ஞானக் குறள்
**************
1. வீட்டுனெறிப்பால்
*********************
3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை (21-30)
****************************************************
21. கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
முற்றுடம்பா லாய வுணர்வு.
ஊன்றிப்பார்ப்பதனால் (perception) உண்டாகும் சூக்கும உடலில் உண்டாகும் அறிவால் உருவாகும் உணர்வினால் எல்லாவற்றையும் கற்கலாம், கேட்கலாம், அறிவுக்கண்ணால் பார்க்கலாம். இச்சருக்கத்தில், உடலென்பது சூக்கும உடலேயாகும். இத்தகுதியை அடைந்தவர்கள் மறைகளில் இருக்கும் சாற்றிறப் பூட்டுக்களை உடைத்துப் பொருள் காணமுடியும், மருமங்களையும் அறியமுடியும்.
திருமூலர் :
“ஒண்ணா நயனத்திலுற்ற வொளி தன்னை
கண்ணாரப் பார்த்து கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட வோடிப்
பண்ணாம நின்றது பார்க்கலுமாமே.”
ஒண்ணா நயனம் = ஞானக் கண். விண்ணாறு = ஆநந்தக் கண்ணீர்.
பண்ணாமல் நின்றது = தானாகிய தூய சிவம்.
பார்க்கலும் = உணர்த்த உணர்ந்து வழிபடுதல்.
புருவ நடுவினை ஊசிப்பார்வையால் உற்று நோக்கி, முக்கலைகளையும் கலந்து நினைவினில் நிற்க, யோக ஊற்று திறந்து யோகக் கண்ணீராம் ஆநந்தக் கண்ணீர் வெளி வந்து ஓடும். மெய்யுணர்வு வெளிப்படும். தூய சிவமாகிய சீவனைக் கண்டு வழிபட இயலும்.
“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)
லுறுப்புச் சிவக்கும் ரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.”
நெறிப்பட = முறைப்படி.
உள்ளிருந்து வெளிவந்து மீண்டும் உள்ளே சென்று ஊடாடித் திரியும் உயிர்ப்பை மூச்சுப் பயிற்சியால் தடுத்து உள்நிறுத்தி, அருளால் தூய்மையாக்கி வாழவல்லார்க்கு உடல் பொன்மேனியாகும். உயிருக்கு உயிராய் உடலில் நின்றாடும். பின்னல் சடைப் பெம்மானும் நிலைபெற்று நிற்பன். நிலைபெற்று நிற்பதால் உயிர் அழியாது; உடலும் அழியாது.
ஓளவை கூறிய பிண்டமும், நெறிப்பட வுள்ளே எனத் திருமூலர் கூறியதும் பிரிவைக் காட்டும் இரு கண்களே. இதைவிடத் தெளிவாகப் பிரும்ம இரகசியத்தை வெளிப்படுத்த இயலாது.
இன்னும், மாணிக்கவாசகப் பெம்மான் :
“சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினைநின் றிருப்பாதப்
போதுக்காக்கி
வந்தனையு மமலர்க்கே யாக்கிவாக்குள்(ஆதத்துடைய - சூரத்துள்) மணி வார்த்தைக் காக்கியும் புலன்களார
வந்தனை யாடகொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடனையமேனித் தனிச் சுடரே யிரண்டுமிலிதனிய னேற்க்கே.”
ஈண்டு, இரண்டுமிலை யென்பதை இம்மெய், மறுமெய் எனவும், தூல சூக்குமமெனவும் கொள்ளலாமென்பர் ஆன்றோர்.
ஞானக் குறள்:
பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.
கபாலக்குகையில் உள்ள கண்களுக்குள்ளே (பிண்டதினுள்ளே) உள்ள சீவனைக் கண்டு அசையவிடாது கட்டி அதனுள் நிலைத்துப் பூசிப்பதே சிறந்த வழி. சிவமாகிய சீவன் தோன்றி மறையும் குணமுள்ளவன் என்பதால், அசையவிடாது கட்ட வேண்டுமென்பதை “பேராதிறைவனை” என்றார்.
22. வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி னாய வொளி.
தூல உடல் எப்படி உள்ளதோ, அதைப் போல சூக்கும உடலைக் கண்டால் எப்படியிருக்கும் என்றால், வெள்ளியாகிய சுக்கிலத்தின் நிறத்தையும் நாதத்தின் பொன் நிறத்தையும் பொருந்தி இருக்கும்.
23.சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது.
சூக்கும உடலானது, மனம் நினைக்கும் இடங்களுக்குச் சென்று, அவ்விடங்களில் உள்ளவற்றைக் கிரகித்துக் கொண்டு தூலத்திற்குத் திரும்பி வந்து திரிந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட சூக்கும உடல் தூல உடலைப்போல் அழிவதில்லை.
24. வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.
சூக்கும உடலானது வேண்டிய பலனை அடைந்து, ஆனந்தித்து மகிழ்வதோடு, கனலின் வெப்பத்தையும் ஒளியும் கூடிய ஒப்புயர்வு இல்லாத ஓங்காரத்தில் (பிரணவத்தில்) நிலைத்து நிற்கும் படியான பலனைக் காட்டும் (வெளிப்படுத்தும்). ஓங்காரத்தின் பயனாவது எல்லாத் தத்துவங்களையும் (உண்மை, (உள் + மெய்)) காட்டி இரவு பகலற்ற சிதாகாயத்தில் (சிதா+காயம்) அணைந்து நீங்காமல் நிலைத்து நிற்பதே.
25. அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு.
(ஆய்ந்து - ஆராய்ச்சியினால்; ஆய - உண்டாகிய;)
ஆராய்ச்சியினால் உண்டாகிய தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தூல உடலின் தொடர்பாகிய சூக்கும உடலானது, தொல்லைகளுடன் கூடிய இப்பிறவிப் பிணியை அகற்றும் (ஒழி்க்க முடியாது).
26. நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.
தூல உடலானது, நல்வினையையும் தீவினையையும் செய்து அதற்குறிய பலன்களை அடைந்து திரிந்துகொண்டிருக்கும். சூக்கும உடலோ ஞான காரியங்கள் செய்வதற்கு விதையாக நிற்கும்.
27. உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ள வுடம்பாகி விடும்.
தூல உடலிலுள்ள ஒன்பது வாயில்கள் அறிவின் வயப்படாததாலும், சூக்கும உடலின் ஒன்பது சூக்கும வாயில்கள் அறிவின் வழியே செல்வதாலும், தூல உடல் செயலற்ற நிழலுடம்பாகிவிடும். தூல உடலிலுள்ள ஒன்பது வாயில்கள் வேறு; சூக்கும உடலின் சூக்கும வாயில்கள் வேறு.
28. பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு.
எல்லாப் பொய்கட்கும் ஆதாரமாயுள்ள தூல உடலுக்குள் இருக்கும் சூக்கும உடல் மெய்க்கு ஒரு வித்தாக உள்ளது. ஞானவினைக்கு, ஐம்புலன்கள் ஆசையற்று நின்று சூக்கும உடலையடையும். தூல உடலில் உள்ள ஐம்புலன்கள் ஞானத்தோடு ஒவ்வாது தன் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப புரட்சி செய்யும். ஆகையால் "பொய்க்கெல்லாம் பாசனம்" என்றார்.
29. வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது.
ஆயுவு - ஆயுள். உடலிலுள்ள உயிரின் இயக்கத்தினால் ஏற்பட்ட சீவவாயுவுவே ஆயுள் முடிவதற்கு ஆதாரமாயுள்ளது. சீவவாயுவுக்கு ஆயுளை முடிப்பதற்கு அதிகாரம் உண்டானதற்குக் காரணம் அசைவே(சலனம்).
30. ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.
குருபிரான் சுட்டிக்காட்டும் (சூக்கும) வாயில்கள் ஒன்பதையும் (நவத்துவாரம்) அடைத்தால் ஐம்பது பீசங்களோடு ஐம்பத்தி ஒன்றாகச் சிவன் இருப்பான்.
இவ்வைம்பத்தொன்றுமே, சிதம்பர இரகசியமாகும்.
"ஈறுசெய் மூலமதில் நாலதாகும் எண்ணரிய லிங்கத்தே ஆறதாகும்
கூறியதோர் ஆலடியில் பத்ததாகும் குறிப்புடைய முக்கோணத்தில் - பனிரெண்டதாகும்
பேரரிய காலதனில் பதினாறதாகும் பேசரிய வாயதனில் ரெண்டதாகும்
மாரிலாக் குருபதத்தே ஒன்றதாகும் மன்னிய சீரட்சரங்க ளன்பத்தொன்றே
குருபதத்தி லொன்றென்பதே பரமசிவமாகும்."
(நூலாதாரம் தெரியவில்லை)
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை (21-30)
Posted by ஞானவெட்டியான் at 6:38 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
சீவனைக்கண்டு அசையாதுக் கட்டி,
அய்யா இதெல்லாம் சாத்தியமா இந்நடைமுறை உலகில்!!
அன்பு நடேசன்,
இங்கு சீவனை அசையாது கட்டி என்பது “மனதை நிலை நிறுத்தி” எனப் பொருள். மனச் சலனம் நின்றால் சீவனும் குத்தி நிற்குமே!
ஆமாம் ஐயா. மூச்சினை கவனிக்க மனச் சலனங்கள் கொஞ்சம் நிற்பதைக் கவனித்திருக்கிறேன். என்ன தொடக்க நிலை என்பதால் சிறிது நேரத்தில் தூக்கமும் வந்துவிடுகிறது. தொடர்ந்து பயிலவேண்டும்.
அன்பு குமரன்,
அதுதான் வழி. விடாது இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். இறுதி வெற்றி நமக்கே!
ஐயா !
படிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த இயந்திர வாழ்வில் ,தொடர்ந்து ;தாக்குப் பிடிப்பது வெகு சிரமமாக உள்ளது.இவை ஞானிகளுக்கு மாத்திரமே சாத்தியப் படுமோ!!!!
யோகன்
பாரிஸ்
அன்பு யோகன்,
//படிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த இயந்திர வாழ்வில் ,தொடர்ந்து ;தாக்குப் பிடிப்பது வெகு சிரமமாக உள்ளது.இவை ஞானிகளுக்கு மாத்திரமே சாத்தியப் படுமோ!!!!//
முதலில் ஆரம்பியுங்கள். ஒரு நாளைக்கு 5 மணித்தியாலம் முயலுங்கள். இயன்றவரை காலத்தை அதிகப் படுத்த முயலுங்கள். ஞானிகளும் மனிதனாய் இருந்து இந்த ஞானவினை செய்துதான் ஞானியானார்கள் என்பதை மறவாதீர்கள்.
நன்கு குறளோவியம் படைக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!!
அன்பு வெளிகண்ட நாதர்,
நன்றி.
dear sir,
wonderful!!
அன்பு நடேசன்,
மிக்க நன்றி.
வாங்க வாங்க! துணைவியார் நலமா ? அலுவகத்தில் முதலில் உங்கள் பதிவைப் பார்த்தபின் தான் மற்ற வேலையெல்லாம். பள்ளிகளில் இறைவணக்கம் போல.
அன்பு மணியன்,
70 விழுக்காடு பரவாயில்லை. மருந்துண்டபின் தான் குணம் தெரியும்.
நன்றி.
ஐயா, இரண்டாவதாய் கொடுத்திருக்கும் பாட்டுக்கும் பொருள் சொல்லியிருக்கலாம். ஆங்காங்கே புரிந்த மாதிரி இருக்கிறது. ஆனால் முழுதுமாய் புரியவில்லை.
விளக்கம் பின்னர் வரும்
Post a Comment