ஞானம் எட்டி
***************
28. மூல முதலறிந்து சிவசிவ
......முத்திதருஞ் சுழிமுனை யறிந்து
பாலமுந் தாண்டியப்பால் பரிபூரண
......பானுமதி யமிர்த பானமுண்டு
சீலமு நிறைந்துநின்ற மூலமணி
.....திருமாலின் பொற்கமலச் செயலறிந்து
ஞானமுங் கடந்துநின்ற வுயர்குல
.....ஞானவெட்டி யானான் காணும்.
மூலாதாரத்தையும் அதன் மூலத்தையும் அறிந்து (எண்ணப்) பிறப்பு அறுக்கும் முத்தியைக் கொடுக்கும் சுழிமுனையறிந்து உணர்ந்து, பாலத்தைத் தாண்டி, அப்பால் எங்கும் நிறைந்திருக்கும் சூரியசந்திர அமிர்தத்தை உண்டு, நல்ல சூக்கும அறிவு மிகு மூலமணியாம் திருமாலின் திருவடிச் செயல் என்ன என உணர்ந்து, ஞான நிலை தாண்டி நிற்கும் உயர்குலத்தவனாம் ஞானவெட்டியான் நான், காணீர்.
சுழிமுனை -
*************
"பார்க்குஞ் சுழுமுனை காணாரேயது மூக்கு நுனியென்றறியாரே"
மூக்கு நுனியே சுழுமுனை.
நண்பர் ஒருவரின் வினாக்களும் நாம் ஈந்த விடைகளும்:
// 'புருவநடு' விற்குப் பொருள் 'நடுநாடி' 'சுழுமுனை' என்று நாம்
எடுத்துக் கொள்ளமுடியாது அல்லவா?//
"சுழிசுழி யேகாச் சுழிமுனை யாகும்
வழிவழி யிதுவே வழிதுறை யாகும்."(திருமூலர் ஞானம் 84)
மேலேயேக புருவ நடு, சுழுமுனை ஆகிய இரண்டும் வழியாகும்.
நடு நாடி தண்டமேயாகும்.
தண்டம் வழியேறி பிடரிவழி பாய்ந்து மூலத்தமர் குடைந்தால் கபாலம் திறக்கலாம்.
ஆக, நடு நாடியும் வழியே.
// 'வாசி' என்பதை 'சுழுமுனை' என்ற பொருளில் யார் பயன்படுத்துகிறார்கள்?//
"மேவுவதோர் மனத்தாலே தவமுமாச்சு
வேதாந்த நாதாந்த மிரண்டுமாச்சு
கூவுவதோர் சொல்லடர்ந்த விடமுமாச்சு
குண்டலியாள் ஞானசத்தி மனையுமாச்சு
பூவுவதோர் வாசியென்ற மலருமாச்சு
புருவமையம் நின்றசுழிக் கதலியாச்சு
நாவுவதோர் கலைக்ஞான மநேகநூற்கள்
நால்வேத மாறுசாஸ் திரமுமாச்சே."
(சுப்பிரமணியர் சுத்த ஞானம் 100)
வாசி எனில் சுவாசம் எனக் கூறுதலும் உண்டு. வாசிக்குதிரை ஏறிப் பயணித்தல் என்பதன் சரியான பொருள் மனமடங்கிய நிலையில் நினைவால் பயணித்தல் என்பதாம்.
முந்நாடி(முன்னாடி) ஒடுங்குமிடம் சுடர்க்கம்ப உச்சியாம் சுழுமுனை. அதுவே மனம்.
பாலம்
********
ஆக்கினைக்கு மேல் எட்டு விரல் தூரத்திலிருக்கும் ஆயிரத்தெட்டிதழ் தாமரையை அடைய, வாசியைத் தமருக்குள் (துளைக்குள்) புகுத்தினால் நெறுப்பு ஆற்றுக்கு மேலுள்ள மயிர்ப்பாலம் காணலாம்.
வேண்டுகோள்
Friday, December 28, 2007
28. மூல முதலறிந்து
Posted by ஞானவெட்டியான் at 1:16 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment