Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 22. அங்கியில் பஞ்சு (211-220)

ஞானக் குறள்
***************
3. தன்பால்
**************
22. அங்கியில் பஞ்சு (211-220)

***********************************

211. அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில்
சங்கிக்க வேண்டாஞ் சிவம்.

சிதாகாயமாம் பரவெளியில் இருக்கும் நினைவில் மூலாக்கினியைப் பாய்ச்சினால் அனலிற் பஞ்சுபோல் உடனே சிவம் சோதியாய் வெளிப்படும். ஐயுற வேண்டாம்.

212. மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம்.

உயிர்ப்பை அறியும் உள் மெய்த் தத்துவத்தை அறியாதவர் மனதில் தெய்வ சக்தி இல்லாது சிவம் நீங்கி இருக்கும். மடமையே குடியிருக்கும்.

213. நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.


உந்திக்கமலத்தில் மனதை உதிக்கவிடாது செய்து சிவத்தைக் கருத்தில் நிலைத்து நிறுத்திச் சிந்திக்காதவர்களுக்குச் சிவம் அஞ்சேல் எனக்கூறாது.

214. பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன்.


சாற்றிறங்களைக் கற்றதனாலாய பயன், உருவம் அற்றதாயுள்ள இறைவன் திருவடி காணலே.

திருக்குறள்:

"கற்றத னாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்."

215. தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான்.


தன்னையறிய தலைவனைக் காணலாம். தலைவனைக் கண்டபின் தம்மை அறிய முயலுதல் அறிவுடைய செயலில்லை.

216. அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு.


மனவசைவை அறிந்து உந்திக் கமலத்துள்ளே அக்கினி கலையைப் பாய்ச்ச, பிறப்பறும். (எண்ணங்களறும் என்பருமுண்டு.)

திருமந்திரம்:

"உடம்பு முடம்பு முடம்பைத் தழுவி
யுடைம்பிடை நின்ற வுயிரை யறியார்
உடம்பொ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே."

உடம்பும் = வருந்தும். மடம் = சைவர் வாழும் வீடு.

பிறப்பு முதல் ஒடுக்கம் வரை மாறாதிருக்கும் நுண்ணுடல் ஓய்வின்றி வருந்தும் உடலாயிற்று. அவ்வுடல் இருவினைக்கு ஈடாக அடுத்தடுத்துப் பிறந்திருக்கும் பருவுடலெடுக்கும். இவ்விரு உடல்களில் உள்ளும் ஓடும் உயிர் தவிர, தவிர, இன்னுமொரு உயிர் உண்டு. அவ்வுயிர், இவற்றைக் கருவியாகக் கொண்டு உலகியல் பற்றற்றுச் சிவத்திருவடிப் பற்றுற்று பேறு எய்தச் சிவன் தந்தது. இவ்வுண்மையை உணர்வதே, உடலொடு உயிருக்குள்ள நட்பினை உணர்தலாம். இதனை அறியாதார், தனக்கு வேண்டிய எலும்பு, இறைச்சி புழங்காத சிவமடத்தில் புகுந்து ஒன்றும் கிடைக்காது மயங்கும் நாய் போலவாம்.

இதுகுறித்து சேக்கிழார்:

"மிக்க செல்வ மனைகடொறும் விளையு மின்பம் விளங்குவன
பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க வணிகொண் மடங்கள்தொறும் சைவமேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும்அடங்கநிதியம் தோன்றுவன."

அசபையை செங்கிருதத்தில் "அஜபா" என்பர். அசபை எனில் அசைவு, ஆட்டைப்போல் அசைந்து கொண்டே இருக்கும் மனம். அதையடக்கத் தூலமழியினும் சூக்குமழியாது. அச்சூக்குமத்தொடு சீவனொன்றிவிடும். அசபையை விரித்துக் கூற அனுமதியில்லை. ஆர்வமுடையவர்கள் (ஞானாசிரியனின்றி)அசபையைச் செய்து ஆபத்தைத் தேடலாகாதென்பதே நோக்கம்.

217. இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்த மாம்.


மனவசைவை நீக்கி ஞானவினை செய்வோருக்கு எப்பொழுதும் சச்சிதானந்தமே (சத் + சித் + ஆநந்தம்).

திருமந்திரம்:

"பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்திருப் பார்க்கு
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே."


பொறிக்கப்பட்ட = அடைக்கப்பட்ட.
அந்நிலம் = கொப்பூழ். மாம்பழம் = சிவக்கனி.
நாட்டத்தை = நாடுதலை. தூங்கல் = உண்டு உறைதல்.
மீட்டு = புறஞ்செலவிடாது அகமுகப் படுத்தி.
நயனத்திருப்பார்க்கு = முக்கலையொன்றும் பயிற்சியில் இருப்பவர்க்கு.
தோட்டம் = திருவருள் வெளி. தேட்டற்ற = மேல்செல்லுதலற்ற.

உடலில் பூட்டி அடைக்கப்பட்ட உயிர்ப்பைக் கொப்பூழில் அடக்கி வைத்தல் வேண்டும். நினைவின் எண்ணத்தை அதன்மேலேயே நாட்டி வைத்து இருப்பவர்கள் தோட்டத்து மாம்பழம் (நமசிவாயப் பழம்) போல் இனிக்கும் திருவருளுடன் இணைந்திருக்கலாம்.

218. துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.


மரணம் = உற்பத்தி; பிறப்பு = லயம்;

உடலில் துரியங் கடந்த துரியாதீதத்தில் சோதி கண்டால் பிறப்பு இறப்பு (எண்ணங்களின் உற்பத்தி, மறதி இல்லை).

219. மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும்.


உடலினுள் நினைவில் சந்திரகலை பரிணமிக்க, விதிக்கப்பட்ட கால அளவுகளை எளிதாகக் கடக்கலாம்.

220. சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து.


சீவனைச் சிவத்துடன் ஒன்றித்துச் சிவத்தைச் சிவலிங்கமாகக் காணும் ஒருவனின் பாவ வினைகள் நாசமாகும்.

0 Comments: