ஞானக் குறள்
**************
2. திருவருட்பால்
**********************
16. முத்தி காண்டல் (151-160)
************************************
151.மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது.
உட்கரணங்களாகிய மனம், புத்தி, செருக்கு (அகங்காரம்), உள்ளம்(சித்தம்) ஆகியவற்றில் முத்தி கிடையாது.
152.வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்.
வாக்கு வல்லமை உடையோராலும், பெயர் புகழுக்கு ஆசைப் படுபவராலும், ஐயம் முதலியவை நீங்காது மயங்கிக் கொண்டிருக்கும் மதத்தை யுடையோராலும் எழுதப்பட்ட நூல்களாலும் முத்தி கிடையாது.
153.உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம்.
உருவம், அருவம், உணர்வு இவைகள் முத்திக்குக் கிடையாது. "முத்தி" என்பது இராப்பகலற்ற இடமேயாம்.
154.தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது.
உருவற்ற முத்தியானது, உடலில் எங்கும் பரவி, மனமுதிக்கும் இடத்தில் நிலைபெற்று நிற்கும்.
155.பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு.
முத்தியானது, பெண்-ஆண்-அலி என்னும் பெயர் இல்லாததாகி, அறிவு உடலாய்(சிதாகாய) வியக்கும்படி நிற்கும்.
156.அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்.
எல்லா உருவங்களாகவும் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் அறிவாகிய பிரணவத்தை அறியாது நீங்கச் சிவத்தையடைய இயலாது.
157.துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி
அணிதா ரிரண்டு விரல்.
துணி = ஒளியுள்ள;
துன் = பொருந்திய;
தார் = அங்குசமாகிய சுண்டுவிரல்;
கட்டை விரலை ஆட்காட்டி விரலொடு இணைத்து, மற்ற மூன்று விரல்களையும் நீக்கும் சின்முத்திரையைப் போன்றது. ஈங்கு, கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் நடு விரலொடு இணைத்து, மற்ற இரு விரல்களையும் நீக்கும் தந்திரத்தை குருமுகத்தினால் அறிக. (விளக்கவியாலா மருமம்)
158.மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண் டங்காதி நிலை.
அயிர்ப்பு = ஐயப்பாடு;
மயிர் முனையில் பாதியளவு அசைவற்ற மனமும் அறிவும் உண்டானால், அங்கு சிவம் நிலைபெற்று இருக்கும்.
159.தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு.
மனமானது அறிவில் பொருந்தி அசைவற்ற நிலையிலிருப்பின் சிவத்தொடு சேரும். ஆங்கு, சீவர்களிடத்துள்ள மனத்தின் விரிவாகிய உணர்ச்சிகள் நீங்கிவிடும்.
160.உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.
மனுவின் உறக்கம், உணர்ச்சி, பசி ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, ஏமனை(மறலி) எதிர்த்து மரணத்தைத் தள்ளிப் போடலாம். அடுத்த பிறவி நம்பிக்கை உடையவர்கள் பிறவிப் பிணியறுக்கலாம்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 16. முத்தி காண்டல் (151-160)
Posted by ஞானவெட்டியான் at 11:37 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
155யில் அனுபவம் தெரிகிறது.
ஒரு சின்ன வேண்டுகோள்.
படித்ததை அசை போட சில கால அவகாசம் தேவைபடுவதால் (எனக்கு),பதிவுகளை கொஞ்சம் காலம்தாழ்த்திப்போட்டால் நன்றாக இருக்கும்.
அன்பு குமார்,
மன்னிக்கவும்.
சிறிய பாடல்கள்தானே!
கொஞ்சம் சேமித்துக்கொண்டு படித்து அசை போடலாமே!
நான் ஆவணப்படுத்த வேண்டியவைகள்
இன்னும் நிறைய இருக்கிறதே! கைவலியையும் பொருட்படுத்தாது ஒத்தை விரலில் கொத்திக்கொண்டுள்ளேன்.
Post a Comment