ஞானக் குறள்
***************
1. வீட்டுனெறிப்பால்
**********************
2. உடம்பின் பயன் (11-20)
***************************
11. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.
இந்த மானிட உடலைப் பெற்றது, இதற்குள் இறைவனைக் காண்பதற்கேயாம்.
12. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார்.
அறிவுடையவர்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை (இவ்வுடலில்) உணர்வதே இவ்வுடல் எடுத்ததின் பயன் என்ற் அறிவர்.
திருமந்திரம்:
"உணர்வு மவனே யுயிரு மவனே
புணர்வு மவனே புலவி யவனே
யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான்
துணரின் மலர்க்கந்தந் துன்னி நின்றானே."
புலவி = பிணக்கு. துணர் = கொத்து.
இணரும் = இதயத்தில் கலந்திருக்கும்.
சிவனும், அவனின் அடிமையாம் உயிரும், மலரும் மணமும் போல இருக்கும். அதனால், உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே. உள்ளத் தாமரையாகிய பூங்கொத்தில் இடையறாது கலந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தாலன்றி, எழுந்து மொழிவதாகிய சொல்லால் கூற முன்னிலையாகிய எண்ணத்தால் எண்ணவும் ஆகான்.
பாம்பாட்டிச் சித்தர்:
**********************
அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!
உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!
13. ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்.
தரும் - இக பரத்தைத் தரும்;
சங்கரனை - தீமைகளையும், அல்லன என்று ஒதுக்கப்பட்ட, கூடாதவைகளையும் அழிக்கும் அரனை;
ஒரு பயன் - ஒப்பற்ற தனிப்பெரும் பயன்.
"சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி" என்றும் ஆன்றோர்கள் கூறியிருப்பதால் தேகத்திலுறையும் (மெய்யில்+உறையும்) தெய்வத்தை ஆதியாகிய விந்துநாதமாகிய ஒலியால் உணர்ந்து அறிவதே மனுவுக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற பயன்.
திருமந்திரம்:
"நாதமுடிவிலே நல்லாளிருப்பது
நாதமுடிவிலே நல்யோகமிருப்பது
நாதமுடிவிலே நல்ஞானமிருப்பது
நாதமுடிவிலே நஞ்சுண்ட கண்டனே"
ஓசைமுடியும் இடமே திருவருள் வெளிப்படும் இடம்.
அதுவே அகத்தவம்.
அத்தவப்பேறே திருவடி உணர்வு.
அங்கேதிருநீலகண்டன் வெளிப்படுவான்.
"சத்தியார்கோயி லிடவலஞ்சாதித்தான்
மத்தியானத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும்
சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே."
சத்தியார்கோயில் = உடல்.
மத்தியானம் = மத்தியதானம்.
வாத்தியம் =நாதம்.
உடலாகிய கோயிலில் உயிர்ப்பை வலமூக்கின் வழிநிறுத்தினால் புருவநடுவாம் பரவெளியில் நாதமாகிய ஒலியினைக் கேட்கலாம். "தித்தித்தா" எனும் தாளத்திற்கேற்பக் கூத்தபிரான் வெளிப்படுவான். நந்திமீது ஆணை. இதுவே சத்தியம்.
14. பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.
(தூ - பரிசுத்தமாகிய; நெறிக்கண் - வழியின் மூலமாக; துறப்பதாம் - மும்மலங்களாகிய, ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றிலிருந்து நீங்கி இருத்தலாகும்)
பரிசுத்த வழியில் சென்று எல்லாவகையான இச்சைகளிலிருந்தும் நீங்கி இருத்தலே (வெறுத்து ஒதுக்குவதே) பிறப்பினால் பெற்ற பயன்.
"துறவு" என்பது மும்மலங்களிலிருந்தும், இகபர போகங்களில் மனத்தை அலையவொட்டாது, எல்லா வகையான இச்சைகளிலிருந்தும் நீங்கி இருத்தலே.
"ஒகானூ பீஹி மினுஸ் ஸாஹிதீன்"(புனித குர்-ஆன் -12-12)
அவர்கள் சாதனையால் (அல்லாவையன்றி ஏனையவைகளை) வெறுத்துவிட்டார்கள். உலகத்தையும் - அதன் போகங்களையும் (தவாபு), சுவர்க்கத்தையும்,அதன் சுகங்களையும் (நிகுமத்து) நினைத்தாலே அசுத்தம் (முழுக்கு) உண்டாகிவிடும்.
15. உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம்.
(உன்னியது - வெளிப்படுதல்)
ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களின் மூலமாக ஏற்படும் செயல்களினாலேயே உடலில் ஓங்காரமானது (அறிவு) ஏற்படும். உடலில்லையேல் உணர்வில்லை.
ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள்)
************************************
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்கள்.
இவற்றை, தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம், சோந்திரம் என்பர்.
கர்மேந்திரியங்கள் (தொழில் உறுப்புக்கள்)
*******************************************
கைகால், வாய், எருவாய், கருவாய்.
இவற்றை, பாணி பாதம், வாக்கு, பாயுரு, உபத்தம் என்பர்.
16. மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
(கொள்கை - கட்டுப்பாடு)
மூல மலங்களாகிய (அல்லன - விலக்கப்பட்டவை) அழுக்குகளை நீக்கும் கட்டுப்பாட்டை மனத்தில் அடைந்து விட்டால், எல்லாம் வல்ல ஈசனை உடம்பே சுட்டிக் காட்டிவிடும்.
17. ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு.
(நேசத்தாலாய - ஞானேந்திரிய, கர்மேந்திரிய ஒற்றுமைகளினால் உண்டாகிய; உணர்வுகள் - அறிவும் அறிவின் தொடர்புடையவைகளும்;)
ஞானேந்திரிய, கர்மேந்திரிய ஒற்றுமைகளினால் உண்டாகிய உடல், ஒலியால் (சப தபங்களால் உண்டாக்கும் ஒலி அலைகளினால்) அறிவு முதலிய உருவம் இல்லாதவைகளை(அரூபங்கள)ப் பார்த்துணரும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.
ஞானேந்திரியங்கள் (ஐம்புலன்கள்)
************************************
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்கள்.
இவற்றை, தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம், சோந்திரம் என்பர்.
கர்மேந்திரியங்கள் (தொழில் உறுப்புக்கள்)
*******************************************
கைகால், வாய், எருவாய், கருவாய்.
இவற்றை, பாணி பாதம், வாக்கு, பாயுரு, உபத்தம் என்பர்.
18. உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு.
(அயிர்ப்பு - ஐயம்)
ஐயமாகிய சந்தேகம் தீர்ந்தால் சன் (ஒளிபெற்ற) + தேகம் கிடைக்கும். உடலிலுள்ள ஐம்புலன்கள், மூலாக்கினி, சூரிய சந்திரன், பி(வி)ந்துநாதம், இவைகளின் கலைகளை எழுப்பி, சீவனிடத்தில் சமர்ப்பித்தால், ஆன்ம ஒளியாகிய (சீவப்பிரகாசத்தோடு) கலந்து, அறிவுக்குப் பலத்தை கொடுக்கும்.
கலைகளை எழுப்ப, பார்வையையும் மனத்தையும் ஒன்றுகூட்டி இடைவிடாது உச்சியில் உள்ள இலக்கை நோக்கி மேலே காணுதல்( நாடுதல்) வேண்டும்.
ஆதி - ஆதீ - ஆ+தீ - ஆன்மாவாகிய தீ - ஆன்ம அக்கினி.
ஐயத்திற்கிடமின்றி ஆதியை நாட உயிருக்குறுதி - இதுவே உடலின் பயன்.
19. உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு.
ஈசனை உறுதிபடத் தேடுவதற்காகவே உடல் உனக்குத் தரப்பட்டுள்ளது.
திருமந்திரம்:
"உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்து
அடலார் சமாதி இதயத்த தாக
நடமாடிய குகை நாடிய யோகி
மிடையாகா வண்ணம்சா திக்குமெல் லவ்வே."
இடறு = இல்லாமல்
உடல் என்னும் குகையில், உணர்வு என்னும் ஆசனத்தில் (இருக்கை) மல முதலியவற்றை வெல்லும் திண்மை(பக்குவம்) வாய்ந்த நிட்டை கூடும் நிலையமாக நெஞ்சம் விளங்கும். இந்த நெஞ்சத்தை இடப்பாகத்தில் கொண்டு ஈசன் நடனமாடுகிறான். யோகியர் அவனையே நாடி நிற்கின்றனர். இடையூறு சிறிதும் நேராது நிட்டையினை உடலில் நிலைபெறச் செய்கின்றனர்.
20. அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
ஆண்களுக்கு அன்னத்தினால் விந்தும், பெண்களுக்குச் சுரோணிதமும் உண்டாகிறது. இவையிரண்டும் கூடித்தான் இன்னுமொரு உடல் எடுக்கிறது. ஒரு சவத்திலிருந்து இன்னுமொரு சவம் வெளிவருதலால் அதற்குப் பெயர் "பிர+சவம்".
இவைகளையுண்டாக்கியது (நாதகலைகள்) அன்னமே. இப்படிப்பட்ட உடல் செம்மை (செம்+மெய்) ஆனால், அது நம் முன்னோனாகிய இறைவனக் காட்டிவிடும்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 2. உடம்பின் பயன் (11-20)
Posted by ஞானவெட்டியான் at 6:14 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
27 Comments:
உண்மை தான் ஐயா. அது தான் உடல் பெற்ற பயனும் நோக்கமும். பாடலி உடம்பினைப் பெற்ற பயன் என்று சொல்லியிருக்கிறார்கள்; நீங்கள் மானிட உடலைப் பெற்ற பயன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உள்ளுரைப் பொருளா இல்லை வேறு ஏதாவது விளக்கம் உண்டா?
ஆமாம் குமரன். மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். பாம்பும், ஆமையும் கூட வாசி(யோக)ப் பயிற்சி செய்கிறது.
ஆயினும் மனிதன் சிந்திக்கத் தெரிந்த ஒரு காரணத்தாலேயே, உன்னத பிறப்பாகிறான். அவன் வாசிப்பயிற்ச்சி செய்தால் பலன் எளிதில் கிட்டும்.
"11. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்."
அருமையான கருத்துக்கள் ஐயா.
அன்பு குமரன்,
மிக்க நன்றி.
//உருவிலியாயும், உருவமுடையதாயும், முடிவு ஆகவும், இருளாயும், ஒளியாயும், மேன்மையுடையதாயும், குருவாயும், சீவனாயும், அனைத்திலும் கலந்து, பொருந்தியுள்ள மேன்மையான பொருளைப் போற்றி ஆடு பாம்பே!//
இதைத்தான் தத்வம் அஸி, நீயே அது என்ற பொருளில் அத்வைத தத்துவம் என்று சொல்லுகிறார்கள்,
அன்பு சம்மட்டி,
ஆமாம்.
அய்யா மிக்கநன்றி.இன்னும் ஞான்வேள்வியையே படித்துமுடிக்கவில்லை!அதற்குள் ஞானக் குறளா?கொஞ்சம் அவகாசம் தாருங்கள்!!
படித்து நிறைய தெரிந்து கொண்டேன் ஐயா.
மிக்க நன்றி குமரன்.
எத்தனையோ அரியப் பொக்கிஷஙளை நமது முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளனர்.நந்தி மீது ஆணையிட்டுக் கூறுவதைப் படித்தபோது மெய் சிலிர்த்தது!!
இப்பொழுதாவது விழித்துக்கொண்டு எழுந்தால் சரி.
"14. பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று."
தங்களுக்கு குர்ஆன், பைபில் இவைகளை படித்துள்ளீர்களா? நன்றாக எழுதுகிறீரகளே
இன்றுதான் உங்கள் ஞானக்குறளைக் காணும் பேறு கிடைத்தது. மிகவும் உவகையுற்றேன். இதுவரை இந்நூலைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
உங்கள் எளிய விளக்கங்களும் அருமை.வளர்க உங்கள் பணியும் எழுத்தும்.
அன்பு மணியன்,
வழக்கிழந்த நூல்களைப் பலருக்கு அறிமுகப் படுத்தவே இந்தப் பாடு.
என்னாலியன்ற பணி.
வாழ்த்துக்கு நன்றி.
இதைத்தான் “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்று சொல்வார்களோ!
ஞானவெட்டியான் ஐயா “தன்னந்தனி நின்றது தானறிய” என்ற வரிக்களுக்கும் இந்தப் பொருளுக்கும் தொடர்புண்டா?
அன்பு இராகவன்,
//”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்” //
இக்குறள் துறவு பற்றிக் குறிப்பதாகும்.எதிலிருந்து(எந்தப் பற்றிலிருந்து) எதிலிருந்து மனத்தால் நீங்குகிறானோ, அதிலிருந்து, அதிலிருந்து(அந்தப் பற்றினால் விளையும்) துன்பம் அடைய மாட்டான். ஆசைகளைவிட்டு மனத்தால் நீங்குபவனே, அந்த ஆசைகளால் வரும் துன்பங்களை அடைய மாட்டான்.
//”தன்னந்தனி நின்றது தானறிய”//
தன்னந்தனியாக நிற்பது உறவின்றி, உற்றாரின்றி, நண்பரின்றி - இது அண்டத்தில்.
தன்னந்தனியாக நிற்பது ஆன்மா ஒன்றே! - இது பிண்டத்தில்.
உறவின்றி, உற்றாரின்றி, நண்பரின்றி தன்னந்தனியாக நிற்பது விசனம்(கவலை). அப்போது தன் நிலை என்ன? என எண்ணுவது அண்டத்தில்.
பிண்டத்தில் தன்னந்தனியாக நிற்கும் ஆன்மாவைத் தானறிந்தால் அவன் தன்னிலை மறக்கும் சித்தன்.
நன்றி ஐயா.
"16. மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு."
உண்மை தான் ஐயா. அது தான் உடல் பெற்ற பயனும் நோக்கமும். பாடலி உடம்பினைப் பெற்ற பயன் என்று சொல்லியிருக்கிறார்கள்; நீங்கள் மானிட உடலைப் பெற்ற பயன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உள்ளுரைப் பொருளா இல்லை வேறு ஏதாவது விளக்கம் உண்டா?
(கொள்கை - கட்டுப்பாடு)
மூல மலங்களாகிய (அல்லன - விலக்கப்பட்டவை) அழுக்குகளை நீக்கும் கட்டுப்பாட்டை மனத்தில் அடைந்து விட்டால், எல்லாம் வல்ல ஈசனை உடம்பே சுட்டிக் காட்டிவிடும்.
ஐயா. இந்தக் குறள் மிகவும் பிரபலம் போலும். நான் இதனை அடிக்கடிப் படித்திருக்கிறேன்.
மாசற்றக் கொள்கை
மனத்தில் அடைந்தக் கால்
ஈசனைக் காட்டும்
உடம்பு.
ஆஹா. எவ்வளவு எளிமையான குறள்?
அன்பு குமரன்,
ஆமாம். பொருளறியாமலே அக்காலத்தில் திண்ணைப்பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஆக்கப் பூர்வமானக் கட்டுரை.மிக்க நன்றி.எத்தனை அற்புதமான விளக்கம்!மனிதப் பிறவியின் அர்த்தம் தங்கள் வாயிலாகத்தான் புரிகிறது!!
அன்பு நடேசன்,
மிக்க நன்றி.
"20. அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்."
பிரசவம் என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது இந்த சவத்திற்கு தெரியாமப் போயிடுச்சே.!!ஆமாம் அய்யா ,அன்னம்ன்னா சோறுதானே!!தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க!!
அன்பு நடேசன்,
அன்னம் எனில் சோறுதான்.
ஆம்+ஆம் ஐயா.
ஆமாம்.
சவம் புரிகிறது.
பிர என்றால் என்ன பொருள்
அது வட மொழியல்லவா?
பிரகாரம், பிரசாதம், பிரணவம், என்பது போல
ப்ர என்பது திரிந்து?
தமிழில் பிற என்று தானே வரும்
விளக்கவும்!
அன்பு SK,
இரண்டுமே சமக்கிருதம்தான்.
சவம்=சீக்கிரம், ஜலம், பிரேதம்
சவதாகம்=பிரேத தகனம்.
சவத்துக்கிணையான தமிழ்ச்சொற்கள்-பிணம், கட்டை
Post a Comment