கீடாகப் பெருகிவரும் உடல்களின் எல்லை முடிவு எய்தும். திருவைந்தெழுத்தின் முதலெழுத்தாம் "சி"கரமே பேசாவெழுத்தாம். அதன்கண் உயிர் ஒடுங்குதல் முறையாம். இதுவே அசபையாம்.

“திறத்திறம் விந்து திகழு மகார
முறப்பற வேநினந் தோதுஞ் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாத
மறப்பற யோகிக் கறநெறி யாமே.”

உறப்பு = செறிவு.

விந்துவாகிய தூமாயையிலிருந்து தோன்றும் அகரமும், அதனுடன் செறிவறவே நினைந்து ஓதும் சகரமும் சேர்ந்ததே "அச"(அசபை). மீண்டும் மீண்டும் இடையறாது அவ்வொலியை மறப்பின்றி நினைவில் நிறுத்தி நிற்றலே அகத் தவம் செய்பவருக்கு அறநெறியாம்.

அண்டத்தில், சிவமுகங்கள் ஐந்து;
பிண்டத்திலும் ஐந்து;

1.தற்புருடம் – பிந்து கலையினுச்சி
2.ஈசானியம் – சூரியகலையுச்சி(ஈசானிய திக்கிலும்)
3.வாமனம் - சந்திர கலையிலும்
4.அகோரம் - அபானனுச்சியில்
5.சத்தியோசாதம் - நாதபிந்து சேருமிடத்தில்

262. தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.

பிந்துகலை ஊர்த்துவமுகத்துக்கு எழும்பும்போது அதனுச்சியில் நற்சேத்திரங்களும், அதன்மேல் பேரொளியுமுண்டு. கருத்தால் அதைக் காண்.

திருமந்திரம்:

"மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே."

மேலா நிலம் = தலை.
கோலால் = காலாம் காற்றால்.
குறி = ஞானாசிரியன் குறிப்பிட்டபடி.
மாலானது = இருளாம் மருளானது.
மாளும் = கட்டுப்படும்.

மேல் நிலமாம் தலையில் உதிக்கும் விந்துவையும் நாதத்தையும் காலால் நடத்திக் குறிக்குள்ளே சென்றால் ஊறும் அமுதத்தை உண்டு, பற்ற வேண்டியதைப் பற்றினால் இருளாகிய மருள் கட்டுக்குள் வரும்.

263. ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.


பிந்துகலையை ஊர்த்துவமுகத்துக்குக் கொண்டுசெல்லும் போது, திருவடிகளை ஒன்றோடொன்று கலக்கச்செய்து (சூரிய சந்திர கலைகளைக் கலந்து), இட பிங் கலைகளோடு வேறுபடாது கலந்து பிரணவ உச்சியில் கொண்டு சேர்.

திருமந்திரம்:

“விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய வங்கியி னாலே நயந்தெரித்
தந்தமில் பானு வதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.”

விண்டேன் இப்பொழுதே “வெட்டாத சக்கரமே திருவடி.”

வீசம் = வித்து.
பானுவதி கண்டம் = கதிரவன் இருக்குமிடம் - வலக்கண்(வலமூக்கு).
சந்திரன் சார்பு = திங்கள் இருக்குமிடம் - இடக்கண் (இடமூக்கு).

விந்துவாம் உயிர்வாழ் வித்துள்ள மூலத்தே விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள கதிரவன் மண்டிலத்துக்கு வலப்பால் நாடிவழி ஏற்றி, அதற்குமேல் நெஞ்சம் முதல் நெற்றிவரை உள்ள திங்கள் மண்டிலத்துக்கு இடப்பால் நாடிவழி ஏற்றித் திங்கள் மண்டிலத்தில் அடைக்கலம் புகத் தண்மையும் வெண்மையும் மிக்க மெய்யமுதம் கிட்டும்.

264. கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.


அக்கினியை கொம்பினால் கிளரும்போது, பொறி நட்சத்திரம்போல் கிளம்பும். அதுபோல, கொழுகொம்பானது பிரம்மத் தானத்தில் பொருந்தி இருக்கச் செய்யின் அக்கினிச் சுவாலை கொழுந்து விட்டெரியும். அப்பொழுது, பிந்துகலை நற்சேத்திர உருவங்களாகக் கருத்தில் தெரியும்.
“கொழுகொம்பு” - ஞானாசிரியன் கற்பிக்கும் முதல் தந்திரம்.

திருமந்திரம்:

“தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.”

பேரொளி = சிவ ஒளி.
தரகை கண்டது = நட்சத்திர வடிவான அக்கரம் காணப்பட்டது.

சக்கரம் நட்சத்திர வடிவாக அமைக்கப்பட்டது. அவ் விண்மீன்களுக்கு ஒளி கொடுத்துக்கொண்டு செழித்த சிவ ஒளி மேலாக நிற்கிறது. இந்த நட்சத்திரச் சக்கரத்தில் சந்திரன், சூரியன் வர நட்சத்திர வடிவான எழுத்து முறையாகக் காணப்பட்டது.

“நின்றிடு விந்துவென் றுள்ள வெழுத்தெலாம்
நின்றிடு நாதமு மோங்கு மெழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே.”

விந்து முதலாகக் கூறப்படும் குறியெழுத்துக்களெல்லாம் நாதம் உள்ளிருந்து ஒலிப்பிக்க ஒலிக்கும். அந்த அந்த மனைக்குரிய எழுத்துக்கள் வந்தால் அங்கே நிற்கும். அதன்பின் தரகை எனும் நாள்கள்(நற்சேத்திரங்களாம் நட்சத்திரங்கள்) நிற்கும். மூலமுதல் நிலைகள் ஆறுக்கும் மனைகள் இரண்டிரண்டாம்.

265. மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.


மறித்து - தடுத்து;
கொளுவிடு - சேர்த்துவிடு;
சீயை – பிந்துகலை;
சூரிய, சந்திர கலைகளின் கூட்டுறவால் ஏற்படும் அக்கினி மத்தியில் குறிவைத்து பிந்துகலையைப் பாய்ச்சு.

திருமந்திரம்:

"வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமு மண்டமும் பாரிப்பக்

காயவைம் பூதமுங் காரிய மாயையில்

ஆயிட விந்து வகம்புற மாகுமே."


காயஐம்பூதம் = ஆகாய முதலாகிய ஐம்பூதங்கள்.
காரிய மாயை = விந்துவின் விகாரமான அசுத்த மாயை.

பெருமையுடைய விந்துவின் ஆற்றலால் அண்டமும் அகண்டமும் ஆக்கப்பட்டன. ஆகாய முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயையாகிய விந்துவின் காரியம்; பால் தயிரானது போன்ற திரிபு. இதுவே தூமாயையின் கீழ்ப்பகுதியாகிய தூவாமாயை.

266. காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.


காலாகிய பிராணாபான வாயுக்களையும், தலையாகிய பிரணவ வுச்சியையும் கலந்து, அங்கு பிந்துகலையை இட்டால் மிகவும் நல்லது.

திருமந்திரம்:

"இருந்தனள் தன்முக மாறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை தோறுங்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுக மம்பே.”

ஈங்கு முகத்தில் ஆறொடு நாலாய், அதாவது (6+4=10) பத்தாய் (10=ய) இருக்கும் தானத்தையறிய வழிபிறக்கும்.
வாயு = உயிர்ப்பு.
அதோமுகம் = கீழ்முகம்.

திசை பத்து. அம்மையும் பத்து முகங்களுடன் வீற்றுள்ளாள். அம்மையின் உயிர்ப்பே ஆருயிர்க்குக் காற்றாய் வழங்குதலால் காற்றாய் எங்கும் பரவி இருந்தனள். அருள் ஒளி அத்திருமுகத்தில் ஒருங்கு திரண்டு பொலிந்து விளங்கிற்று. அவொளியின் ஆணையால் உயிர் அம்புபோல் விரைந்து இன்பம் பொழியும் கீழ்முகம் நோக்கி நடந்தது.

267. பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.


பொன்னாகிய நாதத்துடன் வெள்ளியாகிய பிந்து கலந்து பொருந்தினால் அதுவே சிவத்தின் திருவடியாகிய “ய” ஆகும்.
திருவடிகள் பொருந்த நாதமும் பிந்துவும் சேர்ந்து நாதபிந்துக்களாகும்.

திருமந்திரம்:

“அடிசார லாமண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.”

தூய நெறியில் வாழும் அடியார்கள் சிவத் திருவடி அடைவர். பண்டைப் பழவடியாராகிய முனிவர்கள் சிவத் திருவடி இரண்டையும் தம் முடிக்கு அணியாய் அணிந்தனர். வழிவழியாக இன்ப நிறைவினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்ப வெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வர்களின் தூநெறியாம்.

268. நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.


நின்றவெழுத்து = நிறையவும் குறையவுமிலாது எப்பொழுதும் பன்னிரண்டு கலைகளுடன் கூடிய சூரிய கலை;

நில்லாவெழுத்து = வளர்ந்து தேய்ந்து நின்ற சந்திர கலை;

நின்றவெழுத்தும் நில்லாவெழுத்தும் கூடினால், இரண்டும் ஒப்பிலாத ஒன்றாகிய சிவமாகிவிடும்.

269. பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.


ஒலியெழும்பாத (பேசாவெழுத்து) பிரணவத்துடன், நாவெழுந்து ஒலிக்கும் சபசத்தத்துடன் பொருந்த, நந்தியாகிய (நம்+தீ) சிவம் வெளியுற்று, குருவாய் நின்று விளக்கும்.

திருமந்திரம்:

"சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத்
தொத்தறி கின்ற விடமும் அறிகிலர்

மெய்த்தறி கின்ற விடமறி வாளர்க்கு

அத்தன் இருப்பிடமும் அவ்விடந் தானே."


கண், நாக்கு, மூக்கு, செவி, மெய் என்னும் அறிதற் கருவிகளைந்தும் இங்கே சத்தமெனப்பட்டது. அந்த ஓசையினை வெளிப்படுத்தத் துணை புரியும் மனமும், அம் மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து சிவனருளால் இயங்குகின்றன எனும் உண்மையினை அறிய வல்லார்க்கு அவ்வறிவாகவே சிவனிருப்பான்.

270. அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.


பிந்துவிலிருந்து கலையைப் பிரித்து ஓங்காரவுச்சிக்குள் ஊசித்தமர் வழியாகச் செலுத்திவிட்டால், விந்தடங்கி, ஏமன் வருங்காலை, சுத்த சீவப் பிரயாணம் நடைபெறும். (நல்ல சைவச் சாவு = விந்தொழுகாச் சாவு). இல்லையெனில், விந்தொழுகி, நாறி, நாற்றச் சாவு வரும்; அப்போது, மற்றவர்கள், “யோனியாசையால் விந்தொழுகிச் செத்தான்” என்று பழி சுமத்துவர்.

திருமந்திரம்:

"விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தாற் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே."

நந்திய = மிகுந்த.
அழிவு = விரயம் (வெளிச்செல்லல்).

எண்பது துளிச் செந்நீர்(அரத்தம்) வெண்ணீரின் ஒரு துளியாம். எண்பது வெண்ணீர்த் துளியே ஒரு முழுத்துளி விந்துவாம். இங்ஙனம் துளித்துளியாய்க் கூடி விளையும் விளைவும், விளந்து முற்றி எய்தும் பயனும், உணந்து அடங்கல் வேண்டும். விந்து விரயம் தடுக்கப்படில் நீண்ட காலம் வாழலாம். அவ்வாறின்றி கலவியின்பமே பெரிதென நினைந்து வாழ்பவரின் வாழ்நாள் குறைவே. விந்து அடங்கப் பேராக்கம் உண்டாகும். இல்லையேல் பெரும்போக்கு ஏற்படும். நாதத்தால் ஏற்படும் விந்துவின் சிறப்பை உணர்வோருக்கு விந்து அடங்கி வெற்றி உண்டாகும்.

"வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தினில் வித்தை விதற வுணர்வரேல்
மத்தி லிருந்ததோர் மாங்கனி யாமே.”

விது + அற = விதற.
விது = அசைவாம் சலனம்.
மாங்கனி = சிவம்.

உலகியலில் நிலத்தில் வித்து போட்டால்தான் விளவு. வித்து இடுவோருக்கே சிறப்புடைய அறிவு உண்டு. அதுபோலக் கரு இடுவாருக்கும் அனத்தும் உள்ளன. விந்து மயையாம் தூமாயையிலிருந்து கருமுதலாம் விந்து உண்டாகும். அவ்விந்துவிலிருந்து கிட்டும் உயிர் வித்தை அசைவின்றி இருந்து உணர்ந்தால் தயிர் கடைய உதவும் மத்து போல விளங்கித் தோன்றும். அம்மத்தின் உள்ளே சிவன்(மாங்கனி) தோன்றுவான்.

"விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே."

வித்து = காரணம்.
மாளுதல் = கட்டுப்படுதல்.
கனல்மூல = மூலக்கனல்.

விந்துவும் நாதமும் நடுநாடி வழிச்சென்று உடலில் சார மூலத்தே எழும் கனல் மயிர்த்துளை தோறும் நிலைபெறும்படி நெஞ்சம் பயிற்சியால் உலகியலில் உழலாது; இடையறாது "சிவசிவ" என எண்ணிக் கொண்டிருப்பவர் சிவமாவர். இம்முறையால் விந்து தூய்மையாகிக் கட்டுக்குள் வரும். இதுவே உடல் நிலைக்கு வித்தாகும்.

0 Comments: