ஞானக் குறள்
****************
2. திருவருட்பால்
*******************
18. பிறப்பறுதல்(171 - 180)
****************************
171.தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
"தான் யார்?" என அறிவதற்குறிய கருவியான அறிவாகிய ஓங்காரத்தை உணர்ந்தால் பிறப்பற்ற வீடுபேறு அடையலாம்.
அறிவை அலட்சியம் செய்யாதே!:
வாசிட்டம்:
"பற்றத்தகு வாக்கியப் பொருளைப்பயிறன் நெஞ்சாற் பாவித்தோர்க்
குற்றுப்புகல் சொற்றிரளுள்ளே யொடுங்கும் வெந்தநில நீர்போற்
கற்றுப்பரமப் பொருணோக்கார் கண்ணா மறிவைக் கண்டறியார்
வற்றத்திரணம்போல் வாளாதிரிவர் மனச் செய்கை லெவரும்."
"ஆதலினா லீதொன்றுஞ் செய்வதல்ல வடுத்துளவிச்சகமில்லை யறிவுமட்டு
மேதகுசங் கற்பிதமே வேதாவாகு மெய்யாக வறிவன்றி - வேறொன்றில்லைச்
சேதனமாத் திரத்துதித்த சிருஷ்டியந்தச் சேதனமே வடிவென்று செப்பலாகு
மோதியசெய்வோன் புசிப்போ னிரண்டுமல்ல வுறுபவந்தீர் பிரம்மமே யுள்ளவெல்லாம்."
திருமந்திரம்:
"தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை யறியத் தலைப்படுந்
தன்னில் தன்னையும் சார்கில னாயிடில்
தன்னில் தன்னையுஞ் சார்தற் கரியவே."
தலைமகன் = சிறந்தவன்.
தன்னையுணரும் முறையிலேயே தலைமகனாம் சிவனையும் உணர்தல் வேண்டும். தன்னையும் தன் தலைவனையும் அறிந்தவர்க்கு சிவன் தோன்றுவான். இதுவே தலைப்படுதலாம். ஆன்ம அருளால் தலைவனைச் சார்தல் வேண்டும். இல்லையெனில் அத்தலைவனும் சார்தற்கு அரிய நிலமையை உடையவன் ஆவான். ஈங்கு, தலைமகன் என்பது அறிவைக் குறிக்கும்.
இ·தையே, அப்பர் பெருமான்(அப்பர்:5.97 - 29):
"தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே." என்பர்.
172.அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.
பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அறியும் அறிவாகிய பிரணவத்தை உணர்ந்தால், அதை விட்டு நீங்கிப் பிறப்பெடுத்து இன்னலுற வேண்டாம்.
173.சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.
சிவனுருவம் ஞானவினையின் வலிமையால் தானாகவே பிரணவத்தில் சேர்ந்து அடங்கி, அசைவற்று நிற்கில் உடலழிவு நாசமாகும்.
174.உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்.
உறக்கம், மனனம், பிராணனின் அசைவு இவை தோன்றாமல் ஒழிந்தால் உடல் இறை வாழும் இல்லமாகும்.
உறக்கம், மனனம், பிராணனின் அசைவு இவை மூன்றும் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதன.
சீவ பாவம்:
உறக்கமில்லையெனில் உடல் அமைதியுறாது. மனனம் இல்லையெனில் பகுத்தறிவு இல்லாது போய்விடும். பிராணனின் அசைவு இல்லாவிடில் இந்திரியங்கள் செல்லாது. தூங்காமல் தூங்குவது, மனனமற்ற மனம், அசைவற்ற பிராணன் இம்மூன்றும் ஞான மார்க்கத்துக்கு இன்றியமையாதன.
அறிவு பாவம்:
தூங்காமல் தூங்குவதால், சாக்கிரம், சொற்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய அவத்தைகளை அறியலாம். மனமற்ற நிலையினால் அறிவு எங்கும் விரிந்த நிலைபெறும். பிராணன் அசைவற்றால் சிவத்தைக் கண்டு சீவனைப் பரத்தோடு சேர்க்கலாம்.
175.நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது.
உடலின்கண் உண்டாகும் நினைவும், யாவற்றையும் அறியவொட்டாது மறைக்கும் மும்முடிச்சுகளும், பசியும் ஒழிந்தவிடத்து, எல்லா உலகுக்கும் உடல் உறைவிடமாகும்.
உலக பாவம்:
நினைப்பு -
எண்ணங்களின் வல்லமையால்தான் எண்ணிய கருமத்தை முடிக்க.
மறப்பு -
மனம், வாக்கு, காயங்களினாலுண்டாகும் உழைப்புக்கு ஆறுதல் செய்ய.
பசி -
உணவுகளை உட்கொள்ளுதற்கும், விருப்பத்தோடு உட்கொண்ட உணவைச் சீரணித்துப் பின் பக்குவஞ்செய்து, சுக்கிலம், நாதம், மலமாகப் பிரிக்கும்.
ஞான பாவம்:
எண்ணங்களை கொல்ல மனம் வலிமையடையும். பிந்து பலப்படும். ஞானவினைக்கு உதவி செய்யும். மறப்பற்றால், தன்னையும் ஈரேழு உலகங்களையும் அறியலாம். பசியொழிய அமுதத் தன்மை உண்டாகிறது. ஆன்ம வல்லமை, உடல் வலிமை உண்டாகிறது. ஐம்புலன்களை உள்நோக்கிச் செலுத்தும் சூக்கும தத்துவங்களுக்கும், தூல தத்துவங்களுக்கும் வல்லமையைக் கொடுக்க, அமுத ஊற்று சுரக்கும்.
திருமந்திரம்:
"பிறப்பறியார் பலபிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வமும் பெறுவர்
மறுப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே."
பிச்சை = தவ உணவு. பிச்சைசெய் மாந்தர் = தவசிகள்.
மறப்பிலராகி = இரவு பகலாகிய நினைப்பு மறப்பு இல்லாதவராகி.
உயிருக்குயிராகிய இறைவன் தந்த உடலினில் உள்ள உயிர் பிழைக்க உழைக்காது பிச்சை எடுத்து உண்ணும் பலர், பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தினை அறிய மாட்டார். சிவன் திருவடிகளை மறவாமையே பெருந்தவம். அப்பெரும் தவம் செய்தோர் சிறப்பாகிய வீடுபேறு பெறுவதுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களையும் அடைவர். அவர்களே பிறப்பினை அறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவர்களாம்.
176.உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம்.
தூல சூக்கும உடல்கள் வேறு வேறு என எண்ணாது ஒன்றாய்க் கலந்திடில் ஒப்பற்ற சிவத்தருள் அதிகமாகும்.
தூல சூக்கும ஐக்கியமே காலனை வெல்வதாகும். சிவம் காலனைக் காலால் உதைக்கும் தத்துவம் இ·தே.
177.தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
உடலில் தன்னைத் தானாகிய அறிவை அறிந்து அதனுடன் சேர்ந்து அதனுள் ஒன்றினால், பிறகு பிறப்பில்லை (தத்துவத் தோற்றங்கள் கிடையா).
அறிவில் ஒன்றிப் பின் நான் என்னும் சீவபாவம் ஒழிய ஞானவிரோத தத்துவங்கள் ஒழியும்.
178.மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.
மா = பெருமை பொருந்திய
தூ = தூய, பரிசுத்தமான
பிரம்மத் தானத்தில் அச்சமற்று மும்மலங்களையும் ஒழிக்க, இராப்பகலற்ற சிதாகாயந் தோன்றும்.
179.விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு.
அகாரத்தால் குறிக்கப்படும் சுக்கிலத்தை, உடலின்பங்களை வெறுத்து மாற்றி உடலுக்குள் உணர்ந்தால் ஓங்காரம் வெளிப்படும்.
திருமந்திரம்:
"அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே."
அங்கப் புணர்ச்சி = பரி அங்கி யோகம்.
பங்கப்படாமல் = நாத விந்து கெடாமல்.
தத்துவம் = அழியாதது. போகம் = நுகர்வு, நினைப்பு.
பரிகரித்து = நீக்கிச் செலுத்தி.
அங்கப் புணர்ச்சியாகிய பரியங்க யோகப் பயிற்சியால், நுகர்வு நினைவால் விந்து கீழிறங்கி வீணாகாமல் மேற்செலுத்திப் புருவநடுவில் தேக்கிவைப்பர். அத்தன்மையோரே, பொறி புலன்களைத் தம் வழிப்படுத்தும் தலைவர்.
"வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய வகண்டமு மண்டமும் பாரிப்பக்
காயவைம் பூதமுங் காரிய மாயையில்
ஆயிட விந்து வகம்புற மாகுமே."
காயஐம்பூதம் = ஆகாய முதலாகிய ஐம்பூதங்கள்.
காரிய மாயை = விந்துவின் விகாரமான அசுத்த மாயை.
பெருமையுடைய விந்துவின் ஆற்றலால் அண்டமும் அகண்டமும் ஆக்கப்பட்டன. ஆகாய முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூமாயையாகிய விந்துவின் காரியம்; பால் தயிரானது போன்ற திரிபு. இதுவே தூமாயையின் கீழ்ப்பகுதியாகிய தூவாமாயை.
"அண்ண லுடலாகி யவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவுங்
கண்ணுங் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணி லமிர்தாகி யோகிக்கறி வாமே."
கண்ணுங்கனல் = மூலாக்கினி.
அகத்தவம் செய்வோருக்குச் சிவன் உடலாய்த் திகழ்வதால், விந்து மாயையாகிய அனல் பிழம்பும், மண்ணில் வீணாய் கழித்து மாய்விக்கும் விந்துவும், முக்கனலில் கூடிக்கலந்து பேரொளிப் பிழம்பாய்ச் சுடர்விட்டு அகத்து அமுதாகியும் யோகிக்கு அறிவாகவும் ஆகும்.
180.சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு.
ஐம்புலன்களின் வெளிநோக்குச் செயல்களை நீக்கி இருக்க ஆத்தும ஞானத்தை அடையலாம்.
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 18. பிறப்பறுதல்(171 - 180)
Posted by ஞானவெட்டியான் at 11:45 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment