திருவாசகம்
*************
2. இமைப்பொழுது மென்னெஞ்சி ளீங்காதான் றாள்வாழ்க
(இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க)
ஒரு கணமும் என் கருத்திலிருந்து பிரியாமல் என் கருத்தினுள்ளே ஐக்கியமாயிருக்கும் அவன் திருவடி வாழ்க.
ஆன்மா எத்தனை பிறவி எடுப்பினும், அவைகள் கல்,புல் முதல் பிரம்மதேவன் வரை எத்தகைமைத்தாயினும், அவைகள் எல்லாவற்றிலும் இறைவன் உள்ளிருக்கிறான்.
அவன் உயிரில் உயிராய், உணர்வில் உணர்வாய், கருத்தில் கருவாய் இருக்கிறான்.
இறைவனை நம்முள்ளே மனதில் உள்ளான் எனும் நினைவு வரும் வரை மனிதன் விழிக்கவேயில்லை. பல பிறவிகளில் மனிதன் இறைவனை வெளியுலகாம் அண்டத்தில் தேடித் தேடி அலைந்தான். இறைவனின்
உறைவிடங்கள் எனக் கூறப்படும் கைலாயம், வைகுந்தம் ஆகியவற்றைப் புறவுலகில் தேடி அலுத்து, அல்லலுற்று, வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டுப், பின்னர்தான் தான் தேடும் பரம்பொருள் தன்னுள்ளேதான் உள்ளது
என அறிகிறான்.
சிவவாக்கியர்
*************
"ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே."
சீவனாம் சிவன் தன்னுள்ளே ஓடி ஓடித் தன்னுள் கலந்துள்ள சோதியாய் உள்ளது. அதை நாடி நாடிக் கண்டுகொள்ள இயலாது. வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள் (மனுக்கள்) கோடான கோடியாம்.
இன்னும்எளிதாய்ச் சொல்ல:
உடலின் உள்ளிருக்கும் ஏக இறையை இருக்குமிடத்தைவிட்டு உடலுக்கு வெளியே ஓடியோடி யோடியோடித் தேடி, கண்டவர் சொல்லுவனவற்றை நம்பி அதையே நாடிநாடிக் காலத்தைகழித்துக் கிட்டவில்லையே என வாடிவாடி
மாண்டவர்கள் எண்ணிறந்த கோடியே.
ஆகவே பலப்பல அண்டங்களில் விரிந்து பரந்து வியாபித்திருக்கும் பரிபூரணத்தை நம் உடலுக்கு உள்ளேயே தேடிக் கண்டுகொள்ளல்
எளிதாம்.
எண்சாண் உடலுக்கு சிரமே பிரதானம்.
ஆகவே உடலில் தேடுவதைவிட தலையில் தேடுவது இன்னுமெளிதாம்.
"என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லவரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!"
இப்பாடலின் கரு ஏக இறையைக் குறிக்கிறது. ஏக இறைதான் ஆதி. விந்துவே ஆதி.
இவ்விடத்து, பீர் முகம்மது அவுலியாவின் ஆநந்தக் களிப்பின் ஒரு பாடலை நினைவு கூருதல் அவசியம்.
"இவ்வென் றெழுத்ததைப் பற்றி - இரு
வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக்
கொல்லன் றுத்திகொண் டூதி - நல்ல
கோவலமாய் மூலக் குகையை யெழுப்பி
வில்லின்மேல் நாணம்பை யேற்றி - வெகு
வேகமா யொன்பது வாச லடைத்து
அல்ஹம்தி லொன்றாகி நின்ற - நந்தம்
ஆதியை நன்றாகக் கண்டு கொண்டேனே."
ஆதி என்னும் சொல்லுக்கு ஒலியியலின்படி ஆன்மத் தீ என்னும் பொருள் வரும்.
ஆ+தீ=ஆதீ. ஆதீ தான் ஆதியாயிற்றென்பர்.
என்னுள்ளே இருந்த இவ்வான்மத் தீயை நான் அறியவில்லை. அதை நான்
அறிந்துகொண்டபின் அதை யாரும் காணமுடியாது.ஏனெனில் அதை யாரும்
காணவியலாது.
"கண்ணால் காண்பதெல்லாம் மாயையே."
ஆன்மத்தீ மாயை அல்ல.
ஆகவே,என் மெய்க்குள் நான் இருந்து, இருந்து, தவமிருந்து, மெய்த்தவமிருந்து உணர்ந்து கொண்டேனே.
நாம் அடையவேண்டிய நான்கு நிலைகள்:
1. அறிவு
2. உணர்வு
3. நினைவு
4. கருத்து
இருந்து, இருந்து என சிவவாக்கியர் சொன்னது ஆன்மத்தீயை கருத்தில் நிறுத்தி, நிறுத்தி, அளவிலாவின்பம் பெற்று, பரிபூரணமாம் இறையுடன் கலந்தேனே என்றுதான்.
Sunday, December 30, 2007
திருவாசகம் - 2. இமைப்பொழுது மென்னெஞ்சி
Posted by ஞானவெட்டியான் at 5:52 PM
Labels: திருவாசகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Thank you so much for giving us an exceptional explanation of Thiruvasakam. It's extremely hard for people like myself, new generation expatriate tamils, to get the meaning of ancient Tamil literature. Once again thank you.
regards,
Jeevithan
Canada
Greatly appreciate you taking the time to clearly translate Thiruvasakam for us. It is very difficult for the younger generation living outside of the Indian sub continent to learn and understand ancient Tamil literature.
Once again thank you :)
Post a Comment