ஞானக் குறள்
**************
3. தன்பால்
*************
24. கண்ணாடி (231-240)
***************************
231. கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.
உடலினுள்ளிருக்கும் குண்டலிக்குள் உறைந்திருக்கும் ஒளியானது, சூரியவொளியில் வைத்த கண்ணாடிக்குள் தெரியும் சூரியனின் உருவைப்போல் இருக்கும்.
232. அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு.
ஐம்புலன்களின் சக்திகளைப் பிரணவத்தில் சேர்க்க வகையறிந்தால், உடலிழக்கவேண்டாம்.
திருமந்திரம்:
"பாய்ந்தன பூதங்க ளைந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொ ளானந்த மென்னு மருள்செய்யில்
வேய்ந்துகொண் மேலை விதியது தானே."
விதி = முறை. படர்க்கின்ற = படர்கின்ற.
ஐம்பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்தே பாயும் தன்மையுடைத்து. அங்ஙனம் பாய்வதைத் திருவருளால் அகற்றி, சிவ மந்திரத்தின் உதவி கொண்டு திருவடி உணர்வாகிய கட்டுத் தறியில் கட்டிப் பூட்டவேண்டும். அப்படிச் செய்தவர்க்கு, சிவன் திருவடிப் பேரின்பம் என்னும் பெரும் பேரருளைத் தருவான்.
"கிடக்கு முடலிற் கிளரிந் திரிய
மடக்க லுறுமவன் றானே யமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கி னடக்கும், நடக்கு மளவே."
விடக்கு = உடல். அமரர் = விரும்பத் தக்கவர்.
நடக்குமளவு = உயிர்ப்பு இயங்கும் வரை.
இரண்டு = அருந்தல், பொருந்தல். அமர்வு = விருப்பம்.
அனைத்து உயிரும் உய்யும் வண்ணம் சிவனால் தரப்பட்ட உடலில் உள்ள பொறிகள் அந்நன்மைக்குத் துணையாகவே அமைக்கப்பட்டுள்ளன. மலச்சார்பினால் அவைகள் தீய வழிகளில் செல்கின்றன. அவ்வழியில் உயிராகிய நாமும் செல்லாது நலச்சார்பால் சிவனின் திருவடிக்கு ஒப்புவித்து மீளா அடிமையாய் வாழ வேண்டும். இதுவே புலனடக்கமாம். புலனடக்கம் உள்ளவரே புலவர். புலவரால் விரும்பப் படுபவர் அமரர். உடல் அருந்தல், பொருந்தல் ஆகிய இருவின்பத்திலும் ஈடுபட உயிர்ப்பு வீணாகும். அவ்வுயிர்ப்புள்ளவரை உடலும் நடக்கும்.
233. நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.
நாபியாகிய உந்திக்கமலத்தில் முக்கலையொன்றி அசைவற்று நிற்க, உடல் சாகாது.
நாபி = பிரணவ மத்தி.
திருமந்திரம்:
“உந்திக்கமலத் துதித்தெழுஞ் சோதியை
யந்திக்கு மந்திரமாரு மறிகிலர்
அந்திக்கு மந்திரமாரு மறிந்தபின்
தந்தைக்குமுன்னே மகன் பிறந்தானே.”
அந்திக்க = வந்திக்க, வணங்க.
படைப்புக் களமாம் கொப்பூழில் தோன்றிச் சுடர்விட்டுக் கிளம்பும் ஒளிப்பைழம்பை வணங்கி வழிபடும் முறையினை யாரும் அறிகிலர். அதை அறிந்தால், தந்தையாகிய சிவத்திற்கு முன் ஆவியாகிய மகன் தோன்றுவான். "சிவயசிவ" எனும் திருவைந்தெழுத்தில் சிகரத்துக்கு முன் யகரம் நிற்கும் நிலையினையே தந்தைக்குமுன் மகன் பிறந்தான் என்பதைக் குறிக்கும். கொப்பூழுக்கு முன்னிடமாகிய மூலத்தில் ஓம் மொழிப் பிள்ளையார் தோன்றியதைக் கூறுதலும் ஒன்று.
"நாவியின் கீழது நல்லவெழுத் தொன்று
பாவி களத்தின் பயனறிவா ரில்லை
யோவிய ராலு மறியாவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தாரே."
நாவி = நாபி; கொப்பூழ். பாவிகள் = தீவினையாளர்.
ஓவியர் = படைப்போன் முதலிய தேவர்.
கொப்பூழின்கீழ் முலத்தே திகழும் ஒரு நல்ல எழுத்தாம் ஓங்காரம். சிவசிவ எனச் சொல்லாத தீவினையாளர் இதன் பயனை அறியார். படைப்போன் முதலிய தேவர்களாலும் அறிதல் அரிது. அம்மையொடு அப்பனும் ஆங்கே திகழ்கிறான்.
234. கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.
கண்டமாகப் பிரிதிருக்கும் அகண்டமாகிய கண்களினுள்ளே ஞானாசிரியனால் சுட்டப்பட்ட இடத்தில் ஒளியை நிலைத்துக் காண பொன்னிறமாகிய உடலையடையலாம்.
235. சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.
இடது திருவடியாகிய சந்திரனில் உள்ளே அக்கினி கலையைச் எழுப்பிப் பொருந்தும்படி செலுத்தத் தூல உடலானது சத்தி நடுவிலோடி ஆகாயத்தையொக்கும்.
236. ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன்.
தன்னைத் தவிர யாருக்கும் தெரியாத ஓங்கார உருவத்தைக் கண்டுணர்ந்தால், அவனே இறைவனாம்.
237. வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.
வண்ணமற்ற ஓங்கார உருவையறிந்து உணர்ந்தபின், அங்ஙனம் உணர்ந்தவனின் உடல் தேவர்களின் உடலை ஒத்திருக்கும்.
238. நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு.
நெற்றிக்கு நேரே மேல்பாகத்தில் (தலைக்கு மேல்) வண்ணமற்ற ஒளிகாணில், தூல சூக்கும உடல்கள் அழியாது.
239. மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு.
மா = பெருமை பொருந்திய
தூவெளி = தூய சிதாகாயம்
மனத்தை அசைவற்ற நிலையில் இராப்பகலற்ற இடத்தில் நிலைத்து நிற்கச் செய்து பழகிவர, உடலில் முதுமை வராது.
240. சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.
முக்கலையும் பிரணவத்தொடு ஒன்றி மனனம் அழிய உடலழியாது.
திருமந்திரம்:
"அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேல்
குமழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமனில்லை நற்கலை நாளில்லை தானே."
தற்சுடர் ஐந்து = சிவம், சத்தி, நாதம், விந்து, சீவன்.
சமைய = பொருந்த. தண்டு = நடுநாடி. கலை = நட்டு.
ஓட்டுதல் = செலுத்துதல். தரித்தல் = நிலைத்தல்.
நாள் = நாள்கோள்.
மதியமுதப் பெருக்கு மிக்குவரும் ஆற்றங்கரையாம் புருவநடுவின்மேல் தோன்றும் குமிழியகத்து சுடர் ஐந்தினையும் ஒருங்கு கூட்டி நடு நாடி வழியாக உயிர்ப்பினைச் செலுத்தி இருப்பவர்களை நமன் அணுகான். கலை நாள் கட்டுறுத்தும் பிணிப்பில்லை. உடல் அழியாது வாழ்வர்.
"இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி யுணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே."
இடக்கை = இடகலை. வலக்கை = பிங்கலை.
துதிக்கை = சுழுமுனை; நுதிக்கை; முனையுள்ள கை.
இடநாடி வலநாடி வழியாகக் கீழிறங்கும் அமுதை மாற்றி மேலேற்றி, உள்நாக்கைத் துதிக்கை போல் வளைத்து நடுத்துளை தவிர மற்றவற்றை அடைத்து, நடுத்துளை வழியக அருந்துவோர்க்கு இறப்புக்கு அஞ்சிச் சோர்வு உண்டாகாது. நித்திரையே எம தூதன். ஆகவே நித்திரை நீக்கி இடையறாது சிவன் திருவடியை எண்ணும் அடியார்க்கு இறப்பும் நேராது. எண்ணும்வரை உடலோடு வாழலாம்.
ஞான வாசிட்டம்:
"எனதுமனம் பிராணசமாதியினாற் சொன்னவிவ் வொழுங்காநின்
மலதத்துவத்தேயென்றுந்
தனியிடர்தீர் நெறியிதுவாமெந்த நோக்கந் தனைப்பற்றிச் சென்றதுமேல்
வருவதெண்ணே
னனிநிகழ் காலத்தியல்பி னண்ணுகின் றேனா னிதுபெற்றேன்
பெறுவதிதுவென்றேண்ணேன்
முனிவரானேயதனாலே நோயொன்றின்றி முடிவுற்நீ டியிர்பெற்றேன்
மோகமற்றேன்."
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 24. கண்ணாடி (231-240)
Posted by ஞானவெட்டியான் at 12:09 PM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம்//
தமிழும் தத்துவமும் எப்படி விளையாடுகிறது இந்தப் பாடலில்!
நீங்கள் சொன்ன பின்னர் தான் யோசித்துப் பார்த்தேன்! சிரஞ்சீவியர் ஏழு பேர்; அவர்கள் அனைவரும் இப்படி யோக மார்க்கமாக இருப்பவர்கள் தான்! அதனால் தான் நித்ய சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் போலும்!
அன்பு இரவி,
தமிழே இனிமை; உண்மை;தத்துவம்.
இருப்பது இந்த ஒரு வழிதானே!
Post a Comment