Monday, December 31, 2007

110.வில்லது வளைந்ததென்றும் வேழ

விவேக சிந்தாமணி
*********************
110.வில்லது வளைந்ததென்றும் வேழம துறங்கிற்றென்றும்
வல்லியம் பதுங்கிற்றென்றும் வளர்கடா பிந்திற்றென்றும்

புல்லர்தஞ் சொல்லுக்கஞ்சிப் பொறுத்தனர் பெரியோரென்று

நல்லதென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.


எதிரியைக் கொல்வதற்காக வளைந்துள்ள வில்லைக்கண்டு, இதனால் தீங்கேதும் வராது என நினைப்பது, தன் பகைமுடிக்க நேரம் பார்த்துத் தூங்குவதுபோல் கண்ணை மூடிக்கிடக்கும் யானையைக்கண்டு இது தீங்கு செய்யாது என நினைப்பது, பதுங்கும் புலியால் தீங்கு வராதென நினைப்பது, வேகத்தோடு தாக்குவதற்காகப் பின்வாங்கும் கடாவாலும் தீங்கு வராரது என்று நினைப்பது, தம்மை நிந்திப்போர் தானாகவே அழியும் தருணத்தினை எதிர்நோக்கி பொறுமையுடன் இருக்கும் சான்றோரின் பொறுமையை, இவர் கீழ்மக்களின் சொற்களுக்கு அஞ்சித்தான் ஒதுங்கிச் செல்கின்றனர் என்று நினைப்பதும் நன்மை என நினைக்க வேண்டாம்; கொடிய நஞ்சைப் போன்ற கேடு என்று நினைக்கலாம்.

4 Comments:

Anonymous said...

மிகவும் நன்று.
கண்டு களித்தேன் ஐயா!
முக்காலும் உண்மை இதில் சொல்லியிருப்பன யாவையும்.
மிக்க நன்றி!

Anonymous said...

மிக்க நன்றி, SK.

Anonymous said...

ஐயா!
நல்ல அறிவுரை!!தமிழ் மணத்தில் சிலர் மனம் நோகடிக்கும், சிறிசுகளுக்கும்;சேர்த்துக் கடைசி வரி சொல்லியுள்ளது போல இருக்கிறது.

Anonymous said...

அவரவருக்கு அதது.
நன்றி யோகன்.