ஞானக் குறள்
**************
1. வீட்டுனெறிப்பால்
**********************
1.மோட்சம் செல்லும் வழி (1-10)
*********************************
1. ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில் எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும் உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .)
அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன் என்னவெனில் தனக்குள்ளே இருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே.
வாசிட்டம் :
"அறியா வறிவை யறியாரே"
தேவபூசை கதை :
"தெய்வந்தானியாதென் றோதில், கேவலமே யரியல்ல, அரனல்ல, பூதவுடற் கிடைத்ததல்ல, வோவுமன மன்றடி முடியுமிலாச் செயப்படா உணர்வே தெய்வம்."
திருமந்திரம் :
"தரணி சலங் கனல் காற்றத்த வானம்
அரணிய பானு வருந் திங்க ளங்கி
முரணிய தாரகை முன்னிய வொன்பான்
பிரணவ மாகும் பெரு நெறிதானே"
தரணி - நிலம். சலம் - நீர். கனல் - தீ. அரணிய - அழகிய.
அங்கி - சிவவேள்வித் தீ.
காட்டுத் தீ - ஆகவனீயம், வேத அக்கினி மூன்றில் ஒன்று.
வீட்டுத் தீ - காருகபத்தியம், வேத அக்கினி மூன்றில் ஒன்று.
பாட்டுத் தீ - தெக்கணாக்கினி, வேத அக்கினி மூன்றில் ஒன்று.
முரணிய - வலிமை மிக்க. பாட்டு - ஞானம்.
நிலம், நீர், தீ, காற்று, இவைகளுக்கு இடமளிக்கும் ஆகாயமாகிய வானம், சூரியன், சந்திரன், விண்மீன்கள், இவைகளின் சேர்க்கையால்(சந்தியால்) விளையும் சிவ வேள்வித் தீ ஆகிய ஒன்பதும் பிரணவம் எனப்படும் ஓங்காரத்துள்ளே உள்ள ஒளியாம். ஆதியெழுத்தும் ஓங்காரமே. அதுவே சிவபெருமானின் சார்புருவமாகும்.
2. பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தக்க அளவின்படி அன்னத்தில் கலக்கிறது. அந்த அன்னத்தினாலேயே, நாதபிந்து கலைகள் உண்டாகின்றன. நாதம் என்பது ஒலி, இந்திரியம் (சுக்கிலம், முட்டையாகிய அண்டம்). பிந்து என்றால் புள்ளி, விந்து.
திருமந்திரம்:
"விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதலுச்சி உள்ளே ஒளித்ததே."
கணவனும் மனைவியும் கருத்தொருமித்து அன்புகொண்டு இன்புறும் வேளையில் யோனி விரிந்தது; அதனுள் லிங்கம் விழுந்தது. அதிலிருந்து உணர்வு கலங்கி ஒழுகியது விந்து. நுண்ணுடலில் தங்கியிருந்த ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் எனும் நுண்மையாகிய(கூர்மை, நுட்பம், நேர்த்தி) ஐந்து தன்மாத்திரைகளும், அறிதற்(அறிய உதவும்) கருவி ஐந்து செய்தற்(செய்ய உதவும்) கருவி ஐந்து ஆகப் பத்துடன் கூடிய மழையாகப் பொழியும் நீர் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும்(ஐந்து பொறிகள்) தோன்றின. புருவநடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடைவிடாது நிகழத் தொடங்கியது.
ஐம்பூதங்களின் சூக்கும சக்திகள், தங்களுடைய கலைகளிலிருந்து பிறப்புக்கு வேண்டிய கலைகளைப் பிரித்து நாத சக்தியில் கலப்பதினால் பிறப்பு உண்டாகிறது.
3. ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு.
ஐம்பூதங்களின் சூக்கும சக்திகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகியவைகள் மனத்தில் ஆசைகளோடு சம்பந்தப்படும்போது மனமானது சேறாகிவிடும். அதாவது பஞ்சதன்மாத்திரைகள் ஆசைகளோடு இணயும்போது நரகிற்கு இட்டுச்செல்லும்.
பஞ்சதன்மாத்திரைகள்:
செவி, நாக்கு, கண், மூக்கு, தோல் என்னும் விண், வளி, தீ, நீர், மண், என்னும் பூதங்களின் குணங்களினின்று தனித்த குணங்களை உடைய மேற்படி பூதங்கட்குக் காரணமாயுள்ள - சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் ஆகியன.
திருவாசகம்
*************
"வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க"
சலனமென்பது தோன்றவிருக்கும் நிலை. சலனமே பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம். சித்தமாகிய மனம் ஒரு தெளிந்த தடாகம். சேற்று நீர் இல்லை. அலை வீசவில்லை. அதனால் அடியில் உள்ள மண் தரை தெரியும். மனிதனின் கண் திறந்ததுமே மனம் விழிக்கிறது. கண்போன போக்கில் மனம் செல்கிறது. அதனால் எண்ணங்கள் கொப்பளித்து ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மேலே எழும்புகிறது. தடாகம் குழம்பி விடுகிறது.
எண்ணங்களே பிறவிக்கு மூல காரணம். அதனால் பிறவிகள் பெருகுகின்றன. எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆசையின் இருப்பிடம் மடமையாம் இருள். இறையருள் பார்வை பட்டவிடமெலாம் மடமை நீங்குகிறது. ஆசைகள் அறுபடுகின்றன்றன. அதனால் எண்ணங்களின் நொதிப்பு(fermentation) நீங்கிக் கொஞ்சம் தெளிவு கிட்டுகிறது. பின் எண்ணங்களின் உற்பத்திசாலையாம் மனதின் கொதிப்பு குறைகிறது.
மனமடங்கிய நிலையில் இறையருள் கிட்டுகிறது.
4. தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.
ஆத்துமத்தை அறியும் தர்மம், உடலிலுள்ள மகத்தான செல்வம், பரத்தாசை, இப்போது வசிக்கும் வீடாகிய உடலை (தேசம்)விட்டு ஆன்மா நீங்கியபின் அது வசிப்பதற்கு வேண்டிய வீடாகிய மோட்சம்(உபதேசம்), ஆகிய நான்கும் இத் தேகத்தினால் உண்டாகும் பயன்களாகும். ஆத்மா இத்தேகத்தைக் கொண்டே, அறம்(தர்மம்), பொருள்(திரவியம்), இன்பம்(காமம்) என்னும் வழிகளில் சென்று வீடுபேறு(மோட்சத்தை) அடைகிறது.
விளக்கம் :
நாதபிந்து கலைகள் சேர்ந்து உடல் உருவாக்கப் பட்டபோது, அறம்(தர்மம்) என்னும் மகத்தான ஒரு ஒப்பற்ற சத்தியைக் கொண்டே அமைக்கப் பெற்றது. உலக செல்வம் அனைத்துமே உடலையே உறைவிடமாக ஆக்கிக் கொண்டுள்ளன. "அண்டத்திலுள்ளது பிண்டத்தில்" என்னும் முதுமொழி, இகவாழ்வை மட்டுமே அறிந்தவர்களையும் கூட சிந்திக்க வைக்கும். சிந்திக்கவில்லை எனில் பேரிழப்பு அவர்களுக்குத்தான். உடலில் உள்ள செல்வங்களின் நிழல்களே உலகில் தோற்றமாய்த் தோன்றுகின்றன.
அறிவுடையோர், உண்மைச் செல்வத்தின் சாயை(நிழல், நிறம்)களைக் கொண்டே அறமாகிய தர்மம் என்பதில் சம்பந்தப்படுகிறார்கள். உண்மையான செல்வத்தின் கெதி (மூச்சோட்டம்) என்னவாகிறது? இவ்வாறே, உடலிளுள்ள உண்மையான செல்வங்களைத் தருமத்தில் சேர்த்து இணைத்தலே ஞானவினையாகும்.
அறமும், செல்வமும் சேருவதால் ஆன்ம சம்பந்தமாகிய புண்ணியம் என்னும் வினை உண்டாகின்றது. இதனால் ஞான வாழ்க்கை அமைகிறது. அறத்தையும், செல்வத்தையும் இணைப்பதற்கு ஒரு சிற்பி வேண்டும். அதுவே காமம் (இன்பம் - இதுவும் நிழலே).
உடலோடு ஆன்மா கூடி உறவாடும்போது, உலக வாழ்வில் இருக்க ஒரு வீடு(தேசம்) இருப்பதுபோல், ஆன்மாவாகிய சீவன் (சிவன்) விலகியபின், சீவன் வசிக்க இன்னுமொரு வீடு (பரவீடு - பரதேசம்) வேண்டியதுதானே?
5. நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.
நிலம்....5 : மெய், வாய், கண், மூக்கு, செவி
நீர்......4 : ஆநந்தம், துக்கம் ஆகியவைகளால் - கண்ணில் இருந்து வரும் நீர், - (உள்முகத்திலிருந்து) இடக் - கண்ணிலிருந்து வெளிவரும் - சந்திராமிர்தம், வலக்கண்ணிலிருந்து - வரும் சூரியாமிர்தம், நாதநீராகிய - சுக்கிலமும் (விந்து).
அக்கினி.3 : சூர்யாக்கினி, சந்திராக்கினி, மூலாக்கினி
வாயு (உலவை) 2 : பிராணவாயு, அபானவாயு.
ஆகாயம்....1 : வெற்றிடமாம்(சூனியத்திலிருக்கும் துவாத சாந்தப் - பெருவெளி) இராப்பகலற்ற - சிதாகாசமே.
மானுட உடல் மேற்படி விகிதத்தில் உருவாகியுள்ளது.
6. மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.
சிவமூர்த்திகள் 5 பேர்கள் :
பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசன், சதாசிவன்.
பிரமன்..........நிலம்(பிருதிவி)
விட்டுணு.........நீர்
உருத்திரன்.......நெருப்பு
மகேசன்.........வாயு
சிவன்(சீவன்)....ஆகாயம்
7. மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.
விட்டுணு சத்தியான அலைமகளும் (இலக்குமியும்), பிரமனின் சத்தியான கலைமகளும் (சரசுவதியும்), அக்கினியும் (அங்கி), சூரியனும் (ரவி), சந்திரனும் (மதி), மலைமகளான (பார்வதி) உமையும் உடலில் பொருந்தி (ஏலும்) ஒளிவீசுகின்ற (திகழ்) சத்திகள் ஆறு.
திருமகள் - இலக்குமி : ஞானவினைகளுக்கு(கர்மாக்கள்), இலட்சியத்திற்கு
கலைமகள் - சரசுவதி : அறிவிற்கு
அக்கினி : அஞ்ஞான இருளையகற்ற, பிராணணைப் பலப்படுத்த
சூரியன் : பெருமத்தைக்(பிரமத்தைக்) காட்ட
சந்திரன்: - தேகத்தைப் பார்ப்பதற்கு
மலைமகள் - பார்வதி : ஞானத்தைக் கொடுக்க
8. தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு.
உடல் (தொக்கு), இரத்தம், மாமிசம் (ஊன்), மூளை, கொழுப்பு(நிணம்), எலும்பு (சுட்ட எலும்புச் சாம்பலாகிய அஸ்தி), சுக்கிலம் ஆக தாதுக்கள் ஏழு.
திருமந்திரம்:
"மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே."
கான் = கானல்
தேன் = திருவருள்
பூதம் = பருமை
மோகினி என்பது (தூவா)மாயையின் பெயர். அதில் கலை தோன்றும். அதிலிருந்து மூலப்பகுதி தோன்றும். இம்மூலப் பகுதிக்கு மான் எனப்பெயர். இதிலிருந்து எழுச்சியாகிய ஆங்காரம் தோன்றும். இந்த எழுச்சி மூன்று வகை. அவை, உணர்வு, உழைப்பு, உலகம். இதில் உலக எழுச்சியிலிருந்து பூதம் முதலான நுண்மை ஐந்தும் தோன்றும். நுண்மையிலிருந்து வான்(ஆகாயம்), வளி(காற்று) வளர்ந்து தோன்றும். கானலாகிய தீயும், நீரும், எல்லாம் கலந்து கடினமாக இருக்கும் நிலமும் தோன்றும். இந்த நுண்மைகளை, ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனக் கூறுவர். இந்த ஐந்து பூதங்களின் கூட்டுறவே புவனம்.பலவுலகத் தொகுப்பே புவனம். இவை 224 என்பர். இவை அண்ட தத்துவம்.
பாடலில் உள்ளது பிண்ட தத்துவம்.
9. மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.
நிலம், நீர், தீ, சந்திரன், வாயு, சூரியன், ஆகாயம், ஆன்மா (பிராணண் - எச்சமூர்த்தி) ஆக மூர்த்திகள் எட்டு. இவைகளையே எட்டு கைகளாக இறைவனின் படத்தில் முன்னவர்கள் சித்தரித்துள்ளனர்.
திருமந்திரம்:
"எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களுங்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்."
அருவுடலாகிய நுண்ணுடல் ஒளி, ஓசை, ஊறு, சுவை, நாற்றம் என்னும் புலன்கள் ஐந்தும், அகப்புறக் கலன்களாகிய மனம், எழுச்சி, இறுப்பு என்னும் கரணங்கள் மூன்றும் ஆகிய எட்டினால் ஆகியது.
இப்பிரபஞ்சம் எந்த அடிப்படை விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என்னும் ஞானமே வேதம். இதை எட்டு கால்களையுடைய அன்னப்பறவையின் உருவில் வந்து ஸ்ரீமன் நாரணன், பெருமனுக்கு(பிரம்மனுக்கு) உபதேசித்தார். அன்னமே ஹம்ஸம். ஐம்பூதங்கள்,அகங்காரம்,மகத்,பிரகிருதி ஆகிய எட்டுமே அன்னத்தின் கால்களாம். இது மாலியத்தார் கோட்பாடு.
10. இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து.
விந்துவாகிய சுக்கிலமே மேலே சொன்ன செல்வங்களை எல்லாம் உண்டாக்கியது. அச்செல்வங்களெல்லாம் ஒன்று சேர்ந்து உடம்பை உண்டாக்கியது.
ஆக, விந்துவாகிய சுக்கிலமே (ஆதி) மூலவித்து.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 1. வீட்டுனெறிப்பால்
Posted by ஞானவெட்டியான் at 5:38 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
49 Comments:
//திங்க ளங்கி//
ஐயா, அக்னியென்பது தமிழ்ச் செய்யுளில் அங்கியென்று பயின்று வருவதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலிலும் 'திங்கள் அங்கி' என்று வருகிறது. ஐந்து பூதங்கள், மூத்தீக்கள், விண்மீன்கள் இவை ஒன்பதுமே முதலில் தோன்றி என்றும் புதுமையாய் இருக்கும் பிரணவமாகும் என்பதை இந்தப் பாடல் மிக அருமையாகச் சொல்கிறது.
அன்பு குமரன்,
அங்கி = சட்டை, தீ, சாடராக்கினி, அத்(ஸ்)த நாள், கார்த்திகை நற்சேத்திரம்(நட்சத்திரம்), அங்கத்தையுடையது, அக்கினி ஆகிய இத்தனை பொருளுண்டு.
அய்யா,
புதுக்கோட்டை அன்னவாசல் பக்கம் அநந்தர்கள் வசிக்கிறார்களே! அவர்களின் வேத புஸ்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பெரிய கரும் புள்ளி வைத்து அதன்கீழ் "ஆதியே துணை" என எழுதி இருக்கிறார்களே? அந்த எழுத்துதான் குத்தெழுத்தா?
ஆமாம். ஆதியெழுத்தே அது. மனிதனின் உடலில் ஆதியில் உதித்ததும் அதுவே. அதுதன் விந்து(சுக்கிலம்).
சாகர்:
//ஆதிப்பொருளான அறிவை உணர்வதே.//
ஆதியில் உருவாவது பிண்டம். ஆனால் நீங்கள் ஆதிப்பொருள் அறிவு என்கிறீர்களே?
ஞானவெட்டியான்:
//ஆதியில் உருவாவது பிண்டம். ஆனால் நீங்கள் ஆதிப்பொருள் அறிவு என்கிறீர்களே?//
மனிதனின் உடலில் ஆதியில் உதித்தது விந்து(சுக்கிலம்).
அது உருவாய் மாறினபின்தான் பிண்டம். விந்து உயிருடன் இருப்பதால்தான் பிண்டத்திற்கு உயிர் வருகிறது. உயிருள்ள பொருள் ஏதாகவிருப்பினும், அதற்கு அறிவு உண்டு. ஆக, அறிவுதான் முதல் பொருள்.
"2. பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு."
ஐயா, இந்தக் குறளைப் படிக்கும் போது எனக்குத் தோன்றும் பொருளை இங்கே கூறுகிறேன். தவறாயின் மன்னிக்கவும்.
பரமாய சக்தியென்பது மகாமாயையாகிய சக்தி, பிரகிருதி என்பது. அந்த பிரகிருதியில் நிலம், நீர், மண், காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களும் தர மாறில், தம் தன்மைகள் ஏற்றத் தாழ்வாக மாறும் போது அண்டங்கள் பிறக்கின்றன. உலகம் பிறக்கிறது. உயிர்கள் பிறக்கின்றன.
அன்பு குமரன்,
“பரமாய” என்னும் சொல்லை பரம்+ஆய என்று பிரித்தல் வேண்டும்.
பரம் = அத்தி மரம், உடல், கடவுள், கவரம், குதிரைக் கல்லனை, கேடகம், செயல், தனிமை, பழமை, பாரம், மிகுதி, முற்றுந்துறத்தல், முன்பு, மோக்(க்ஷ)கம்.
ஒன்று கடவுள் ஆகிய சத்தியுள் …….
மற்றொன்று சத்தியுடன் கூடிய உடல் …..
இப்படிப் பொருள் கொள்ளல் வேண்டும்.
பரமாயா என்று வந்தால் தாங்கள் கூறுவது சரியே.
கரு உற்பத்தியின் அங்கங்களை விளக்கியதற்கு நன்றி.
//முற்றும் துறத்தல்//
முடியுமா அய்யா?
அன்பு நாகன்,
நன்றி.
தனக்காகப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையை வைத்திருந்தால்கூட முற்றும் துறந்த நிலை கிட்டவில்லை. அதை எட்டுவது மிகக் கடினம். பயிற்ச்சியால் மட்டுமே இயலும்.
//புருவநடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடைவிடாது நிகழத் தொடங்கியது.//
இதை அடைய வழி என்ன? பகவான் ரமணர் ஆத்ம விசாரம் போதும் என்று சொல்லி இருக்கிறாரே?
//புருவநடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடைவிடாது நிகழத் தொடங்கியது.//
குழந்தை பிறந்தவுடனேயே இந்த ஞானத் தொழிலும் ஆரம்பித்து விடுகிறது. ஆனால், மனிதன் தன் ஆசை, பாசம், பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவை அந்த ஞானவினையைப் போர்வையாய்ப் போத்திக் கொள்ளுகின்றன. போர்வையை அகற்றினால், தானே நிகழும்.
ஐயா, நீங்கள் தன்மாத்திரைகளைப் பற்றிச் சொன்னதும் எனக்கு 36 தத்துவங்கள் நினைவுக்கு வருகின்றன. அவைகளைப் பற்றியும் சொல்லுங்களேன். அநுபூதியில் கூட ஆறாரையும் நீத்து என்று வருமே.
அன்பு இராகவன்,
கட்டாயம் சொல்கிறேன
//மனமடங்கிய நிலையில் இறையருள் கிட்டுகிறது.//
அதற்கு வழி என்ன அய்யா?
நாவு அடங்க மனம் அடங்கும்.ஆசை அடங்க மனம் அடங்கும். எழும் எண்ணங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிராமல் இருக்க மனம் அடங்கும்.
//எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசை. ஆசையின் இருப்பிடம் மடமையாம் இருள். இறையருள் பார்வை பட்டவிடமெலாம் மடமை நீங்குகிறது. ஆசைகள் அறுபடுகின்றன்றன.//
நல்ல கருத்து
ஆசைப் படுவதால் என்ன தவறு?
ஆசை இல்லாத வாழ்வில் என்ன சுவாரசியம்?
// ஆசைப் படுவதால் என்ன தவறு?
ஆசை இல்லாத வாழ்வில் என்ன சுவாரசியம்?//
பேராசை என்னும் பேயிடமிருந்து விடுபட்டால் மட்டுமே பரம்பொருளைக் காண இயலும். பேராசை அகன்றால்தான் மன ஓட்டம் நிற்கும். மனம் சலனமடையாமல் இருந்தால்தான் உன் ஆன்மாவின் வடிவம் தெரியும். உன் ஆன்மாவை நீ அறிய, உணர,முதலில் ஆசையை வேரோடு கிள்ளி எறிந்துவிட்டு மனத்தைச் சலனமற்ற நிலயில்
நிறுத்தி வைத்தல் வேண்டும். அப்புறம் நீ விரும்பியன (நியாயமானவை)எல்லாம்
சித்தியாகும். மற்ற வழிகளில் மனதை அலைய விடாதே! உன் வழியே சிறந்தது என முடிவு செய்து அதிலிருந்து பிறழாதே. ஆசைப் பேயிடமிருந்து விடுபட ஏட்டுக் கல்வி பயன்படாது. மனவோட்டங்களை நிறுத்தும் ஞானவழியே போதும்.
ஆசை இல்லாத வாழ்வு,”போதுமென்னும் மனமே பொன்செய்யும் மருந்து.”
ஆசை என்ற ஒன்று இருப்பதால்தான் மனிதன் முன்னேற முடிகிறது . இறைவனை அடைய நினைப்பதும் ஒரு வகையில் ஆசையே. பேராசைக் கொள்ளக் கூடாது.
அன்பு என்னார்,
நன்றி.
//இறைவனை அடைய நினைப்பதும் ஒரு வகையில் ஆசையே.//
நான் இப்போது எந்த நிலையிலுள்ளேன்? பக்தி மார்க்கத்திலா? கர்ம மார்க்கத்திலா? ஞான மார்க்கத்திலா? ஒன்றாம் நிலையினைக் கடந்துவிட்டேனா? இரண்டாம் நிலைக்குச் செல்லவேண்டுமே!
இறைவனை அடைய நினைப்பதிலும் இத்தனை எண்ணங்கள் எழும்போது எப்படி மனமடங்கும்? ஆகையால்தான், இறைவனை அடைய நினைப்பதும் ஒரு ஆசையே!
பரதேசிகள் என்பது அந்த பரதேசத்தை அடைந்தவர்களைத்தானா?
அன்பு குமரன்,
அக்காலத்தே தாங்கள் சொல்லுவதுதான் சரி. அவர்கள் யாராகிலும் மதியம் ஒருவேளை அன்னம் கொடுத்தால் உண்டு , தன் வேலை உண்டு தான் உண்டு என இருந்தவர்கள்.
இப்பொழுது, “பரதேசியாய்த் திரிவது எதானாலே?”
“அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே” என்றாகிவிட்டது.
காமம் = இன்பம்.
இவைகள் நிழல் என்றால் எப்படி ஒத்துக்கொள்ளமுடியும்? அநுபவிக்கும்போது சுகம் கிடைக்கிறதே?
அனுபவிக்கும் சுகம் நிலையானதா? நிம்மதி எப்பொழுதும் தருகிறதா? இல்லையே. காம சுகம் அனுபவித்துடன் மூச்சிறைக்கிறதே! அப்போது சுகம் எங்கே போயிற்று?
நிழலைச் சாயை என்பர் வடமொழியில். நிழலுக்கு ஒரே மதிரி உருவமில்லை. பருமையில்லை. ஆகவேதான் காமும் நிழலே!
கண்களில் இருந்து கண்ணீர் மட்டும்தான் வருகிறது. அப்புறம் எப்படி சூரியாமிர்தம், சந்திராமிர்தம்?
நாசியை ஒட்டிக் கண்ணிலிருந்து வரும் நீர் கண்ணீர்.
நடுவிலிருந்து நடு்வில் வருவது சூரிய அமிர்தம், சந்திர அமிர்தம்.
வைணவத்திலும் இறைவனுக்கு ஐந்து உருவங்கள் சொல்வார்கள். அதற்கும் இதற்கும் பொருத்தம் உண்டா?
அவை என்னென்ன?
விவரம் கூறுங்கள்.
ஐயா.
வைணவத்தில் இறைவன் ஐந்து உருவங்களில் இருப்பதாகச் சொல்வார்கள்.
1.பரம் - பர வாஸூதேவனாக வைகுண்டத்தில். இது பிரகிருதி மண்டலத்திற்கு வெளியே இருக்கும் சுத்தசத்வ பிரதேசம்.
2. வ்யூஹம் - சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த, வாஸுதேவ என்ற நான்கு உருவங்களில் பிரகிருதி மண்டத்திற்குள் இருக்கும் மூர்த்திகள். பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொள்ளும் பெருமாளும் வ்யூஹத்தில் சேர்த்தி. பாற்கடலும் பிரகிருதி மண்டலத்துக்குள் இருப்பது. அங்கு இருப்பவர் தான் அவதாரங்களாக வருகிறார்.
3. விபவம் - இராம கிருஷ்ணாதி அவதாரங்களாய் வருதல்
4. அந்தர்யாமி - எல்லாருடைய இருதயத்திலும் இருக்கும் மூர்த்தி
5. அர்ச்சை - கல், உலோகம், முதலான உருவங்களில் ஆலயங்களிலும் வீடுகளிலும் வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளும் மூர்த்தி.
பர வாஸுதேவன் பிரம்ம ருத்ராதிகளுக்கும் அடையக் கடினமானவன். பாற்கடலில் இருப்பவன் தேவர்களால் அடைய எளியவன் ஆனால் மற்றவர்களுக்கு அரியவன். அவதாரக் காலத்தில் வாழ்ந்தவர்க்கே விபவ வடிவம் கிட்டும். யோகிகளுக்கு மட்டுமே அந்தர்யாமி தோன்றுவான். எல்லோருக்கும் ஆனவன் அர்ச்சாவதாரமாய் இருப்பவனே. அதனால் அவனே உயர்ந்தவன் என்பது ஒரு கருத்து.
அன்பு குமரன்,
நன்று!
இதில் தாங்களின் முதல் கருத்துப்படி, “பரம்” ஆகாயத்ததுவம். சரி.
மற்றவையுள், ஐம்பூதங்களுக்குத் தனித்தனியாக உருவங்கள் வரையறுக்கப்படவில்லையே?
“ஞானக் குறள்” ஞானத்தை விளக்க எழுந்த நூல். இதில் அண்டபிண்ட தத்துவங்கள் ஏராளம். அவற்றிற்கு முன்னோடியாக, வரும் பாடல்களில் மறைபொருளாக இவ்விரகசியங்களை ஒளவைப் பிராட்டி விளக்கியுள்ளார்.
இங்கு மால் என்பது நம் தலையில் உள்ள முகுளமே. இதத் தனிப் பதிவாக மாலியத்தில் விரைவில் இடுகிறேன்.
சீக்கிரம் எழுதுங்கள் அய்யா!
நீங்கள் சொல்லுவது எல்லாம் புதியதாய் இருக்கிறது.
எழுதுகிறேன். எழுதுகிறேன். ஒவ்வொன்றாக எழுதுகிறேன். ஒத்தை விரலில் கொத்தித்தானே அனுப்ப வேண்டும்.
ஐயா ‘ஞான’மே!,
தங்கள் பதிவு ஏழாவது அறிவை எட்டுவதற்கு வழிவகுக்கும்.
அன்பு வாசுதேவன் இலட்சுமணன்,
எல்லோரும் இந்நிலையடையவேண்டும். அந்த அறிவைப் பெறப் பாடுபடல் வேண்டும். இதுதான் என் அவா.
நன்றி.
திடீரென்று ஒன்று தோன்றியது உங்கள் பதிவைப் படிக்கும் போது. இந்த ஏழு தாதுக்களைத் தான் ஏழு உலகங்கள் என்கிறார்களோ? தவறாக இருக்கலாம். ஆனால் தோன்றியதைக் கேட்கலாம் என்று கேட்கிறேன்.
அன்பு குமரன்,
இப்பொழுத்தான் நான் வைக்கும் தீ பற்ற ஆரம்பிக்கிறதென நினைக்கிறேன். அநுமன் பற்றவைத்த தீ அது. அஞ்ஞானமெனும் அரக்கரின் அவையிலே சிரத்தில் வாழும் சிரஞ்சீவி இட்ட தீ அது; ஞானத் தீ.
உங்களின் எண்ணம் மிகச் சரியே! ஆயினும், ஈரேழ் பதினான்கு உலகங்கள் என்றல்லவா சொல்லியிருக்கின்றனர் ஆன்றோர். அப்படியேயாயின், இன்னும் ஏழு உலகம் எவை? என சிந்தித்தல் வேண்டுமல்லவா?
அவை அண்டத்தில் ஏழு உலகம்; பிண்டத்தில் ஏழு உலம். ஆக பதிநான்கு உலகம்.
அய்யா,
மோகினி அவதாரம் பெருமாள் எடுப்பதாகச் சொல்லுகிறார்களே?
நீங்கள் சொல்லும் மோகினிக்கும், அந்த அவதாரத்துக்கும் என்ன சம்பந்தம்?
அன்பு நாகன்,
அந்த மோகினி அவதாரம், திருமால் அமிழ்தைத் தேவருக்கும் அசுரருக்கும் பங்கு செய்து கொடுத்தபொழுது எடுத்தது.
இந்த மோகினி அவதாரத்தால்தான் உலகு தோன்றியது.
முன்னையிட்ட தீ முப்புறத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
விளக்குங்களேன்
அன்பு என்னார்,
// முன்னையிட்ட தீ முப்புறத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே//
முதன்முதலில் சூரிய, சந்திர கலைகள் அக்கினி கலயோடு சேர்ந்து சீவனுடன் ஒன்றியிருந்தது. அந்த முத்தீயும் கலங்கி விந்து வெளிப்பட்டு நாம் உண்டானோம். அது முப்புறத்தீ.
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே. அதற்கு விளக்கம் இதிலேயே தந்துள்ளேன்.
தாயின் கருப்பையில் உள்ள விந்து (அண்ட) சக்தியோடு அக்கினியும் நம் உடலின் உள்ளேயே பாய்ந்துள்ளது. அது அன்னையின் கருவிலிருந்து வெளிவரும்போது, அன்னையிட்ட தீயாகிறது.
அருமையான விளக்கம்
நன்றி சார்
பத்துதலைகளை அறுத்தான் என்பதற்கு விளக்கம்
அன்பு என்னார்,
“பத்து தலை” அல்ல.
“பற்று தலை”. பற்றுள்ள தலைகளை அல்லது பற்றிக்கொள்வதை அறுத்தான் என்பதாம்.
கேள்வி கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. பேசாமல் படித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
அன்பு இராகவன்,
கைகாட்டி மரம் நான். காட்டுகிறேன். போய்ச் சேருவது நீங்கள் மட்டுமே. அது உங்களால்தான் இயலும்.
ஐயா…!
ஏழுக்கும் நம் வாழ்க்கைக்கும் இடையேதான் எத்தனை ஒற்றுமை இருக்கிறது..!
1. வெண்மை என்ற அடிப்படை ஒளியிலிருந்து பிரியும் வண்ணக் கதிர்கள் ஏழு.
2. அந்த வண்ணக் கதிர்கள் உருவாக்கும் பண்பு வகைகள் ஏழு.( மயக்கம் -கருநீலம்,செருக்கு - ஊதா, அன்பு - நீலம், ஊக்கம் - பச்சை, பொறாமை - மஞ்சள், தெளிவு - இளஞ்சிவப்பு, அவா - சிவப்பு )
3. பிரிந்த வண்ணக் கதிர்கள் அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும் ஆகி, பிறகு அவை காற்று என்ற கலவையாகும் போது, அந்தக் காற்றின் அசைவிலிருந்து வெளிப்படும் ஒலி வகை ஏழு: சரிகமபதநி ( சட்சம்-குரல், ரிசபம் -உழை, காந்தாரம்-கைக்கிளை, மத்யமம்- துத்தம், பஞ்சமம் -இளி, தைவதம்-விளரி, நிசாதம் - தாரம்).
4. பின் காற்று நீர்மக் கூறாகி, அந்த நீரினின்று பிறக்கும் உயிரின வகை ஏழு - தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மக்கள், தேவர்.
5. மனித உடலில் தண்டுவடத்தின் விளிம்பில் தொடங்கி, மூளையின் உச்சி வரை உள்ள அறிவு நிலைகளை உணர்த்தும் மையங்கள் ஏழு: மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தை, ஆக்ஞை, சகஸ்ராரம்.
6. ஆறறிவு படைத்த மனிதன், ஆன்ம பலத்தால் வளர்த்துக் கொள்ள வேண்டிய அறிவு -> ஏழாவது அறிவு. ( ஐயா ஞா.வெ அவர்களின் இலக்கு இதுதானே!)
7. இனப்பெருக்க மண்டலமோ - மனிதனின் ஏழு தலைமுறை வரலாற்றை அடக்கி வைத்து, புதிய தலைமுறையைப் பற்றித் தீர்மானித்து வடிவமைக்கிறது.
இவ்வாறு கருத்தில் ( அடடே..எப்படி பொருந்துகிறது பார்த்தீர்களா..!)கொண்டு,
ஒரு தலைவன் தலைவியைப் பார்த்து ” இனி ஏழேழு ஜென்மத்திலும் உன்னுடனே வாழவேண்டும்” என்று வழக்கில் சொன்னால் நன்றாகத்தான் இருக்கும்!
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்
அன்பு வாசு,
நன்று! நன்று!!
இப்பொழுதுதான் அகம் மகிழ்கிறது. நல்ல ஒரு பாட்டையில் சிந்திக்க ஆரம்பித்துள்ளீர்கள்.
இன்னும் சில ஏழுகள்:
முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன்,
காசிபன்,மார்க்கண்டன்.
நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.
கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.
மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம்,சத்தியலோகம்.
கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல்,தயிர்்க் கடல், பாற்க் கடல், சுத்த நீர்க் கடல்.
திரைகள் :
கருப்பு - மாயா சக்தி
நீலத்திரை - கிரியா சக்தி
பச்சை - பரா சக்தி
சிவப்பு – இச்சா சக்தி
பொன்வண்ணம் - ஞான சக்தி
வெண்மை - ஆதி சக்தி
கலப்பு - சிற்சக்தி
பிறப்பு :
ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்.
இதில் சூட்சமப் பிறப்பு 7 :
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,
சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.
சார்
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,
சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.
இவைகள் எல்லாம் என்ன?
அன்பு என்னார்,
//சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.
இவைகள் எல்லாம் என்ன?//
அவைத்தைகள் ஐந்து.அவையாவன:
1.சாக்கிரம் - நனவு
2.சொப்பனம் - கனவு
3.சுழுத்தி (ஸுஷுப்தி) - உறக்கம்
4.துரியம் - பேருறக்கம்(நிட்டை)
4.துரியாதீதம் - உயிர்ப்பு அடக்கம்
1.”ஐயைந்து மத்திமை யானது சாக்கிரங்
கைகண்ட பன்னான்கிற் கண்டம் கனாவென்பர்
பொய்கண்டிலாத புருட னிதயஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி யாகுந் துரியமே”(திருமந்திரம்)
புருடன் = ஆன்மா.
அறிதற் கருவி ஐந்து - செவி,, மெய், கண், நாக்கு, மூக்கு
செய்தற் கருவி ஐந்து - நாக்கு, கால், கை,எருவாய், கருவாய்
இவையிரண்டும் சேர்ந்து இந்திரியம் 10.
வளி பத்து.
அறிவு வளி 5 - உயிர்க் காற்று, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவுக் காற்று
தொழில் வளி 5 - தும்மற் காற்று, விழிக்காறு, கொ(கெ)ட்டாவிக் காற்று,இமைக் காற்று, வீங்கற் காற்று
அகப்புறக் கலன்கள் = அந்தக் கரணம் - 4
எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு. இவற்றைச் சித்தம், மனம், அகங்காரம்,புத்தி என்பர்.
மத்திமை ஆகிய புருவ நடுவின்கண் இந்திரியங்கள் பத்தும், வளி பத்தும்,அந்தக் கரணங்கள்(அகப் புறக் கலன்கள்) நான்கும், ஆள் ஒன்றும் சேர்ந்து
இருபத்தி ஐந்து கருவிகளும் செயல்படும் நிலை நனவு (சாக்கிரம்) நிலையாகும்.
கண்டத்தில் வளி பத்து, அந்தக் கரணங்கள் நான்கு ஆக பதினான்கு கருவிகளும் செயல்படும் நிலை கனவு (சொப்பனம்) நிலையாகும்.
நெஞ்சத்தில் எண்ணமும் ஆளும் கருவிகளும் செயல்படும் நிலை உறக்க(சுழுத்தி) நிலயாகும்.
கொப்பூழின்கண் நிலைத்தவனாகிய ஆள் தொழில்படும் நிலை பேருறக்கநிலை(துரியம்).
இன்னும் எளிமையாகச் சொல்ல:
புருவமத்தியில் மேற்கூறிய 25 தத்துவங்களோடு சுக துக்கங்களை அறிந்து நிற்கும்போது சாக்கிரம் எனும் நினைவு நிலையாம்.
கண்டத்தில் பஞ்சேந்திரியங்களும், ஐந்து கர்மேந்திரியங்களும் தொழில்படும் நிலை சொப்பனமாகிய கனவு நிலை.
அந்தக் கரணங்கள் 4ம் சுழுத்தியோடு, ஆன்மாவைக் கூடி நின்று கண்டவை,கேட்டவை எதுவும் பிறருக்குச் சொல்லப் புலப்படாத நிலை சுழுத்தியாகிய உறக்க நிலையாம்.
சுழுத்தியை விட்டுக் கரணம் ஒன்றுடனே சீவாத்துமா நாபிக்கமலத்தில் நிற்கும் நிலை நிட்டையாகிய துரியம்.
இந்திரியங்கள் பத்தும், அந்தக் கரணங்கள் நான்கும் பற்றற்று சீவன் தானே மூலாதாரத்தில் சென்றோங்கி மலம், மதம், மாயை, பரிசங்கள் எதையும்
அறியாமல் நிற்கும் உயிர்ப்பு அடக்க நிலையே துரியாதீதமாகும்.
விளக்க விளக்க விரியும்.
Post a Comment