திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
*********************************************
பிள்ளைத்தமிழ் இருவகையாம்.
இவையாவன: ஆண்பற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்.
பிள்ளைத்தமிழில் காப்பு முதல் அம்புலிப்பருவம் ஈறாக ஏழு பருவங்களும் இருபாலருக்கும் ஒன்றே.
மற்ற மூன்று பருவங்கள் வேறுபடும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் - சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் - அம்மானை, நீராடல், ஊசல்
பிள்ளைப்பருவம் களங்கமற்ற நல்லெண்ணத்தையும் அவ்வெண்ணத்தின் வழியே களங்கமில்லா தூய அன்பையும் விளைவிப்பதாம். இவ்வரிய குணங்களைப் பெற விரும்புவோர் உள்ளத்தைப் பிள்ளத்தமிழ்ப் பாட்டுக்களில் செலுத்தல்வேண்டும்.
பருவங்கள்:
காப்புப் பருவம் - இரண்டாம் மாதத்தில் பிள்ளையைக் காக்கவெனத் திருமால், சிவபெருமான், உமையவள், கணபதி, கலைமகள், அரிகரபுத்திரன், பகவதி, ஆதித்தன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் ஆகியோர்மீது பாடப்படுவது.
செங்கீரைப்பருவம் - செங்கீரை ஆடும் பருவம். ஐந்தாம் திங்களில், ஒரு காலை மடக்கி, ஒருகாலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலை நிமிர்த்தி, முகமாட்டும் பருவம்.
தாலப்பருவம் - ஏழாம் திங்களில் தாலாட்டைக் கேட்கும் பருவம். தாலாட்டு எனில் ஒருவகை நாவசைப்பு. தாலாட்டுதான் தால் எனக் குறுகியது.
சப்பாணிப்பருவம் - ஒன்பதாம் திங்களில், இரு கைகளையும் ஒருங்கு சேர்த்துக் கைகொட்டும் பருவம்.
முத்தப்பருவம் - பதினோராம் திங்களில் தாய்தந்தையர் தங்களுக்கு முத்தம் தருமாறு இறைஞ்சும் பருவம்.
வருகைப்பருவம் - பதின்மூன்றாந் திங்களில், நடக்க முயலும் குழந்தையைத் தம்பால் நடந்துவருமாறு பெற்றோர் வேண்டுதல்.
அம்புலிப்பருவம் - பதினைந்தாம் திங்களில், குழந்தையுடன் விளையாட அம்புலியை அழைக்கும் பருவம்.
சிற்றிற் பருவம் - பதினேழாம் திங்களில், சிறுமியர் சிறுவீடு கட்டி விளையாட அதனைச் சிறுவர்கள் தம் காலால் அழிக்கும் பருவம்.
சிறுபறப் பருவம் - பத்தொன்பதாம் திங்களில், குழந்தை சிறுபறை கொட்டி விளையாடும் பருவம்.
சிறுதேர்ப் பருவம் - இருபத்தொன்றாம் திங்களில், சிறுதேர் உருட்டி விளையாடும் பருவம்.
இந்நுலின் ஆசிரியர் பகழிக்கூத்தர். செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவ குலத்தில் பிறந்தவர். தந்தை பெயர் தர்ப்பாதனர்.
பகழிக்கூத்தர் கடும் வயிற்று வலியில் துடிக்கும்பொழுது, திருச்செந்தூர் முருகனை நோக்கி, "வலி தீர்; பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" என்றாராம்.
அப்பன் அருளால் வலி தீர்ந்தது. கூத்தரும் முருகன் சந்நிதியில், புலவர்கள், அடியார்கள், முக்காணிகள் எனப்படும் திரிசுந்தரர்கள் கூடியுள்ள அவையில் இப்பிள்ளைத் தமிழைப் பாடினார். அவையோ, கூத்தரைப் பெருமைப்படுத்தாது விட்டுவிட்டது. கூத்தரும் பெரிதுபடுத்தாது, தன்னிருப்பிடமேகித் தன் வேலைகளைக் கவனிக்கலானார்.
அவையோருக்குக் கூத்தரின் பெருமையுணர்த்த, முருகன் தன் மார்பில் அணிந்திருந்த மாணிக்கப் பதக்கத்தை இரவில் கூத்தரின் படுக்கையில் விட்டுச் சென்றுவிட்டார். விடியலில் மாணிக்கப் பதக்கத்தைத் தேடி, அது கூத்தரிடம் உள்ளதெனத் தெரிந்து, தங்கள் தவறுணர்ந்து அவை கூத்தரைப் பெருமைப்படுத்தியது. சரித்திரம் இவ்வளவுதான் கிட்டியது.
இனி பிள்ளைத்தமிழ்....
Friday, December 28, 2007
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-1
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
பிள்ளைத் தமிழுக்கு மிக அருமையான விளக்கம் ஐயா. மிகச் சிறப்பு. ஒவ்வொரு பருவத்தையும் உணர்ந்து எழுதிக் கொஞ்சிடும் நூல்வகை. அதிலும் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்!
குற்றாலத்தில் அகத்தியருக்கு நேர்ந்தது திருச்செந்திலில் பகழிக்கு நேர்ந்தது. வைணவச் சின்னம் புனைந்தவன் திருக்கோயில் புகுவதா எனத் தடுத்தனர். வெளி மண்படத்திலேயே முருகனை மனத்தெண்ணி பாடியது பிள்ளைத் தமிழ். பிறகு முருகனது பதக்கமே பரிசாகக் கிடைக்க மூடர்கள் திருந்தினர். பகழியும் மதிப்புற்றார்.
அன்பு இராகவா,
ஆமாம்.
எக்காலத்தில்தான் சமயச் சண்டை இல்லை?
தங்களின் பின்னூட்டிற்கு நன்றி
அருமையாச் சொல்லியிருக்கீங்க ஞானம் ஐயா!
ஒவ்வொரு பருவமும் சிறப்புடன் சொல்லி விட்டீர்கள்! அடியேனுடைய பிள்ளைத்தமிழ்ப் பதிவுகளில் பருவ விளக்கங்களை இன்னொரு முறை எழுதாது, பேசாமல் உங்கள் பதிவுக்குத் தொடுப்பு கொடுத்து விடுகிறேன்!
பகழிக் கூத்தரின் ஊர் திருப்புல்லாணி (திருப்புல்லணை)...அவர் செய்திகளையும் செவ்வனே உரைத்து விட்டீர்கள்! நன்றி!!
அன்பு இரவி,
//அடியேனுடைய பிள்ளைத்தமிழ்ப் பதிவுகளில் பருவ விளக்கங்களை இன்னொரு முறை எழுதாது, பேசாமல் உங்கள் பதிவுக்குத் தொடுப்பு கொடுத்து விடுகிறேன்!//
அது கந்தன் கருணை
அன்புடையீர்,
ஆன்மிகப் பதிவுகள் இடுபவர்கள் என்னுடைய குரவஞ்சி.comக்குத் தொடுப்பு(இணைப்பு) கொடுக்கலாம்.
ஐயா,
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிற்றிலக்கியங்களே மிக இனிமை. அதில் பிள்ளைத்தமிழோ சொல்லவே வேண்டாம்.
அன்பின் ஜெயஸ்ரீ,
என்னுடைய பதிவுக்கு முதன்முதலில் வந்துள்ளீர்களென்ன நினைக்கிறேன்.
தங்களின் வருகைக்கு நன்றி.
குழந்தையின் மொழியோ மழலை; அது இனிமைதானே? பிறகு பிள்ளைத் தமிழ் இனிமையாகத்தான் இருக்கும். ஐயமேயில்லை.
முருகா என்றதும் உருகாதா மனம்
மோஹன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உள்ளம் உருகும்வகை பிள்ளைதமிழ்ப் பெருமை
அள்ளித் தெளிக்கும் விதம் அருமையே
அன்பு ஆகிரா,
தங்களின் வருகைக்கு நன்றி.
கொத்துவதோ ஒரு விரல்; அதிலும் நடுக்கம். தொடரவியலாமல் தடுமாறுகிறேன்.
இறைசித்தம் எப்படியோ? அறியேன்.
Post a Comment