Sunday, December 30, 2007

திருவாசகம் - 1.நமச்சிவாய வாஅழ்க


திருவாசகம்
****************
1.சிவபுராணம்
********************
1.நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க

"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவய". தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல், சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

திருமந்திரம்
*************
"நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னந்தமுந்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமஞ் சிவநட மாகுமே."

"நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானன்றே."

நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும். மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே (உள்ளுக்கு உள்ளே) ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

நாதத்தின் தலைவன் நாதன். அப்படிப்பட்ட நாதனின் தாள் வாழ்க.
இது பக்தி மார்க்கத்தில் உள்ளவருக்கு.

இதன் ஞான நிலை:
********************
சிவவாக்கியர்
**************
"நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!"

இத்துடன் இணைத்திருக்கும் படம் காண்க.


இங்கு தாள் என்பது சிவனின் மலர்ப்பாதம். நம் உடலில் மலர் போன்ற பகுதி நம் கண்களே. அதுவே இறையின் மலர்ப்பாதங்கள். இவைகளைப்(சூரியகலை, சந்திரகலை) பயன்படுத்தி, அக்கினி கலையுடன் கூட "நமசிவய" எனும் மந்திரம் நம்முடலினுள்ளே கேட்கும்.

4 Comments:

Anonymous said...

நல்ல முயற்சி ஐயா. தொடர்ந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.

Anonymous said...

நல்ல பதிவு

நன்றி

Anonymous said...

பதிவும் அருமை
படமும் அருமை

Anonymous said...

அன்புத் தங்கையே,அன்பு சிவபாலன்,
நன்றி.