ஞானம் எட்டி
***************
21. ஆறுகொண்ட வம்பலத்தி னின்ற சோதி
............. யம்பரமாந் தற்பரத்தை யேறி நித்தம்
வீறுகொண்ட வறுகோண வீட்டின் மேலும்
.......... விளங்குமிதழ் பதினாறு மேவு பீடம்
பேறுபெற்ற மயேசன் மயேசு வரியு மங்கே
........ பேணியவ ரிருவர்பதக் கமலம் போற்றிப்
பாரிலுள்ள வேதமறி யாமல் நின்ற
....... பழம் பொருளைப் பாடுகிறே னாண்டே கேளே.
சமயநெறி கொண்ட சோதியம்பலமாம் ஞான சபையில் எப்பொழுதும் ஒளி(வீறு) வீசும் அறுகோண வீட்டில் உள்ள பதினாறு இதழ் தாமரைமீது அமர்ந்த மகேசன், மகேசுவரி ஆகியோரின் திருவடி போற்றி வணங்கி வேதங்களால் உணரப் படாமல் நின்ற பழம்பொருளாம் ஆதியினைப் பாடுகிறேன் ஆண்டே கேள்.
யோகாதாரங்கள் ஆறு. இதுவே அறுகோணவீடு.
அவை மேலாதரம், கீழாதாரமென இரு வகையாகப் பிரியும்.
கீழாதாரம் ஆறு:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆம்.
இதில் ஐந்தாம் தானமாம் விசுத்தியைக் குறிக்கிறார். "இது அனாகதத்துக்கு 12 அங்குலத்திற்குமேல் கண்டமெனும் தானத்தில் அறுகோண வடிவாயிருக்கும். அக்கோணத்தின் நடுவில் பதினாறு இதழ்களையுடைய மலர்வளையமும், அதன் நடுவே "வ" அக்கரமும் சூரியனைப்போல் ஒளிவிடும். அவ்வக்கரத்தின் மத்தியில் மேகவண்ணத்துடன் மகேசுவரனும் மகேசுவரியும் வசிக்கிறார்கள்" என ஞான சாத்திரங்கள் இயம்புகின்றன. இது வாயுவின் கூறு.
போகர்:
"ஏறவே பன்னிரண்டங் குலமே தாண்டி
ஏற்றமாம் விசுத்தியென்ற தலமு மாகும்
மாறவே அறுகோண வளையம் ஒன்று
மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்."
மலர் இதழ்களும் உயிர் எழுத்துக்களும் சிதம்பர இரகசியமும்:
மூலாதாரம் ...... 4 இதழ்கள் ... 4 அக்கரம்
சுவாதிட்டானம்... 6 இதழ்கள் ... 6 அக்கரம்
மணிபூரகம்......... 10 இதழ்கள் ...10 அக்கரம்
அனாகதம்......... 12 இதழ்கள் ... 12 அக்கரம்
விசுத்தி.............. 16 இதழ்கள் ... 16 அக்கரம்
ஆக்கினை......... 2 இதழ்கள் ... 2 அக்கரம்
விந்துத்தானம்.. 1இதழ் ......... 1 அக்கரம்
ஆக மொத்தம் 51 இதழ், 51 அக்கரம். இவையே சிதம்பர இரகசியம்.
ஞானமெட்டி 84ம் பாவில்:
"முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு
முதலான சுவாதிட்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து
பாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொ றாச்சு
சார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே."
Friday, December 28, 2007
21. ஆறுகொண்ட வம்பலத்தி
Posted by ஞானவெட்டியான் at 1:05 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
இதழ்கள் எனப்படுபவை எவை?என்ன?
காணாதைக் கண்டது போலல்வா இருக்கு நலமா? நீண்ட நாட்களாக காண வில்லை உங்களையும் பரம்ஸையும் இருவரும் இன்று வந்துள்ளீர்கள் வருக வருக இருவரும் பேசிக்கொண்டு வருகிறீர்களா?
ஞான வெட்டியான் ஐயா அவர்களே !
நலமாக இருக்கிறீர்களா ! தமிழ்மணத்தில் உங்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா, படிப்பதற்கு காத்திருக்கிறேன் !
அன்புடன்
கோவி.கண்ணன்
ஐயா,
நலமா இருக்கிறீர்களா? வாருங்கள் ஐயா வாருங்கள்...
ஆகா கனவா இல்லை நனவா !! மீண்டும் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவலாக உள்ளோம்.
அய்யா,
தமிழ்மணத்தில உங்களை மீன்டும் சந்திப்பதில மிக்க மகிழ்ச்சி.
நல்லதொரு பதிவை தந்துள்ளீர்கள்..
தொடர்ந்து எழுதுங்கள் அய்யா.
ஐயா நலமா!
வாருங்கள்; விஜயைப் போல் எனக்கும் இதழ்,அக்கரம் என்பவற்றை விளக்கவும்.
யோகன் பாரிஸ்
அன்பு நண்பர்களே!
உங்களின் அன்புக்கு நன்றி.
சில நாட்களுக்குமுன் ஞான முத்துக்களில் "ஆறு ஆதாரங்கள்" எனும் தலைப்பில் எழுதியுள்ளேனே!
இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் விரிவாக எழுதுகிறேன்.
அன்பு என்னார்,
காணாததைக் கண்டு விட்டீரல்லவா!
வந்துவிட்டேன். இனி தொடர்ந்து எழுதுவேன்.
அன்பு கோவி.கண்ணன்,
நலமே. தங்களின் கரிசனத்திற்கு நன்றி.இனி தொடர்ந்து எழுதுவேன்.
அன்பு தெ.கா,
நான் நலமே.இனி தொடர்ந்து எழுதுவேன்.
அன்பு அம்மா(லெச்சுமிப் பாட்டி),
// ஆகா கனவா இல்லை நனவா !! மீண்டும் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவலாக உள்ளோம்.//
இனி தொடர்ந்து எழுதுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
அன்பு சிவபாலன்,
இனி தொடர்ந்து எழுதுகிறேன்.
Post a Comment