ஞானக் குறள்
****************
2. திருவருட்பால்
*********************
20. சதாசிவம் (191-200)
*****************************
191.பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
எட்டுத் திக்குகளும், மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத் திக்குகளாயின. உலகமெலாம் உள்ள தூல சூக்குமங்களில் சிவம் வியாபித்து கலந்து நிலைத்திருக்கும்.
192.விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளியாகிய ஆதவன் (ஆ+தவன்) போல் உடலினுள்ளே சிவஒளி வியாபித்துள்ளது.
வாசிட்டம் மாவலி கதையில் மாவலிக்கு சுக்கிரன் சொன்ன முடிவு:
"வருங்கற்பகவிண் விரைந்தேக வந்தேன்பல சொல்லியும் பயனென்
சுருங்கச் சொல்லும் பயன்கேளாய் தோன்ற விளங்குள்ளது வுஞ்சித்
தொருங்கப் புறத்துஞ்சித் தெல்லையுள்ள துஞ்சித் தெல்லையற
நெறுங்குற்றதுஞ் சித்து யான்சித்து நீசித்துலக நிறைசித்தே."
193.ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்.
ஆகம் = உடல்;
தேகம் தேகி இவைகளைக் கட்டியிருக்கும் ஆசை; உடல், சீவன், ஆகியவைகளைக் கட்டியிருக்கும் ஆசை ஆகியவைகளில் சிவம் தானேயாகிக் கலந்து நிற்கும்.
194.வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்.
உடலிலுள்ள பத்துவித வாயுக்களாயும், மனமாயும், உயிராயும், இன்னும் அவற்றினோடு கலந்திருக்கும் கலைகளாயும், ஆய்ந்தறிந்த பிரணவ உச்சியில் சிவமிருக்கும்.
திருமந்திரம்:
"உணர்வு மவனே யுயிரு மவனே
புணர்வு மவனே புலவி யவனே
யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான்
துணரின் மலர்க்கந்தந் துன்னி நின்றானே."
புலவி = பிணக்கு. துணர் = கொத்து.
இணரும் = இதயத்தில் கலந்திருக்கும்.
சிவனும், அவனின் அடிமையாம் உயிரும், மலரும் மணமும் போல இருக்கும். அதனால், உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணரும் புணர்வும் அவனே, புலப்பும் அவனே. உள்ளத் தாமரையாகிய பூங்கொத்தில் இடையறாது கலந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தாலன்றி, எழுந்து மொழிவதாகிய சொல்லால் கூற முன்னிலையாகிய எண்ணத்தால் எண்ணவும் ஆகான்.
"உண்ணின் றொளிரு முலவாப் பிராணனும்
விண்ணினின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கும் வாயுவுமாய் நிற்குங்
கண்ணின் றிலங்குங் கருத்தவன் றானே."
கருத்தவன் = கருதும் பொருளானவன்.
உயிரின் உள்ளத்தே நின்று இடையறாது இயங்கும் உயிர்ப்பும் அவனால் இயங்குகின்றது. அதனால் அவ்வுயிர்ப்பும் சிவனே. வானத்தே வலம்வரும் விரிந்த கதிர்களையுடைய கதிரவனும் அவனே. மண்ணுலகத்தே ஒலித்தசைத்துத் திரட்டும் காற்றும் அவனே. உயிர்களின் கண்களில்(நெஞ்சகத்தே) நின்றியக்கும் கருத்தும் அவனே.
தாயுமானவர்:
"அங்கிங்கெ னாதபடி எங்கும்பிர காசமா யானந்த பூர்த்தியாகி அருளொடு
நிறைந்ததெது தன்னருள் வெளிக்குள்ளே யகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக் கிச்சைவைத் துயிர்க்குயி ராய்த் தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாம நின்றதெது சமயகோ டிகளெலாந் தன்தெய்வ மென்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது வெங்கெணும் பெருவழக்கா
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா யென்றைக்கு முள்ளதெதுமேல்
கங்குல்பக லறநின்ற வெல்லையுள தெதுவது கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவொளியதாகவுங் கருதியஞ்சலி செய்குவாம்."
195.எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
கணக்கற்ற பிறவிகளில் (யோனி) பலவாறாக, எங்கும் பரவி, உடலில் நிறைந்து நிற்கும் சிவம்.
196.ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.
மூல வித்தாகி, அதிலிருந்து கிளர்ந்தெழும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி நிற்கும் சிவம்.
திருமந்திரம்:
"விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தைப் பல்லுயிர் மன்னுயி ருக்கெல்லாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையுஞ் சிவோகமே."
விந்துவும் நாதமும் கட்டுப்பட்டு விளைய விளைந்தது உயர்திணை. திருவருளால் தோன்றிய பல உயிர்கட்குள்ளும் ஆறறிவு நிறைந்தது உயர்திணை. உயிர்கட்கு முதலும் முடிவுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை: "சிவசிவ"; "நமசிவய". இம் மந்திர வலிவால் விந்துவை கட்டியவர்களுக்கு சிவோகமே விளையும்.
197.மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம்.
எல்லா உயிருக்கும் மூலம் விந்து. விந்து வெளிவந்தால் முடிவு. மூலத்திற்கும், முடிவுக்கும், அதற்கு நடுவேயுள்ள காலத்திற்கும் விந்துவே ஆதாரம். ஆக, எல்லா உடலிலும் விந்து சக்தியாகச் சிவம் நிலைத்துள்ளது.
198.மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்.
பூமியில் உண்டாயிருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகிச் சிதாகாயத்தில் இருக்கிறான்.
199.தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன்.
ஆதி (தொல்லை = பழமை) வித்துவாகிய விந்து உடலோடு கலந்து உள்ளது. அதைப் பிரித்து மேலேற்ற, அதன் தோற்றமே சிவத்தின் இருப்பிடமாகிவிடும். அதுவே சிதாகாயம்.(சிதா + காயம் = அறிவு உடல்)
இக்குறளுக்கு விளக்கம் ஆயிரம் கூறலாம். ஆகவே, விரிக்காது கீழ்க்கண்ட நூலாதாரங்களை இட்டிருக்கிறோம். அவரவர் நிலைக்குத் தக்க மெய்ப்பொருள் கண்டு தெளிக.
திருமந்திரம்:
"தானே திசையொடு தேவருமாய் நிற்குந்
தானே யுடலுயிர் தத்துவமாய் நிற்குந்
தானே கடல்மலை யாதியுமாய் நிற்குந்
தானே யுலகிற் றலைவனு மாமே."
சிவபெருமான் கலப்பினால் பத்துத் திசையும் பற்றுடைத் தேவருமாய் நிற்பான். அதுபோல், உடலாய் உயிராய் ஏனைய தத்துவங்களுமாய், கடலும் மலையுமாய், எல்லாப் பொருள்களாயுமாய் நிற்பான். பொருள் தன்மையால் சிவன் இவை அனைத்திற்கும் முதல்வனாய் நிற்பான்.
சிவவாக்கியர்:
"ஆதியான தொன்றுமே யனேகனேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வஜீவ னானபின்
ஆதியோடு கூடிமீண் டெழுந்தசென்ம மானபின்
சோதியான ஞானியாருஞ் சுத்தமா யிருப்பரே."
ரிபு கீதை:
"அருளுருவாம் பரமசிவனனந்த சக்திக்காதாரமாக வமர்ந்திருப்பதாலே சருவசக்காரணமா மவ்வீசற்குச் சமமேனும் மல்லதவற் கதிகமேனும் ஒருபொருளு மிலையதனா னன்றோன்றானே யோதுமு பரதான - நிமித்தங்களாவன்
கருதிய யிவ்வீசற்கு மேலாய்வேறோர் காரணமு மொருக்காலு
மெங்குமில்லை."
சொரூபசாரம்:
"சிற்சொரூபந் தானெ செகசொரூப மானவெலாந்
தற்சொரூப காரமாச் சாற்றவே - பொற்சொரூப
மச்சுருவாம் போல வதுவதுவாய்த் தோற்றுமொரு
சொச்சொரூந் தானெ துணை."
திருவாய்மொழி:
"திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவதுமா யவையவை தொறும்
உடன்மிசை யுயிரெனக் கரந்தெங்கும்பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையுண் டசுரனே."
ஞானவாசிட்டம்:
"அத்தமியாத சோதிய ருக்கனா யளவிலாதாய்
மெத்திய பினியிலாதாய் மேவரும் பிறப்பிலாதா
யெத்தலங்களிலு மென்று மியாவுமா யாவுஞ்செய்து
முத்தியுமாகி யோங்குமுதற் பரம்பொருளொன்றுண்டு."
சிவஞானபோதம்:
"அவனவள துவெனு மவைமூ வினைமையின்
றோற்றியதிதியே யொடுங்கி மலத் துளதா
மந்தமாதி யென்மனார் புலவர்."
திருவாசகம்:
"பூதங்க ளைந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்க ளனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கொடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்க டொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே."
(விளங்குதில்லை = விளங்கவில்லை அல்ல; விளங்கு + தில்லை)
கர்நாமிர்தம்:
"திரைநுரை குமிழியெல்லாந் திரைகடற் றோன்றுமாபோ
லுரையுயிர் மாயையாக்கை யுனதிடையுதிக்கக்கண்டேன்
பரைதிரு வுருவவாகிப் பசுத்தொருங் குடியிருந்து
திருமறுமார்பன் போற்றுந் திருப்புலி வனத்துளானே."
சூதசங்கிதை:
"பரத்துவமாய்த் தத்துவங்களெவைக்கும் பகர்தத்துவமாகி
வரமுற்றிடுசிற் சத்தியுமாய் மருவுசட சத்தியுமாகி
யரவுற்றிடுமச் சத்திகடம் பேதங்களுமா யொளிர்கின்ற
வரவச்சடையோ னெவனவனை யடியேன் போற்றித் துதிக்கின்றேன்."
இத்துடன் நீங்கள் அலுப்புறாவண்ணமும், விரிவஞ்சியும் விடுத்தனம்.
200.நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.
இயங்கு திணை, நிலைத்திணை ஆகிய எல்லா அண்டங்களிலுள்ள அனைத்து உருவங்களிலும் சிவம் சீவனாகி நிலைத்து நிற்கிறது.
********************************************************************
இத்துடன், இன்னல் பல வந்திடினும், ஏகஇறை அருளால் "திருவருட்பால்" முற்றிற்று. "தன்பால்" தொடரும்.
- ஞானவெட்டியான், திண்டுக்கல்(தமிழகம்)
********************************************************************
Sunday, December 30, 2007
ஞானக் குறள் -- 20. சதாசிவம் (191-200)
Posted by ஞானவெட்டியான் at 11:52 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//திருவருளால் தோன்றிய பல உயிர்கட்குள்ளும் ஆறறிவு நிறைந்தது உயர்திணை//
இப்படி அருமையாய் கிடைத்த உயர்திணையை, மனிதர் எல்லாம் உயர் திணையாகத் தொடர்ந்து வைத்துக் கொள்ள முயன்றால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!
பதிவுக்கு நன்றி ஞானம் ஐயா!
//முதலும் முடிவுமாகிய அருந்தமிழ் மந்திரம் இரண்டு. அவை: "சிவசிவ"; "நமசிவய"//
ஐந்து பஞ்சாட்சரங்கள் என்று சொல்வரே! அவை என்னவெல்லாம் ஞானம் ஐயா?
நம சிவாய,
சிவாய சிவ,
சிவ சிவ,
என்று சில கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் உறுதியாக அறிந்தேன் இல்லை!
அதற்குத்தான் இங்கு வழி சொல்லுகிறோம். ஆறறிவை நிலைப்படுத்தியபின் தானே ஏழாம் அறிவுக்குச் செல்ல முடியும்.
அன்பு இரவி,
//ஐந்து பஞ்சாட்சரங்கள் என்று சொல்வரே! அவை என்னவெல்லாம் ஞானம் ஐயா?//
தனி இடுகையாகத் தருகிறேனே!
Post a Comment