Sunday, December 30, 2007

ஞானக் குறள் - 17. உருபாதீதம் (161-170)

ஞானக் குறள்
**************
2. திருவருட்பால்
**********************
17. உருபாதீதம் (161-170)

******************************

161.கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு.

உடலைத் தன் வயப்படுத்தியிருக்கும், கருவாகிய மனம், புத்தி, சித்த, ஆங்காரம் இல்லாது, எண்ணமாகிய கருத்தை நினைவில் அசைவற்று நிறுத்த, அவ்வுடலில் (மோட்ச வீடு) அறிவாகிய உணர்வு உருவற்ற நிலையில் நிற்கும்.

162.பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு.

பிறப்பித்த அந்தக்கரணங்கள் ஒன்றுமில்லாமலும், மற்றபடி உற்பத்தி ஆகாமலும் செய்யவேண்டுமானால், அதற்கு மூலகாரணமான சக்திகளை அவை தங்கியிருக்கும் இடங்களிலிருந்து வேறுபடுத்தி (பேதித்து), பிரணவத்தில் சேர்த்து அல்லது அவைகள் உதிக்குமிடங்களிலிருந்து எதிரான இடத்திற்கு மாற்றி, அசைவற்று இரு.
ஞான விரோதமான தத்துவங்களை நீக்கியும், மறுபடியும் உதிக்கவிடாமலும் செய்வதற்கும் அவற்றின் சக்திகளின் உருவத்தைக் கண்டு அவைகளின் இடத்திலிருந்து வேறுபடுத்தி விடவேண்டும்.

163.உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு.

அஞ்ஞான குணங்களுக்கு மூலகாரணமாக உள்ள உருவங்களை யெல்லாம் அவ்விடத்திலிருந்து பெயர்த்து, குணங்கள் எழாமலிருக்கும்படியான இடத்துக்குப் பூரணமாக மாற்றில் மனுவுக்கு அஞ்ஞான தத்துவங்களினால் ஏற்படுங் குணங்கள் ஒழியும்.

அதாவது, குணங்களின் சூக்கும சக்திகளை மாற்றி விட்டால் குணங்கள் ஒழியும்.

164.கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை

யறுத்துருவ மாற்றி யிரு.


கறுப்பு - வாயு சக்தி
வெளுப்பு - ஆகாய சக்தி
சிவப்பு - அங்கி(அக்கினி) சக்தி
பொன் - பூமி சக்தி
பச்சை - நீர் சக்தி

இச் சக்திகளையெல்லாம் தன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்துப் பூரணமாகப் பிரணவத்தில் சேர்த்து அசைவற்று இரு. அதாவது, ஐம்பூத சக்திகளை அதன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்து அவற்றின் நிறங்களாகிய குணங்களோடு பிரணவத்தில் அடைத்துவிடு.

திருமந்திரம்:

"அஞ்சுள சிங்க மடவியில் வாழ்வன
வஞ்சும்போய் மேய்ந்துதம் மஞ்சக மேபுகு
மஞ்சி னுகிரு மெயிறு மறுத்திட்டா
லெஞ்சா திறைவனை யெய்தலு மாமே."


சிங்கம் = இந்திரியம். உகிர் = நகம் (செல்லுதல்). எயிறு = பல் (பற்றுதல்).

உடல் ஒரு தத்துவக் காடாகவும், புள்ளியாகிய இந்திரியங்கள் ஐந்தும் சிங்கமாகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. இவ்வைந்தும் புறத்தே சென்று அலைந்து, புறப் பொருட்களை நுகர்ந்து பின் அகம் வந்து சேரும். ஐந்து சிங்கத்தின் கூரிய நகத்தையும் பல்லினையும் அறுக்க உறுதியாய்ச் சிவத்திருவடியை அடையலாம்.

இதை, சிவப்பிரகாசர்:

"மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயவா ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை

ஆயவா ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்"

என்றார்.

திருமந்திரம்:

"பாய்ந்தன பூதங்க ளைந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொ ளானந்த மென்னு மருள்செய்யில்
வேய்ந்துகொண் மேலை விதியது தானே."

விதி = முறை. படர்க்கின்ற = படர்கின்ற.

ஐம்பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்தே பாயும் தன்மையுடைத்து. அங்ஙனம் பாய்வதைத் திருவருளால் அகற்றி, சிவ மந்திரத்தின் உதவி கொண்டு திருவடி உணர்வாகிய கட்டுத் தறியில் கட்டிப் பூட்டவேண்டும். அப்படிச் செய்தவர்க்கு, சிவன் திருவடிப் பேரின்பம் என்னும் பெரும் பேரருளைத் தருவான்.

165.அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.

உடலில் உறையும் எல்லா ஞானவிரோதத் தத்துவங்களின் மூல சக்திகளாகிய உருவங்களை எல்லாம் முழுமையாக வேறுபடுத்தி அசைவற்ற நிலையில் மனம் நின்றால், பின்னை(பின்னர்) எண்ணப் பிறப்புக்கள் உதிக்காது (பிறப்பில்லை).

166.நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.

நினைப்பு மறப்பற்ற நிலையிலிருந்து உதிக்கும் குணங்களின் உருவங்களை மறுத்துத் தள்ளி விட்டால் அகத்தவத்திற்கு ஊறுவராது. தனக்குப் பிறப்பில்லை.

167.குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு.

உடலில் உதித்திருக்கும் உருவங்களைக் கண்ணால் பார்த்து உதிக்குமிடங்களை மற்றிவிட்டால் மறுபடியும் உதிக்காது.

168.பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.

உலக வேறுபாடுகளைப் பேசும் வாக்கின் உணர்ச்சியை உண்டாக்கும் சலசத்தியைப் வேறுபடுத்தி அறிவோடு சேர்த்து நிற்பதே வீடுபேறாகும்.

169.பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.

உதித்திருக்கும் அஞ்ஞான குணங்களை நாசம் செய்ய குணங்களின் மூலசத்தியாகிய உருவத்தை இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி பேருவமையற்ற பிரணவ வீட்டில் சேர்த்து அசைவற்றிரு.

170.ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.

உயிர்ப்பின்மை = செயலற்ற தன்மை, கிளர்ச்சியற்ற தன்மை.

ஓசை, உணர்வு, உயிர்ப்பின்மை ஆகியவை அழிய எண்ணங்கள் அழியும். பிறப்பு அறும்.

4 Comments:

Anonymous said...

நேஷனல் ஜியாகரபி பார்க்கும் போது இந்த எண்ணம் தோன்றியது.அது என்ன பல மிருகங்களுக்கு,ஏன் மனிதர்களுக்கு கூட 5 விரல்கள் இருக்கிறது?
இதற்கும் புலன்களுக்கும் சம்பந்தம் உள்ளதா?

Anonymous said...

அன்பின் குமார்,
ஐம்புலன்களுக்கும், ஐந்து கைவிரல்கட்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் ஆதாரப்பூர்வமாக விளக்கினால் மகிழ்வேன்.

Anonymous said...

சார் இன்று வேலை செய்யும் பொக்லைன் என்ற இயந்திரத்திற்கம் ஐந்து விரல் நகம் உள்ளது பாருங்கள்

Anonymous said...

அன்பு என்னார்,
ஐம்புலன்களுக்கும், ஐந்து கைவிரல்கட்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்னும்போது பொக்லைன் இயந்திரத்திற்கு 5 விரல்கள் இருப்பதை எப்படித் தொடர்புகொள்வது - தெரியவில்ல!

பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்.
அதுபோல கைவிரல்களைக் கண்டான்; பொக்லைன் கை செய்தான் -
என்றுவேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.