Monday, December 31, 2007

111.சலந்தனிற் கிடக்கு மாமை சலத்தை

விவேக சிந்தாமணி
*********************
111.சலந்தனிற் கிடக்கு மாமை சலத்தை விட்டகன்றபோது
கொலைபுரி வேடன்பற்றி வலையினிற் கொண்டுசெல்ல

வலிமைசே ரவனை வெல்லும் வகைபுரிந் ததனைக்காத்த

கலையெலி காகம் போல்வார்க் கலத்தலே நலத்ததாமே.


இப்படியும் உரைப்பவர் உண்டு:

சலந்தனில் கிடக்குமாமை சலத்தைவிட் டகன்றபோது

கொலைபுரி வேடன்கண்டு வலையினிற் கொண்டுசெல்ல

வலுவினாலவனை வெல்ல வகையொன்று மில்லையென்று

கலையெலி காகஞ்செய்த கதையென விளம்புவோமே.


இது பஞ்சதந்திரக் கதையில் வருவது:

முன்னொரு காலத்தில், ஒரு கலை(மான்),காகம், எலி, ஆமை ஆகிய நால்வரும் நண்பர்களாயிருந்தன. நீரிலிருந்த வெளிவந்த ஆமையைக் கொலைபுரிவதையே தொழிலாகக் கொண்ட வேடன் பிடித்துத் தன் வலைபோன்ற பையில் ஆமையை இட்டுக்கொண்டு சென்றான். வேடனை எதிர்க்கும் வல்லமை நம் மூவருக்கும் இல்லையென மானும், காகமும் எலியும் ஒரு தந்திரம் செய்தன. மான் இறந்ததுபோல் கிடக்க, காகம் அதன்மேல் கொத்தி தின்னுவது போல் நடிக்க, வேடனும்,"ஆகா! நமக்கு இன்று நல்ல விருந்து" என எண்ணி, ஆமையைப்போட்டுவிட்டு மானை எடுக்க ஓடினான். அச்சமயம், எலி வலையைக்கடித்து ஆமையை விடுவிக்க ஆமை அருகில் உள்ள குளத்தில் இறங்கி தப்பித்துக் கொண்டது. மான் எழுந்து ஓட, காகம் பறக்க எலியும் ஓடி மறைந்தது. இப்படிப்பட்ட நண்பர்களுடன்தான் பழகவேண்டுமென்பது கருத்து.

"உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
என்னும் குறளுக்கிணங்க, இடுக்கண் வருங்கால் நண்பர்களைக் காக்கவேண்டுமெனும் நீதியும் சொல்லப்பட்டுள்ளது.

"இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே!" என்னும் நீதியும் விளங்கும்.

0 Comments: