ஞானக் குறள்
***************
3. தன்பால்
*************
23. மெய்யகம் (221-230)
****************************
221. மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி.
உடலினுள்ளே உந்திக்கமலத்தில் (உன் + தீ + கமலத்தில்) செஞ்சுடர் நோக்கச் சிவம் உள்ளங்கை நெல்லிக்கனி எனத்தெரியும்.
திருமந்திரம்:
"மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனன்றே."
மெய்த்தவப் பயன் அருளும் மெய்ப்பொருள் சிவனே. அவனை விரும்பித் தொழுபவர்க்கு (யோகம் செய்பவருக்கு) உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் விளங்குவான். நெல்லி உண்டு பின்னர் நீர் அருந்தியதும் இனிப்பதுபோல பிறவிப்பிணி நீங்கும்; பின்னர் இனிப்பாம் பேரின்ப நுகர்வு உண்டாகும். சிவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய தூயோன். தூய நெறியில் நிற்கும் தேவர்களுக்கு அத்தன். அத்தகையவனை நாடித் தினமும் தொழுதேன்.
222. கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு.
கரையில்லாச் செல்வமாம் உணர்வை அறிந்து உணருங்காலத்தில், நினைக்கப் பேச ஒன்றுமிருக்காது. மவுனம்தான் நிலவும்.
ஞான வாசிட்டம்: உத்தாலகன் கதை:
"அன்னை காலையி லிருள்சுடர்துயில் மயக்கனைத்தையு மறுத்தோட்டி
மன்னுமோ ரவத்தயை யடைந்தொருகணம் வருத்தமாறியதுள்ளம்
இன்னறீர்ந்துடனே யனைத்துருவமா மறிவை யெய்தியதன்றே
நன்னெடுங்கரை தடுக்கநிறெதிர்த்து முற்றல நிறைந்திடு நீர்போல்."
223. உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங்
கண்டுகொள் காதல் மிகும்.
பசிதீர உண்டபின் மனம் எவ்வாறு மனநிறைவடையுமோ, அவ்வாறே உடலின் உள்ளும் புறமும் அன்பு சுரந்து மனநிறைவு அடையுங் காலத்தை அறிந்து உணர்ந்துகொள்.
224. உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்.
ஓசையின் மூலமாய் உண்டாகும் சொல்லின் மருமப் பொருள் உணர்ந்தார்க்கு, நரை, திரை, மரணம் இல்லை.
ஞான வாசிட்டம்:
"பிரணவத்தினுச் சாரணமுடிவில் பிறந்த சொல்லூறுமுண்மை
விரவுநாட்டத்தாற் றுயில்பவனுணர்வு தான்வெளிப்படி லுயிர்நிற்கும்
பரவுதாலுமூலஞ் செறியிதழினை படருநாவாற்றள்ளி
யுரவினாலுயர் புரையிலே பிராணனையோட்டினா லுயிர்நிற்கும்."
225. தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.
எவருக்கும் வெளிப்பட்டு நிற்காத தூய்மையான ஆத்தும ஒளியானது வெளிப்பட்டு உன்னைச் சூழ்ந்திருக்க, மற்ற நினைவுகள் தோன்றாமல் அறிவு காக்கும். நினைவுகள் என்பது எண்ணங்கள்.
226. வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.
பேச்சும் மனனமும் இல்லாத தனது இயல்பான வடிவத்தை (செங்கிருதத்தில் மனோகோசரமாகிய வடிவம்) உணர்ந்தால், தூல உடலுக்கு அழிவு இல்லையாம்.
கோசரம் = Sensation, perception; comprehension, உணர்வு.= புலப்படுதல்
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல.
கம்ப இராமாயணம் - பாலகாண்டம் - மிதிலை காட்சிப் படலத்தில் சீதா பிராட்டியாரின் காதல் நிலைமை:
பிறையெனும் நுதலவள் பெண்மை எனப்படும்
நறைகமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும் மனமெனும் மத்த யானையின்
நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே.
தேன் துளிர்க்கும் நறுமண மலர் மாலை யணிந்த இராமன் தன் பார்வையிலிருந்து மறைந்து சென்றதும், மனம் என்கிற மதம் கொண்ட யானை நிறை என்கிற அங்குசத்தை யழித்துச் செல்லுதலைப் போன்று பிறைச் சந்திரனை யொத்த நெற்றியுடைய சீதாப் பிராட்டியின் பெண் தன்மைதான் எத்தகைய நிலைமையை யடையுமோ! நாணம் முதலான குணங்கள் ஒழிந்தன என்பதாம்.
227. கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.
ஆத்தும ஒளியானது ஞானக் கண்ணிலிருந்து வெளிப்படுவதை உணர்ந்தால், உணர்வு ஆநந்தத்தை உணரும்.
228. ஆநந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.
ஆநந்த சொரூபமாகிய அருளொளியை உணர்ந்தபின் அதுவே அவர்கட்கு அந்தமாகும் (முடிவாகும்).
229. மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம்.
மறதியை ஒழித்து அதனால் பார்வைக்குத் தோன்றும் தோற்றங்களை பகுத்துணர்ந்து கொண்டவர்க்கு இறவாவரம் கிட்டும்.
230. விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி.
உடலினுள் நிறைந்து அசைவற்று நிற்கும் அருள் ஒளியே, சிதாகாயத்தில் அகண்ட பரிபூரணமாய்ப் பரவியிருக்கும் சிவமாம்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 23. மெய்யகம் (221-230)
Posted by ஞானவெட்டியான் at 12:05 PM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
"செங்கிருதத்தில் மனோகோசரமாகிய"
அப்படி என்றால் என்னங்க? வேறெங்காவது சொல்லியிருந்தீங்கன்ன சுட்டி கொடுங்க.
நன்றி
அன்பு குமார்,
கோசரம் = Sensation, perception; comprehension, உணர்வு.= புலப்படுதல்=புலன் வயப்படுதல்
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல.
(அகப்பேய் சித்தர்)
கம்ப இராமாயணம் - பாலகாண்டம் - மிதிலை காட்சிப் படலத்தில் சீதா பிராட்டியாரின் காதல் நிலைமை:
பிறையெனும் நுதலவள் பெண்மை எனப்படும்
நறைகமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும் மனமெனும் மத்த யானையின்
நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே.
தேன் துளிர்க்கும் நறுமணம் வீசுகின்ற மலர் மாலையை அணிந்த இராமன் தன் பார்வையிலிருந்து மறைந்து சென்றதும், மனம் என்கிற மதம் கொண்ட யானை கற்பாகிய வரையறையாகிய அங்குசத்தை அழித்துச் செல்லுதலைப் போன்று பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியுடைய சீதாப் பிராட்டியின் பெண்தன்மைதான் எத்தகைய நிலைமையை அடையுமோ! மங்கையர்க்குறிய நாணம் முதலான நால்வகைக் குணங்கள் ஒழிந்தன எனகிறார் கம்பர்.
நன்றி ஐயா.
Post a Comment