22. காலை வட்ட மாலை வட்ட மாகி நின்ற
............. கதிர் முனையிற் சுருதி முனை யாடுஞ் சோதி
நீல வட்டங் கொண்டெழுந்து கலையெண் ணான்கும்
............. நின்றிலங்கு மாக்கினையி லிதழிரண்ட
ஞாலமதி லாதியந்த ரூப மான
............ நற்கமல மாயிரத்தெட்டிதழின்மேலும்
ஆலவிட முண்ட சதா சிவனைப் போற்றி
.......... யம்பிகையின் கமலபாத மர்ச்சித் தேனே.
வட்டமாய் ஒளிவீசும் கதிரவனின் இருப்பிடத்திலே மந்திர(சுருதி)த்தின் முனையில் நீலவட்டமாய் நின்றாடுஞ் சோதி, 64கலைகளும் நிலைபெற்று விளங்கும் ஆக்கினையாம் இரண்டிதழிலும், உலகில் ஆதியந்தமான ஆயிரத்தெட்டிதழின் மீதும் வீற்றிருக்கும் ஆலகால விடமருந்திய சதாசிவனைஇப் போற்றி வணங்கி அம்பிகையின் தாமரையொத்த திருவடிகளை அருச்சித்தேனே.
திருமந்திரம்:
"நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலிமேல் நின்ற குறிகள்(அக்கரங்கள்) பதினாறு
மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே."
பிரபுலிங்க லீலை:
"இரண்டோ டிரண்டு மூவிரண்டை யிரண்டா றிரண்டு மீமிசையெண்
ணிரண்டோ டிரண்டு கொண்டிருந்த இதழ்ப்பங் கயங்கள் கடந்து
இருந்த குளத்தின் மேலோரா யிரந்தோட் டமல கமலமிசை போய்
யிருந்த சோதி தனைக்கண்டெம் எண்ண முடிப்பே மெனவெழுந்து."
போகர்:
"மேலேறி யிரண்டுபுரு வத்தி னூடே
மிகையான அண்டம்போல் நிற்கு மப்ப
வாலேறி வட்டமாம் வீடு போல
வளையமொன்று இரண்டிதழ்தான் எரஸ்ரீ யாகும்
ஆளேறி அங்கெனுமட் சரத்தி னூடே
ஆகாச பூதமாம் பூத பீசம்
ஆலேறி மனோன்மணி சதா சிவன்றான்
அவத்தைதான் சாக்கிரத்தின் வீடு மாமே."
Friday, December 28, 2007
22. காலை வட்ட மாலை
Posted by ஞானவெட்டியான் at 1:11 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment