ஞானக் குறள்
****************
3. தன்பால்
*************
21. குருவழி (201-210)
*************************
201.தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன்.
தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் தவசிகளின் நினைவில் அரனாகிய சிவம் நிலைத்து நிற்கும்.
202.சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.
சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தனையானது சிவம் செய்யும் சிந்தனையாக மாறிவிடும்.
மணிவாசகப் பெம்மான் (திருவாசகம்):
"சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினை நின்றிருப்பாதப் போதுக்காக்கிவந்தனையுமம் மலர்க்கேயாக்கி வாக்குன்மணி வார்த்தைக் காக்கியைம்புலன்களார வந்தனை யாட்கொண் டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடல்மலையேயுன்னை தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச் சுடரே இரண்டுமிலி தனியனேற்கே."
203.குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.
ஞானாசிரியனால் திருவடி ஞானம் பெறாதோருக்கு சிவம் உருவற்று நிற்கும். அப்படியெனில், திருவடி ஞானம் பெற்று, முக்கலையொன்றித்து ஞானவினை செய்யும் தவசிகளுக்குத் தன் சிந்தையிலேயே உணர்வாய் நிற்குஞ் சிவம் என்பதாம்.
204.தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.
ஞானவினையின் மருமங்களையறிந்த ஞானாசிரியனின் (சந்=ஞானஒளி; நிதி= புதைந்துள்ள மெய்ப்பொருள்; ஒளிமிகு பொருள்) சந்நிதி இல்லையெனில், வலையாகிய உலக மாயைகளில் அகப்பட்டு மானாகிய சீவன் அலைக்கழிக்கப்படும்.
மாணிக்கவாசகப் பெருமான்:
"உரியனல்லே நுனக்கடிமை யுன்னைப்பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேனாயே னின்னதென் றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோ னொருவன் கண்டு கொளென்றுன் பொய்கழலடி காட்டிப்
பிரியேனென்றென் றருளியவரும் பொய்யோ வெங்கள் பெருமானே."
205.நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்.
ஐயந்திரிபறக் கற்று அதன் வழி நிற்கும் ஞானாசிரியன் முறைப்படி சுட்டிவிளக்க, அதைச் சலனமில்லாது ஆற்றுபவனுக்குச் சிவம் பிரிவற்றிருக்கும்.
திருமந்திரம்:
"தொழிலறி வாளர் சுருதி கண்ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழிய றிவார் நல்வழி யறிவாள
ரழிவறிவார் மற்றையல்லா தவரே."
தொழில் = ஞானவினைகள். சுருதி = மறை, ஆகமம்.
பழுது = குற்றம். வழியறிவார் = வழிபட அறிவார்.
அழிவறிவார் = அழிவினைச் செய்யும் வழி அறிவார்.
தமிழ் மறைகளையும், ஆகமங்களையும், கண்களாகக் கருதும், குற்றமற்ற சிவகுருவின் திருவடி சார்ந்து அவரை வழிபாடு செய்தலை அறிவோர்கள் வீடுபேறு அடையத்தக்க நன்னெறியாளர்கள். இந்த உண்மையை அறியாதவர்கள், பிறந்து இறந்து உழலும் அழிவு நெறியினையே அறிவர். ஆகவே, வீடுபேற்றுக்கு உரியவர் அல்லர்.
தாயுமானவர்:
"குருமொழியே மலையிலக்கு மற்றமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்."
பட்டினத்தார்:
"குருமார்க்க மில்லாத குருடருடன் கூடிக்
கருமார்க் கத்துள்ளே கருத்தழிந்துகெட்டேனே."
சீடாசாரம்:
"கட்டுண்ட கள்வன்றானே கட்டினை விட்டுக்கொள்வான்
விட்ட வேதனையைத்தீர்த்துவிடுவிப்பானொருவன்வேண்டு
மட்டமா சித்தியோக வறிவினா லறியலாமோ
தட்டடறப் பாசந்தீர்க்கத் தற்பர குருவே வேண்டும்."
206.நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.
சச்சிதானந்த சுவாமிகள்:
"ஏட்டைப் படித்திங் கிறுமாப்பா லென்னபயன்
நாட்டம் படித்தன்றோ நாமறுப்பம் - வாட்டமெலாம்
எச்சனனத் தேனு மிரும்பொருளை நாடாத
எச்சத்தா லன்றோ இவை."
அருணகிரியந்தாதி:
"கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதினாற் போமோ பிறவிநோய் - உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதரடி தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி."
சிற்றம்பல நாடிகள்:
"தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ."
சச்சிதானந்த விளக்கம்:
"கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
குருபாதம் வெளியாகுமோ."
பிரம்மகீதை:
"வேதமாகம புராணமிருதிகள் வேறா மார்க்க
ரோது மாகமங் கடர்க்கமொன்றோடொன் றெவ்வாதாகு
மீதெலா மொக்கப் பண்ணலாவதன் றிதயதுக்க
மாதலா லனைத்தும் விட்டிங்கனைத்து மாஞ்சிவத்தை பார்ப்பான்."
திருவருட்பிரகாச வள்ளலார்:
"சதுமறையாகம சாத்திரமெல்லாஞ் சந்தைப்படிப்பு நஞ் சொந்தப்படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தின் சாகாவித்தையை கற்றனனுத் தரமெனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனனென்றும்பொன்றாமைவேண்டிடிலென்றோழி நீதான்
அதுவிது வென்னாம லாடோடிபந்து வருட்பெருஞ்சோதி கண்டாடோடி பந்து."
சிவபோதசாரம்:
"கற்குமடப் பட்டுமிகக் கற்றவெலாங் கற்றவர்பாற்
றற்கமிட்டு நாய்போலச் சள்ளிடவோ - நற்கருணை
வெள்ள மொடுங்கும் விரிசடையார்க் காளாகி
யுள்ள மொடுங்க வல்லவோ."
சசிவன்ன போதம்:
"ஆகம விதங்க ளறிவார்கள் பரமறியார்
யோகமொ டுறங்கு மவரேபர முணர்ந்தோர்
புராண மிதிகாச மெவையும்பொருளனைத்தின்
பிராண நறியா துளவிடத்திவை பிதற்றே."
207.நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.
நினைப்பு, மறப்பற்ற நெஞ்சத்தில் சிவம் வாழும்.
208.ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம்.
முக்கலை யொன்றித்தலாகிய ஞானவினை செய்யாதவரிடம் எப்போதும் சிவம் சேராது.
திருமந்திரம்:
"மந்திர மாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவது
மெந்தை பிரான்ற னிணையடி தானே."
உடல்நோய், உளநோய், ஊறு, பகை, பிறப்பு முதலிய எல்லாவகை துன்பங்களையும் அறவே அகற்றும் மந்திரம், எம்பிரானின் திருவடிகளே. திருவடி என்பது "சிவயநம". உயிராம் யகரத்தின் முன்னும் பின்னுமுள்ள வகரமும் நகரமும் சிவனின் திருவடியாம். வகரம் வலது திருவடியாகிய கதிரவன். நகரம் இடது திருவடியாம் திங்கள். இவ்விணையற்ற திருவடிகளே, மந்திரம், மாமருந்து, தந்திரமாகிய நூலுணர்வு, தானங்களாகிய ஒளி நிலைக்களங்கள். உயிர், உணர்வு, உள்ளம், உடல், உடை, உறையுள் ஆகியவற்றிற்கு அழகு தருவதும் திருடிகளே. தூயநெறியும் இதுவே.
"இதயத்தும் நாட்டத்து மென்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நநதி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே."
அடியேன் உள்ளத்தும், கள்ளமிலாக் கண்ணகத்தும் உச்சியிலும் தன் திருவடி பதிப்பித்தான் நந்தியாம் சிவன். திருவடிப்பேறாகிய கதி அமைத்தவாறும், சிவகுருவாய் எளுந்தருளி மெய்ப்பொருள் உணர்த்தியவாறும், திருமறை ஆகமங்கள் கூறியவாறும், அவன் அருள் இன்றி உயிர்களின் சுட்டறிவு சிற்றறிவுகளால் வெளிப்படுத்திக் கூற இயலாது.
209.நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
பார்வையை செலுத்தவியலா இடத்தில் பார்வையாகிய நோக்கை சலனமின்றி நிலைநிறுத்த சிவம் நீங்காது(ஞானாசிரியன் தேவை).
210.பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
ஐந்து இந்திரியங்கள் சேரும்போது உண்டாகும் பெருமை பொருந்திய (ஆக்ஞா சக்கரத்திலிருந்து) நாதசக்தியை எழுப்பி அதனோடு ஒன்றிய மனுவைச் சிவமழைத்து அஞ்சாதே என்று சொல்லும்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 21. குருவழி (201-210)
Posted by ஞானவெட்டியான் at 12:00 PM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment