Friday, December 14, 2007

குறவஞ்சி(41 - 45)

41.கற்பக வாசி கலந்திடும் எவ்விடம் சிங்கி? - அது
உற்பன மூலத்தி னுள்ளொளி யல்லவோ சிங்கா!

கற்பக வாசி = மூலவாசி
உற்பனம் = உண்மை = உள்மெய்

மூலவாசியெனும் உயிர் மூச்சு கலந்த இடம் எதடி சிங்கி?
அது, உள் மெய்க்குள் இருக்கும் உள்ளொளி உற்பத்தியாகும் மூல ஆதரத் தானமாகுமடா, சிங்கா.

42.சத்தம் பிறந்திடுஞ் சற்குரு வேதடி சிங்கி? - அது
உற்ற சுவாசம் உயிர்நிலை யல்லவோ சிங்கா!

ஒலி பிறக்கும் இடத்தில் உள்ள ஆசான் எதடி,சிங்கி?
அது, நடமாடும் சுவாசமும் ஒலி பிறக்கும் இடமும் சங்கமாகும் இடமே, சிங்கா.

43.கண்டு தொழுஞ்சிவ காரண மேதடி சிங்கி? - அது
உண்டு படுத்திய வுள் ளொளியானதே சிங்கா!

காரணம் = மூலம்
கண்டு தொழும் சிவ மூலம் எதை, சிங்கி?
அது, உயிரினங்களின் உள்ளொளியே, சிங்கா.

44.எப்படிக் கண்டே இறையை வணங்கலாம், சிங்கி? - அது
நட்புடன் இரண்டு நடுநிலை காண்பது சிங்கா!

இறைவனை எப்படி உணர்ந்து வணங்கவேண்டும் சிங்கி?
இரு கண்களின் நடுநிலையில் நட்புடன் நோக்கிக் கண்டு வணங்கவேண்டும், சிங்கா.

45.நடுநிலை யானதை நாடுவதெப்படி, சிங்கி? - அது
நாட்டந்தேட்டம் மோட்ட மாட்டமொன்றா கினால் சிங்கா!

அந்த நடுநிலையை அடைவதெப்படி, சிங்கி?
ஓட்டம், ஆட்டம் ஆகியவை இன்றை ஒன்றாக்கினால், தேட்டம் வரும்; நாட்டமும் பிறக்குமடா, சிங்கா.

Sunday, December 09, 2007

குறவஞ்சி(36 - 40)

36.சித்த னொளிவு கலந்திட மெவ்விடஞ் சிங்கி? - அது
அத்தன் நடனந்தா னாடிய தற்பரஞ் சிங்கா!

சித்தத்தின் ஒளி எந்த இடத்தில் கலக்கும் சிங்கி?
அது சீவன் நடனமாடும் சிதாகாயம் சிங்கா!

37.உத்தமப் பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி? - அது
நச்சர வாடும் நடுநிலை யல்லவோ சிங்கா!

உயிரெழுத்து = உயிர்நிலை
நச்சு அரவு = குண்டலினிப் பாம்பு

சீவனாகிய உத்தமப் பொருளுக்கு உயிர்நிலை எங்கேயடி சிங்கி?
அது (நச்சு அரவு) குண்டலினிப் பாம்பு ஆடுகின்ற நடுவிடமே சிங்கா!

38.எட்டெழுத் தாக எழுந்தெழுத் தென்னடி சிங்கி? - அது
மட்டி லடங்கா வடிவட்டகோணமே சிங்கா!

"அ" தமிழ் எண்ணிக்கை எட்டைக் குறிக்கும்.
இங்கே கெதியான(மூச்சான) "உம்" எழுத்து மவுனமாச்சு.

“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி

சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.

விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.

மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.

அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.

அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.

கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் - பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.

கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.

தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.

வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்
“அ”வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.

ஆக “அ”காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.

“அ”காரம் 12 பிரிவுகளாம்.

1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபரநாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
எட்டு எழுத்தாக எழுந்த எழுத்து என்னடி சிங்கி?
மட்டில் அடங்காத ஓம் எனும் ஓங்கார வட்டமாம் சிங்கா!

39.அஞ்செழுத் தாக அமைந்தெழுத் தென்னடி சிங்கி? - அது
அஞ்சும் பொருந்திய ஆகாச வட்டமே சிங்கா!

"நமசிவய" ஆகிய ஐந்து எழுத்துக்கள். இவை ஐந்தும் சேர்ந்ததுவே (சிதா)காயமாம்.

40.அன்பத்தோ ரட்சரம் அறிய நீ சொல்லடி சிங்கி? - அது
வஞ்சு மகார நடுச்சுழி மூன்றுமே சிங்கா!

அம்பத்தோரு அட்சரம் என்னவெனச் சொல்லடி சிங்கி.
அது ஐந்து பூதங்களாலான அகாரத்தின் மூன்று நடுச்சுழிகளாம்.

Thursday, November 09, 2006

குறவஞ்சி.com

அன்புடையீர்,
என் படைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கே காண வாருங்கள்:

குறவஞ்சி.com

Thursday, October 19, 2006

ஞானரத்தினக் குறவஞ்சி (31 - 35)

ஞானரத்தினக் குறவஞ்சி (31 - 35)
*****************************************

31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? - அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.

எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?

அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!

32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி - இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!

எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?

அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா)

33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? - அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!

ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?

அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே சிங்கா!

34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? - அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!

ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?

தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!

35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? - அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!

கதி = பிறப்பு; மதி = அறிவு.

இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?

அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!

ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)

ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)
*****************************************

21."ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? - அது

அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!"

ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?

ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!"

22."ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? - அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!"

ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி?

மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா.

23."தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? - அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!"

தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?

கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா சிங்கா.

24."என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? - அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!"

தன்னையறிவது எப்படி சிங்கி?

தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது சிங்கா.

25."இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? - அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!"

இறையை அறிவது எப்படி சிங்கி?

இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!


26."என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? - அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!"

தவம் என்றால் என்னடி சிங்கி?

உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.

27."என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!"

தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?

நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம் தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.

28."என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!"

ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?

எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.

29."ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? - அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!"

ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?

உயர்நிலை நினைவுதானடா சிங்கா.

30."கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? - சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!"

வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?

அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.

ஞானரத்தினக் குறவஞ்சி ( 11 - 20)

ஞானரத்தினக் குறவஞ்சி ( 11 - 20)
*****************************************

11."முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? - அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!"

முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?

மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும் கண்களடா சிங்கா.

12."முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? - அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!"

உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?

பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா(தலமடா) சிங்கா.

13."இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? - அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!"

இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?

இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.

14."இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? - அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!"

இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?

அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா சிங்கா.

இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின் தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான் குழவிக்கு உயிர்.

இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.

15."இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? - அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!"

இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?

அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும் கொடி அல்லவோ சிங்கா.

16."இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? - அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!"

என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?

இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.

17."மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!"

மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என் சொன்னார் சிங்கி?

கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.

"மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!"

இதை "மட்டிலடங்காத மா "கலிமா" வடா சிங்கா!"எனக் கூறுவோரும் உண்டு.

கலிமா : "லா இலாஹ இல்லல்லாஹூ - முஹம்மதுர் ரஸுலுல்லாஹி."

18."எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? - அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!"

எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?

அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.

19."முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? - அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!"

அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?

சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர் ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.

20."பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? - அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!"

அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?

பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.

ஞானரத்தினக் குறவஞ்சி ( 1 - 10 )

ஞானரத்தினக் குறவஞ்சி ( 1 - 10 )
*****************************************
1."ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?

அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா."

ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்

ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?

அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!

2. "ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா"


ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் விந்துவேயாம் .

3."சோதியி லாதி சொரூபமான தெப்படி சிங்கி? - அது
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா!"


அதுஎப்படி ஆதி சொரூபமானது சிங்கி?

பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளும் ஒன்றாய்ச் சேர்ந்த ஆன்மாவைப் படைக்கும். ஆன்மா வேதமாம் அறிவை அடையும்.

4."முப்பொரு ளென்று நீமுன் சொன்ன தாரடி சிங்கி? - அவர
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா!"


முப்பொருளென்று முன்னே சொன்னது யாரடி சிங்கி?

பதி,பசு,பாசம் கூடிய அப்பனும், ஆயியும் ஆயிரம் உயிருக்கு ஆதியாம் நாம் தானடா சிங்கா.

5."எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி? - அது
அப்பன் தன் னட்புக்கு ஒப்பியதாலே சிங்கா!"


எப்படி உலகில் இப்படி உருவானோம் சிங்கி?

அப்பனும் ஆயியும் நட்பினால் இணைவவதற்கு ஒப்பியதாலே சிங்கா.

6."பராப ரத்தினிற் பஞ்சவ னமேது சிங்கி? - அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா!"

இந்த உலகினில் ஐந்து வர்ணம்எது சிங்கி?

அது வேராகி, தூரான, ஆதியான விந்துவின் நிறமடா சிங்கா.

7."ஒன்றுக்குள் ஐவர் உண்டான தெப்படி சிங்கி? - அது
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா."

ஒரு உடலினுள் ஐம்பூதங்கள் உண்டானது எப்படி சிங்கி?

அவைகள் ஒன்றோடு ஒன்றாக ஓடி இணைந்ததால்தான் உருவாகிய ஒன்று உடலானது சிங்கா.

8."மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி? - அது
நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!"

ஐம்பூதங்களையும் அடக்கி விந்து நாதத்தில்ஏற்றினால் அதுதான் மூல(கபால)க் குகைக்குள்எரியும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளல்ஏற்படும் முச்சுடரே

9."மூலக்கிழங்கு முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? - அது
நாதத்திலான நடுநிலையல்லவோ சிங்கா!"

மூலக் கிழங்கு (விந்து) முளைக்குமிடம் எங்கே சிங்கி?

அது விந்து நாதத்தின் நடு(ப்பகுதி) நிலை அல்லவோ சிங்கா. அதுவே கபாலத்தின் நடுப் பகுதி. ஐம்புலன்களிருந்தும் உள்புறமாகக் கோடுகள் வரைந்தால் அது உள்நாக்குப் பக்கத்தில் வெட்டும். அந்த இடம்தான் சிங்கா.

10."மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார்சிங்கி? - அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினவடா சிங்கா!"

கபாலக் குகையெனும் மூலக்குகைக்கு அரசர் யாரடி சிங்கி?

பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்றாய் இணைந்து முடிந்த "நினைவு" தான் அது சிங்கா.

ஞானரத்தினக் குறவஞ்சி - காப்பு

ஞானரத்தினக் குறவஞ்சி
****************************
காப்பு

*******
பொன்னுலகு பொருந்துமனப்
பொருளறியத் தனமறிய
மின்னுலகில் மெய்ஞானம்
விளங்ககுற வஞ்சிதனை

உன்னாமற் றன்னினைவின்
உன்னி யுதிப் பொருநான் காய்த்
தன்னிறையைத் தன்னினை வாய்த்
தரிப்பதுவே காப்பாமே.

மனப்பொருள் அறிய மெய்ஞானம் விளங்கக் குறவஞ்சியின் நாமம்தனைத் தன் நினைவில் வைத்துத் தன் இறைவனைத் தன் நினைவாய்த் தரிசிப்பதுவே காப்பாம்.

ஞானரத்தினக் குறவஞ்சி - முன்னுரை

பீரு முகமது ஞான ரத்தினக் குறவஞ்சி
******************************************
முன்னுரை
************
காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர் பீரு முகமது அப்பா. அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக் குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாடல்கள் எளிமையானவை.

பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிப் பெருமகனாரின் திருப்பெயர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் சிறு மலுக்கர் என்னும் பெரியாரின் மைந்தனாக அவதரித்தார்.

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)

"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்ப்டைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)

அப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. அவரின் படைப்புக்களை வைத்து அவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கூறலாம்.

இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

மெய்ஞானச் சர நூல், ஞான மலை வளம், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான மணி மாலை போன்றவைகளை எழுதியதாகத் தெரிகிறது.

அப்பா அவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்த கேரளத்தின் ஒரு இடத்திற்கு இன்னமும் பீர்மேடு (இடுக்கி மாவட்டம்) எனும் பெயர் நிலவுகிறது. இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு வந்து சிலகாலம் இருந்து ஞானம் உபதேசித்தார்; பின்னர் இறுதி நாளும் தக்கலையிலேயே முடிந்தது.