Saturday, February 20, 2010

கந்தர் கலிவெண்பா - 25

25.அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவற்
கன்னியொடுஞ் சென்று (அ)வட்குக் காதலுருக்காட்டுதலும்
அன்னவள்கண் டவ்வுருவ மாறினையுந் - தன்னிரண்டு
கையா லெடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து
மெய்யாறு மொன்றாக மேவுவித்துச் - செய்ய


அன்னவள் = கங்கை
சரவணத்தில் = சரவணப் பொய்கையில்
சரவணம் = நாணல்

சென்னி = தலை, நாணல் முனை
திருவுருவாய் = திருவடிவு எடுத்து

அறுமீன் = ஆறு நற்சேத்திரப் பெண்களாகிய கார்த்திகைப் பெண்டிர்

நறுநீர் = கங்கை
குறுமுறுவல் = புன்சிரிப்பு

கன்னி = உமையம்மை(உலகையெல்லாம் பெற்றாலும் இறைவி கன்னியே என ஞான நூல்கள் கூறும்)

கந்தன் = ஒன்று சேர்க்கப்பட்டவன்
மெய் = உடல்
மேவுவித்து = பொருத்தப்பட்டு
செய்ய = சிவந்த

கங்கையும் அப்பொறிகளின் சூட்டைப் பொறுக்க இயலாது, நாணல் நிறைந்த சரவணப் பொய்கையில் அவற்றை வைத்தனர். அப்போது அவை ஆறு திரு உருவங்களாக மாறி முதலில் கார்த்திகைப் பெண்டிர் கொடுத்த திருமுலைப் பாலை உண்டு அழுது விளையாடும்போது நறுமணமுடைய கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவபிரான், புன்சிரிப்புடைய கன்னியாகிய உமையம்மையுடன் சென்று குழந்தையைப் பார்த்து அன்பு செலுத்துதற்குரிய பிள்ளைத் திருவடிவத்தை அம்மைக்குக் காட்டவும், அவள் ஆறு திருவுருவத்தையும் தன் இரு கைகளால் எடுத்துத் தழுவி ஒன்று சேர்த்து ஓர் உருவாக்கி, "கந்தன்" (சேர்க்கப்பட்டவன்) என்னும் திருப்பெயரையும் தந்து அத்திருவுருவைச் செம்மாயான தன் திருமுகத்தோடு சேர்த்து.........

"சேயவன் வடிவம் ஆறுந் திரட்டி யொன்றாகச் செய்தாய் - ஆயதனாலே கந்தனாம்மெனு நாமம் பெற்றான்" - என்கிறது கந்த புராணம்

Friday, February 12, 2010

கந்தர் கலிவெண்பா - 24

24.திருமுகங்க ளாறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த்தீப் பொறியா றுய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும்
பொங்கு தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்
எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதியென் றெம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்(று)

செந்தழற்கண் = சிவந்த அக்கினி தேவனிடத்தே
உய்ப்ப = செலுத்த
அடுத்ததொரு பூதம் = வாயுவுக்கு அடுத்த பூதமாம் தீ
அதன் தலைவன் = தீக்கடவுள்
கொடுபோதி = கொண்டு போவாய்
பகீரதி = பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை
உய்ப்ப = செலுத்த
போது = பொழுது
ஒரு சற்று = சிறிது

சிவந்த அனல் போன்ற ஆறு திருக்கண்களிலிருந்தும் ஒரே வழியாக ஆறு நெருப்புப் பொறிகளை வெளிவிடவே, அந்தப் பொறிகள் விரிந்த உலகமெங்கும் செல்லுவதைப் பார்த்துத் தேவர்கள் அஞ்சியபடியால், தம் அழகிய திருக்கைகளால், அவற்றை எடுத்துச் சேர்த்துக் காற்று தெய்வத்திடம் தந்து,"நீ இவற்றை எடுத்துக்கொண்டு போ" என்றவுடன், வாயு பகவான் அவற்றை எடுத்துக்கொண்டு போய், ஐம்பூதங்களில் தனக்கு அடுத்த பூதத்துக்கு அதிபதியாம் அக்கினியிடம் கொடுக்க, அவன் அவைகளைக் குளிர்ச்சி மிக்க கங்கையிடம் சேர்க்கவும்.............

Friday, February 05, 2010

கந்தர் கலிவெண்பா - 22

ஈறு முதலும்அகன் றெங்குநிறைந்(து) ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலு மோவாதளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாதமணி முரசும் -சந்ததமும்

குரகதம் = குதிரை
ஏறுமதம் = உயர்ந்த சமயம்
களித்தோர் = மகிழ்ந்தவர்கள்
துதிக்கையினால் = வாழ்த்துவதால்
பஞ்ச மலம் = ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்)

காய்ந்த = ஒழித்த
சுடாக் களிறு = மதயானை

பூரணமாம் = முற்றறிவாகிய
மலரா = பூவாக
நார் = அன்பு
தொடை = மாலை
காரணத்துள் = காரியப்படுவதற்கு முற்பட்ட நிலையில்
வான்கொடி = பெரியகொடி, பரமாகாயமாகிய கொடி

நவ நாத = புது ஒலியுள்ள, புதுமை பயக்கும் நாத தத்துவம்
மணி = அழகிய
முரசும் = நாத தத்துவமாகிய முரசும்

முதலும் முடிவும் இல்லாது, எங்கும் நிறைந்த இறைவன் ஐந்தெழுத்து மந்திரமாகிய சொல்லால் செலுத்தக்கூடிய
குதிரையும், உயர்ந்த சமய நெறியில் ஒழுகி மகிழ்ச்சியடைந்த அன்பர்களுடைய வாழ்த்துக்களாம் தும்பிக்கையினால் ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்) ஆகிய ஐந்து பாசங்களையும் தொலைத்த சிவஞானமாகிய மத யானையும், எல்லாம் அறியும் அறிவுக்கும் அறிவாகிய புது மலரை உள்ள அன்பென்னும் நாரினால் கட்டிய பூமாலையும் (வெளிப்படையான பஞ்ச கிருத்தியத்திற்குக்) காரணமான ஐந்தொழிலையும் எப்போதும் செய்வதற்கு ஏதுவாகிய சத்தியாகிய பெரிய கொடியும், எப்போதும் புதுமையாயுள்ள ஓங்காரமாகிய அழகிய முரசும் .......

Sunday, February 08, 2009

கந்தர் கலிவெண்பா - 20

ஒத்த புவனத் துருவே யுரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவாய் - வைத்த
கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி
அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ

சத்த - ஏழு
தாது - இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன
கலை - நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன
காட்டும் - ஈண்டு குறிக்கப்பட்ட
அண்டம் - திருமேனி
சரம் - நடக்கும் பொருள்
அசரம் - நிற்கும் பொருள்
சராசரம் - நிற்கும் பொருள், நடக்கும் பொருள்
அங்கம் - உறுப்பு
சத்தி மூன்று - இச்சை, கிரியை, ஞானம்
உட்கரணம் - அந்தக்கரணம், அகக் கருவி
தொண்டுபடும் - அடிமையாய் நிற்கும்
ஆவிப்புலன் - உயிரின் அறிவு
அறிவளிப்ப - அறிவிக்க

அண்டங்கள் சமைக்கப்பட்டுள்ளதில் ஒத்த புவனங்கள் உருவமாகவும், தத்துவங்களே இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகிய உடலின் சத்துப் பகுதிகளாகவும், கலைகளே இவைகளெல்லாம் வைக்கப்பட்டுள்ள அங்கங்களாகவும், இவையெல்லாம் சேர்ந்த நிலையே திரு உருவாகவும் கொண்டு நின்றவனே!

பலகோடி அண்டங்கள் தன் வடிவங்களாகவும் அவற்றில் உள்ள அசையும் அசையாப் பொருட்கள் அனைத்தும் உறுப்புக்களாகவும், விருப்பம், அறிவு, தொழில் என்ற மூன்று சத்திகளும் உட்கருவிகளாகவும் கொண்டு, தனக்கு அடிமை செய்தற்குரிய ஐந்து தொழிலையும் தனது ஆணையால் செய்விக்கின்ற எங்கள் தலைவனே!

கந்தர் கலிவெண்பா - 19

கந்தர் கலிவெண்பா - 19

இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
************************************************************************

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தருதெய் வீக வடிவும் - உளந்தனிற்கண்(டு)
ஆதரிப்போர்க் காருயிரா யன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியவைந்து
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியா யைந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்

பருதி - சூரியன்
ஆதரிப்போர் - விரும்பும் அன்பர்
அகத்தாமரை - இஅதயத் தாமரை
மீது - ஆகாயத்தில்
ஓதியவைந்து - அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும்
மந்திரம் - மனத் திறன்
சோரி - இரத்தம்
வான் - பெரிய
பதம் - அடி
முடியா - முடியாக
தொந்தம் - தொடர்பு
வன்னம் - எழுத்து வழி
தொக்கு - தோல்
பந்தனை - அமைப்பு

நூறாயிரம் கோடி இளஞ்சூரியன் வீசும் ஒளிகொண்ட தெய்வத் தன்மை உடைய திருவடிவும், நெஞ்சிலே நினைந்து காணப்பெற்று அன்பு செலுத்துவோருக்கு அரிய உயிராக அவர்களின் உள்ளத் தாமரையில் வீற்றுள்ள தெய்வத் தன்மை பொருந்திய விளக்கொளி போன்றவனே!

அகரம், உகரம், விந்து, நாதம் ஆகியவைகளால் ஆகிய ஓங்கார தத்துவத்தில் விளங்கும் ஒளிக்கு உள்ளீடாகக் காணப்படும் அறிவு ஒளியாய், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலுக்கும் உரிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து பெரிய உருவெடுத்து நின்றவனே!

தாங்கமுடியாத வலிமையுடைய மந்திரங்களே இரத்தமாகவும், பெருமையுடைய பதங்களே தலையாகவும், பதங்களாகத் தொகுக்கப்படுவதற்குரிய எழுத்துக்களே தோலாகவும், அமைப்பால்……….

Friday, December 26, 2008

கந்தர் கலிவெண்பா - 18

இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
******************************************************************

அதிர்கே டகஞ்சுழற்று மங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமு - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொற்
புரிநூலுங் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணுங் கச்சையழகும் - திருவரையும்
நாதக் கழலு நகுமணிப்பொற் கிண்கிணியும்
பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி


விதிர்க்கும் - அசைக்கும்
கொடியிடை - கொடி போல் மெலிந்த இடை
வேட்டு - விரும்பி
பொற்புரிநூல் - பொன்னால் செய்யப்பட்ட முப்புரி நூல்
பூம்பட்டு - பூவேலை செய்யப்பட்ட அழகிய பட்டு
கண்டிகை - உருத்திராக மாலை, பதக்கம்
கச்சை - இடையில் அணியும் துண்டு
நாதக் கழல் - ஒலிமிக்க வீரத் தண்டை
நகுமணி - விளங்கும் இரத்தினம்
பரிபுரம் - சிலம்பு

போரில் எடுத்த துரட்டி உடைய திருக்கையும், பகைவரை அழிக்கின்ற போரில் அதிர்ச்சி உண்டாக்கக் கூடிய கேடையம் சுழற்றும் திருக்கையும், ஒளி வீசுகின்ற வாளினை வீசும் திருக்கையும், ஆகிய பன்னிரண்டு திருக்கைகளை உடைய பெருமானே! முதுமை அடையாது இளமைத் தன்மையுடைய கும்பம் போன்ற மார்பகங்களையும் சிவந்த வாயையும் கொடி இடையும் உடைய மாதர்கள் அன்பால் தழுவிய அழகிய பொன் அணிகள் அணிந்த பரந்த மார்பும், பசும் பொன்னால் ஆகிய முப்புரி நூலும், உருத்திராக்க மாலையும், பூவேலை செய்யப்பட்ட அழகிய பட்டு ஆடையும் அரை ஞாணும் அரைக் கச்சையும் அணிந்த இடுப்பும், ஒலி உடைய வீரக் கழலும் விளங்குகின்ற இரத்தினங்கள் பதித்த பொன் கிண்கிணிச் சரமும் சிலம்பும் அணிந்த கால்களும்.........

Thursday, December 25, 2008

கந்தர் கலிவெண்பா - 17

தேவர்க் குதவும் திருக்கரமுஞ் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கி லொருகரமும் - மொய்த்த
சிறுதுடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசம ரங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்

கரம் - கை
சூர்மகளிர் - அஞ்சத்தக்க தெய்வப் பெண்கள்
தொடையல் - மாலை
வாமமருங்கு - இடப்பக்கம்
குறங்கு - துடை
மொய்த்த - நெருங்கிய
தொடி - வீரவளை
கறுவு - சினத்தைக் காட்டும்
சமர் - போர்
தெறு - அழிக்கின்ற


கிடைத்தற்கு அரிய அமுதத்தைத் தேவர்களுக்கு கொடுக்கின்ற திருக்கையும், தேவ மங்கையர் விரும்பித் தழுவ அவர்களை அணைத்த திருக்கையும், குறைவில்லாது மழை பொழியச்செய்த தாமரை போன்ற திருக்கையும், பூமாலை திருமேனியில் பொருந்தும்படி அமைந்த திருக்கையும், தனது திருமார்பின் மீது வைத்துக்கொண்டிருக்கும் திருக்கையும், இடுப்பின் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் திருக்கையும், தொடைமீது வைத்துள்ள திருக்கையும், நெருங்கின் வீர வளைகள் அணிந்த திருக்கையும், இரத்தினங்கள் பொருத்திய அணிகலன் அணிந்த திருக்கையும், சினம் மிகுந்து செய்யும் போரில்........

Wednesday, December 24, 2008

கந்தர் கலிவெண்பா - 16

பாச விருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோக மளிக்கு முகமதியும் - தாகமுடன்
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்

பாச இருள் - கட்டாகிய ஆணவம்
துரந்து - துரத்தி
கதிரில் - கதிர் போல
புத்தேளிர் பூங்கொடி - தெய்வயானை அம்மை
தாகமுடன் - விரும்பியதை அடையும் அவாவுடன்
கொந்து - பூங்கொத்து
அவிழ்ந்த - விரிந்த
வேரி - தேன்
கடம்பு - கடப்பம்பூ
விரை - வாசனை
குரவு - குராமலர்
சயிலம் - மலை
பாரம் - பெருமை

பாசமாகிய இருளை ஓட்டிப் பல ஒளிக்கதிர்கள் வீசும், வாசனைப் பூப்போன்ற வட்டமான திருமுகமும், அன்புசெய்து தன்னை அனுபவிக்க விரும்பும் வள்ளியம்மைக்கும், தெய்வயான அம்மைக்கும் ஆசை ஊட்டுகின்ற சந்திரன் போன்ற திருமுகமும், திருவருளைப் பெறும் ஆசையுடன் தனது திருவடியில் வந்து சரணடைந்தவர்கள் மகிழும்படியாகப் பல வரங்களும் கொடுத்து அருளும் தெய்வத் தன்மை உடைய தாமரை போன்ற ஆறு திருமுகங்களும், விரிந்த பூங்கொத்துக்களை உடைய தேன் நிறைந்துள்ள கடப்பம் பூவும், வாசனை உடைய குரா மலரும் பொருந்தி விளங்குகின்ற பெரிய மலை போன்ற பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானே!

Friday, December 19, 2008

கந்தர் கலிவெண்பா - 15

கந்தர் கலிவெண்பா - 15
**********************

புன்முருவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்ஞுரனைத் தடிந்து
தெவ்வருயிர் சிந்துந் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்

ஊழ்வினையை மாற்றி யுலவாத பேரின்ப
வாழ்வுதருஞ் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்


விடாய் = தாகம்
மலி = பொருந்திய
வில்மலி = ஒளி நிறைந்த
தடிந்து = கொன்று
தெவ்வர் = பகைவர்
ஊழ்வினை = முன்னர் செய்த வினை
மாற்றி = ஒழித்து
உலவாத = அழியாத
வடிக்கும் = கற்றுத் தெளியும்
முடிக்கும் = ஐயம் தவிர்த்து முற்றுப் பெறுவிக்கும்
விடுத்தகலா = விட்டு நீங்காத

பற்களில் புன்சிரிப்பு விளங்கப்பெற்ற அழகிய செவ்வல்லி மலர் போன்ற சிவந்த இதழுடைய வாயும், பிறவித் தாகத்தைத் நீக்கும் குளிர்ந்த திருவாக்கும், கொடிய வில் பொருந்திய தோளை உடைய அசுரர்கள் வணங்கிப் புகழுகின்ற கொடிய சூரபதுமனைக் கொன்று பகைவரின் உயிரைப் போக்கும் வீரமிக்க திருமுகமும், எல்லா உயிர்களுக்கும் முன் செய்த வினையை ஒழித்து அழியாத பேரின்ப வாழ்வைத் தருகின்ற சிவந்த தாமரை போன்ற திருமுகமும், ஆராய்ச்சி செய்து பழைய வேதம், ஆகமம் ஆகிய அருள் நூல்களைப் படிக்கின்றவர்கள் அவைகளில் தேர்ச்சி பெற்று ஆராய்ச்சி முற்றுப்பெறச் செய்யும் தாமரை போன்ற திருமுகமும், உயிர்களை விட்டு நீங்காத.....

Wednesday, November 26, 2008

கந்தர் கலிவெண்பா - 14

கந்தர் கலிவெண்பா - 14
**********************

தோய்ந்த நவரத்னச் சுடர்மணியாற் செய்தபைம் பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்த பிறைத்
துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் - விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு)
அருள்பொழியுங் கண்மலர் ஈராறும் - பருதி
பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்


தேய்ந்த பிறை = குறந்த பிறை(நிலா)
துண்டம் = துண்டு, பிளவு
நிரை = வரிசை
புண்டரம் = கோடு பதித்தது போன்ற நுதல்
புண்டரம் பூத்த நுதல் எனக் கொள்க.
விண்ட = விரிந்த
பருவ மலர் = நாள் மலர்
புண்டரிகம் = தாமரை
பருதி = சூரியன்
சுடர் பாலித்தல் = ஒளி வீசுதல்
குலவும் = அசையும்
நிலவு = ஒளி
குழை = குண்டலம்

ஒன்பது வகை இரத்தினங்களில் ஒளி மிகுந்த மணிகள் பதித்துச் செய்யப்பட்டதாய்ப் பசும் பொன்னாலாகிய கதிர் வீசுகின்ற இரத்தினக் கிரீடமும், (கலைகள்) தேய்ந்தபடியால் பிறையாக விளங்கும் ஆறு சந்திரர்களை வரிசையாக வைத்தாற்போன்ற ஆறு நெற்றிகளும், திருநீற்றுக் குறிகள் இடப்பெற்ற அவைகளில் தாமரைப்பூ பூத்தாற்போல விளங்குவதாய்த் திருவருள் பொழிகின்ற திருக்கண்கள் பன்னிரண்டும், பல சூரியர்கள் தோன்றிக் கதிர் வீசினாற்போல அசையும் மகர குண்டலங்களும், நிலவுபோல் ஒளி வீசும்...

Sunday, July 27, 2008

கந்தர் கலிவெண்பா - 13

கந்தர் கலிவெண்பா - 13
*************************

மூன்றவத்தையுங் கழற்றி முத்தருடனே யிருத்தி
ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென் றற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம்

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை யலரா - இருநிலமே
சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்

மூன்றவத்தை = மூன்று அவத்தை (கேவலாவத்தை, சகலாவத்தை, சுந்தாவத்தை) இவைகளை ஆணவ மாத்திரங் கலந்த உடல் இல்லா நிலை, உடலோடு கூடிய நிலை, உடலில் தூய அறிவுநிலை என்பர்.

முத்தர் = வீடுபேறு அடைந்தவர்
ஆன்ற = உயர்ந்த
யான் எனது = செருக்கு
உருவா = உருவாக
கண்ணா = முக்கண்ணாக
சந்நிதியா = சந்நிதியாக
பின்னமற = வேறு வேறாகப் பிரிக்கப் படாமல் கலந்து, வேற்றுமை நீங்க

பிறவிக்குக் காரணமாகிய யான் என்ற செருக்கும், என்னுடையதென்ற ஆசையும் ஒழிந்த இடமே திருவடியாகவும், மவுனமாய் அநுபவிக்கக் கூடிய மேலான இன்பமே திருமுடியாகவும், இறை ஞானமே திருமேனியாகவும், விருப்பம், செயல், அறிவு என்ற மூன்றுமே முக்கண்ணாகவும், கருணையே செந்தாமரை போன்ற திருக் கரங்களாகவும், உலகே தனது சந்நிதானமாகவுங் கொண்டு நிலைபெற்ற, ஒப்பற்ற ஒளியானவனே! எல்லா உயிர்களிலும் கலந்து வேற்றுமை அறியாதபடி நிற்கும் பெரியோனே! மின்னுகின்ற வடிவத்தை உடையதாய்...

Friday, December 08, 2006

கந்தர் கலிவெண்பா-12

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்துண்ணின்
றொருமலத்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு


வரவு = பிறப்பு
கடந்து = கடந்த, அப்பாற்பட்ட
உலவா = நீங்காத, வற்றாத
மருவுவித்து = சேர்ப்பித்து
கன்மமலத்தார் = ஆணவத்தோடு வினைப்பாசம் மாத்திரம் உடையவர்கள்
மின்னிடத்துப் பூத்த = மின் போன்ற உமை
இடத்து = இடப்புறத்தே
பூத்த = தோன்றிய
பொருப்பு = வெற்பு = மலை
மூத்த = பழமையாக உள்ள
மூத்த மலம் = ஆணவம்
கரும மலம் = வினை
கண் = ஞானம்
உண்ணின்று = புறத்தே தோன்றாமல் உயிரின் அறிவிலே விளங்கி
ஒரு மலத்தார் = ஆணவ மலத்தை மட்டும் உடையோர்
இன்பம் = பேரின்பம்

இறத்தல், பிறத்தல், நினைத்தல், மறத்தல், பகல், இரவு என்ற வேறுபாடுகளைக் கடந்ததாயுள்ள அழியாத பேரின்பத்தைப் பொருந்தச் செய்பவனே!

அறியாமைக்கும், வினைக்கும் காரணமான பாசம் உடையவர்களுக்குத் தாமரை போன்ற மூன்று கண்களும்(சூரிய, சந்திர, அக்கினி கலகளும்), நீண்ட சடையும் திருக்கையில் தரித்த வலிமை மிக்க தண்டும் மானும் உடையவனாய் இடப்புறத்தே உள்ள மின்னலோடு வெள்ளிமலைமேல் பவளமலை தங்கினாற்போல, பெரிய வெள்ளைக் காளைமேல், இடப்புறத்தே அம்மை உமையோடு சிவந்த தெய்வத் திருமேனியோடு எழுந்தருளி, கரும பாசக் கட்டை ஒழித்து ஞானத்தைக் கொடுத்து அருள்பவனே!

அறியாமைப் பாசம் உடையவர்களுக்கு அவர்கள் உள்ளத்திலே தோன்றி நின்று இன்பத்தைக் கொடுத்து, உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கிய நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கச் செய்து முத்தி பெற்றவர்களோடு சேர்த்து உயர்ந்த மேலான முத்தியை அடையச் செய்பவனே!

Thursday, December 07, 2006

கந்தர் கலிவெண்பா-11

கந்தர் கலிவெண்பா
**********************


ஊழ்வி னையைப்போக்கி யுடலறுபத் தெட்டுநிலம்

ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவ மான படலங் கிழித்தறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

அடிஞானத் தாற்பொருளு மான்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்


ஊழ்வினை = முன்வினை
உடல் 68 = வெளியுடம்பில் உள்ள கருவிகள் 60, நுண்ணுடம்பிஉல் உள்ள கருவிகள் 8 ஆக 68.
நிலம் ஏழு = ஆறாதரமும், ஆகாயமும் ( சூக்கும ஆதரம் சேர்த்து ஏழாதாரம் என்போரும் உளர்)
ஆணவம் = அறியாமை விளவிக்கும் மலம்
படலம் = மறைக்கும் திரை, மறைப்பு நோய்
காணரிய = காணமுடியாத
மெய்ஞானக்கண் = பதி ஞான ஒளி
அடிஞானம் = இறையின் திருவடிகளை அறியும் அறிவால்
பொருள் = கடவுள்
ஆன்மா = உயிர்
கடியார் = காவல் பொருந்திய
முடியாது = அழியாது
தேக்கு = நிறைந்த
போக்கு = இறப்பு

உயிர்களின் வெளியுடம்பில் உள்ள கருவிகள் அறுபதையும், உள்ளுடம்பில் உள்ள கருவிகள் எட்டையும், மூலம் - மூலாதாரம், கொப்பூழ் -சுவாதிட்டானம், மேல்வயிறு - மணிபூரகம், நெஞ்சம் - அநாகதம், மிடறு - விசுத்தம்(விசுத்தி), புருவநடு - ஆக்ஞேயம், ஆகிய ஆறு ஆதாரங்களையும், அதற்குமேல் உள்ள சூனிய ஆகாயம் ஒன்றையும், மந்திர முதலிய ஆறு வழிகளையும் ஒழியும்படி செய்பவனே!

அறியாமைப் பாசமாகிய திரையை நீக்கி, உயிரின் அறிவால் காணமுடியாத கடவுளை அறியக்கூடிய ஞானக் கண்ணைக் கொடுத்து, இறைவனின் திருவடியையே (கண்களை) பற்றிக் கிடப்பதால் அறியக்கூடிய மெய்ப் பொருளையும், உயிர்த் தன்மையையும் அறிவித்து, தனது காவல் அமைந்த உலகு முழுவதும் காண்பித்து, எல்லை இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரின்பமான சுத்தமான அமிர்தமாய் உள்ள தமது தன்மையையுங் காட்டி, இறத்தல்.....

Wednesday, December 06, 2006

கந்தர் கலிவெண்பா-10

சத்தி நிபாதம் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் கால முளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - யுலவா
தறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக்
கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப் பேர்கொண்டு - திருநோக்கால்

சத்தி = அருள்
நிபாதம் = வீழ்ச்சி
இருவினை ஒத்தல் = பிறவிக்கு ஏதுவான நல்வினை, தீவினையில் ஒத்த வெறுப்பு
மலபரிபாகம் = மலம் நீங்கும் தருணம்
அலமருதல் = கவலையோடு அலைதல்
உலவாது = ஓயாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
அவ்வறிவு = உயிரறிவு
பிறியா = நீங்கா
காசினிக்கே = உலகில்
குருபரன் = மேலான குரு
திருநோக்கு = அருள் பார்வை

திருவருள் விரைவாகப் பதிவதற்குரிய மிக மெது, மெது, தீவிரம், தீவிரமிகுதி எனும் 4 வகைப் பக்குவங்கள் ஏற்படுவதற்கு, நல்வினைப் பயன், தீவினைப் பயன் என்ற இரண்டிலும் ஒத்த வெறுப்பு வருகின்ற காலம் தோன்றி, பாசம் நழுவும் பருவத்தில், தவம் செய்த உயிர்கள் பல நாள் திருவருளைப் பெறுதற்கு வருந்துதலைப் பார்த்து, எப்போதும் அவ்வுயிர்களின் அறிவை விளக்கும் பேரறிவானனே! உயிர்களின் அறிவுக்கெட்டாது, முறையாக எவ்விடத்தும் பரந்து நிறைந்து இருப்பவனே! அந்த மேலான நிலை நின்று, பிரிந்து அருட்திரு மேனி கொண்டு இவ்வுலகில் தோன்றிக் குருபரன் என்னும் பெயரைத் தரித்துக் கொண்டு, திருவருட் பார்வையால், முன் செய்த வினைகளைத் தொலைப்பவனே!

Friday, December 01, 2006

கந்தர் கலிவெண்பா - 9

சொர்க்காதி போகமெலாந் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணஞ் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னூற் பரசமயந் தோறுமது வதுவே
நன்னூலெனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்

விரதமுத லாயபல மெய்த்தவத்தி னுண்மைச்
சரியைகிரி யாயோகஞ் சார்வித் - தருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்
தாலோகந் தன்னை யகற்றுவித்து - நால்வகையாம்

சொர்க்காதி = சொர்க்கம் முதலிய
துய்ப்பித்து = அனுபவிக்கச் செய்து
காரணம் = புண்ணியம்
முன்னூல் = முன்னே சொல்லப்பட்ட பழமையான அருள் நூல்
மெய்த்தவம் = உடலுக்குள் (உண்மையாகச்) செய்யும் தவம்
உண்மைச் சரியை = மந்திர நூலில் சொல்லப்பட்ட முறை

பிவிப் பிணி நீங்கி முக்தியெனும் விடுதலையடைய நான்கு வழிகள்:

1.இறைனிடம், ஆண்டானும் அடிமை போலும் பழகி பக்தி செய்தல்(தாத மார்க்கம்).

2.அப்பனும் பிளையும் போலிருந்து பக்தி செய்தல்(சற்புத்ர மார்க்கம்)

3.நண்பன் நண்பனிடம் பக்தி செய்யுதல்(சக மார்க்கம்)

4."நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்)

இவற்றை முறையே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்.

1.முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது சரியை.

2.அதன்பின், அருள் வேறென்றும், தான் வேறென்றும் பகுத்து நோக்காது புறச்செயல் புரிவது கிரியை.

3.இறைவனை அடைய, நல்ல ஒரு குரு காட்டிய நல்வழியில் மனதையடக்கச் செய்யும் பயிர்ச்சி யோகம்.

4.மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம்.

இவற்றால் அடையும் முக்திகள்:

1.இறையுலகமாம் அறிவு உடலில்(சிதாகாயத்தில்) வாழுதல் சாலோகம்.

2.இறைவனின் அருகில் வாழுதல் சாமீபம்.

3.இறை உருப்பெற்று வாழுதல் சாரூபம்.

4.இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல் சாயுச்சியம்.

இவற்றுள், முத்தி முடிவென ஞானத்தையும், ஏனைய மூன்றையும் பத முத்தி எனவும் சான்றோர் கூறுவர்.


ஆலோகம் = தெளிந்த அறிவு
அகற்றுவித்து = விரிவித்து
நால்வகையாம் = அருள் பதியும் முறைகள் நான்கு; அதாவது, மிக மந்தம், மந்தம், தீவிரம், மிகத்தீவிரம்

கொடிய நரகம், தேவ உலகம் ஆகிய இடங்களில் அனுபவிக்கவேண்டிய வேண்டியவைகளை எல்லாம் அனுபவிக்கச் செய்துவிட்டு, பிறவா வழிக்குக் காரணமாகிய நல்லறிவை உயிர்கள் பெற்றவுடன், அவைகள் மதங்களில் கூறப்பட்ட வழிகளில் படிப்படியாகச் செல்லும்பொழுது ஒன்றோடொன்று விவாதம் செய்கின்ற பழைய நூல்களில் கூறிய அந்நிய சமயங்களில் நிற்கும்போது அச்சமயங்களின் சாற்றிறங்களே நல்ல சாற்றிறங்கள் எனத் தோன்றச் செய்து, அம்மத ஒழுக்கங்களில் நிலைபெறச் செய்து, ஆதி நூற்களில் கூறப்பட்டுள்ள விரதமிருத்தல் முதலான பல தவ நெறிகளை உண்மையாகக் கடைப்பிடித்தபின், மெய்ச் சமயமாகிய சைவ சமயத்தில் உள்ள, பணிவிடை நெறி, பூசை நெறி, யோக நெறி ஆகியவைகளில் நிற்கும்படி செய்பவனே! அவற்றின் பயனாகத் திருவருள் பெருகுவதற்கு ஏதுவாகிய பதவிகளாம் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகியவைகளை அடையும்படி செய்து நல்லறிவை விசாலப் படுத்துவோனே!

Friday, November 24, 2006

கந்தர் கலிவெண்பா - 8

கந்தர் கலிவெண்பா - 8
****************************


ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான்

ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் - தீர்வரிய

கன்மத்துக் கீடாய்க் கறங்குஞ் சகடமும்போற்

சென்மித் துழலத் திரோதித்து - வெந்நிரய


ஈரிரண்டு தோற்றம் = நான்கு வகைத் தோற்றம்
(அவையாவன: முட்டை, கருப்பை, வேர்வை, வித்து)
எழுபிறப்பு: மரம்,ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர்.

ஆயினும் வள்ளலார் எழுபிறப்பைக் கீழ்க்கண்டவாறு உரைப்பார்:

ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்.

இதில் சூட்சமப் பிறப்பு 7 :
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,
சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.

காரணப் பிறப்பு - மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம்

எண்பான் = எண்பது
ஆரவந்த = பொருந்தச் சேர்ந்த
யோனி = கரு வேறுபாடுகள்
என்பத்து நான்கு நூறாயிரம் = 84 இலட்சம்
அவையாவன:
தாவரம் = 20 இலட்சம்
ஊர்வன == 11 இலட்சம்
நீர்வாழ்வன = 10 இலட்சம்
பறவை = 10 இலட்சம்
விலங்கு = 10 இலட்சம்
மனிதன் = 9 இலட்சம்
தேவன் = 14 இலட்சம்

தீர்வரிய = அனுபவியாது தீர்க்க முடியாத
கறங்கு = காற்றாடி
சகடம் = வண்டிச் சக்கரம்
சென்மித்து = பிறந்து
உழல = திரியும்படி
திரோதித்து = (இறைவனை அறியாதபடி) மறைத்து
வெந்நிரயம் = கொடிய நரகம்

முட்டையில் தோன்றுவது, கருப்பையில் தோன்றுவது, வேர்வையில் தோன்றுவது, வித்து, கிழங்கு ஆகியவைகளில் தோன்றுவது, ஆகிய நான்கு வகைத் தோற்றத்தையும், மேற்கூறிய எழுவகைப் பிறப்புக்களையும், எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களையும் அமைத்து, அவற்றுள், உயிர்கள் அவ்வவற்றின் வினைகளுக்குத் தக்கபடி பிறந்து, காற்றாடியும் வண்டிச் சக்கரமும்போல் சுழன்று அலைந்து திரிந்து - கொடிய நரகம்.......

Tuesday, November 14, 2006

கந்தர் கலிவெண்பா - 7

7.தந்த வருவுருவஞ் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்திரமுதல்
ஆறத்து வாவுமண்டத் தார்ந்தஅத்து வாக்களுமுற்
கூறத்தகுஞ் சிமிழ்ப்பிற் கூட்டுவித்து - மாறிவரும்

விந்து = சுத்த மாயை
மோகினி = அசுத்த மாயை
மான் = பிரபஞ்ச மாயையாம் பிரகிருதி
பெந்தம் = பந்தம், கட்டு
மந்திரமுதல் = மந்திரம் முதலியன
ஆறத்துவா = ஆறு வழிகள் = மந்திரம், பதம், வர்ணம், புவனம், ததுவம், கலை
சிமிழ்ப்பு = பிணைப்பு
மாறிவரும் = மாறிமாறி வருகின்ற

உயிர்கள் உடலெடுக்க உருவமும், உருவற்றதுமான சுத்த மாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை ஆகியற்றவற்றை உயிர்களோடு சேர்ப்பித்து, அவற்றோடு சேர்ந்த உயிர்கள் செல்லுதற்குரிய மந்திரம், பதம், வர்ணம், புவனம், ததுவம், கலை என்னும் ஆறு வழிகளையும், பதிநான்கு உலகிலுள்ள மற்ற வழிகளையும் இணைத்து மாறிமாறி வருகின்ற.......

Thursday, November 09, 2006

கந்தர் கலிவெண்பா - 6

கந்தர் கலிவெண்பா
***********************

6.துருவு மருவு முருவருவு மாகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முக்தியளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்

துருவு மருவு முருவருவு = உருவம், அருவம், அருவுருவம்
பருவ வடிவம் = அடியார் மனப்பக்குவத்திற்கேற்ற திருமேனி
இருள்மலம் = ஆணவ மலம்
மோகம் = மயக்கம்
மலபாகம் = மலங்கள் நீங்கும் நிலை(பக்குவம்)
தேகமுற = உருவெடுக்கும்படி

ஆதிமுதலாகிய ஒரு வடிவத்திலே நின்று,உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களாகி(அடியாருக்கு அவர்தம் மனப்பாங்குக்கு ஏற்றவாறு வெளிப்படும்) பெரிய வடிவங்கள் பலவற்றை உடையவனே! அறியாமைக்குக் காரணமான பாசத்துள் உழன்று மயக்கத்தில் முழுகியுள்ள எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றைத் கொடுப்பதற்கேற்றபடி, அந்தப் பாசங்கள் நீங்கத் திருவருள் வைப்பவனே!

Thursday, October 19, 2006

கந்தர் கலிவெண்பா - 5

5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி - யேகத்

திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்

தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று கருவிகளாகிய விருப்பம், அறிவு, செயல் என்ற மூன்றினால், எல்லாவற்றையும் ஒடுக்கும் பொருளாகியும், பாதுகாக்கும் பொருளாகியும், உண்டாகும் பொருளாகியும் நிற்பவனே!

கந்தர் கலிவெண்பா - 4

4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வுங்
காரணமு மில்லாக் கதியாகித் - தாரணியில்
இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்குந்
தந்திரத்திற் சாராது சார்வதுபோன் - முந்துங்

போக்குவரவு = இறப்பு, பிறப்பு
புணர்வு = பற்றுடைய சம்பந்தம்
காரணம் = தனக்கொரு மூலம்
தாரணி = உலகு
இந்திரசாலம் = செப்படி வித்தை, ஜாலவித்தை
தந்திரம் = வழி, உபாயம்

குறைவு இல்லாத பூரணமான பொருளே!
"பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்."
(உலகில் உள்ள பொருட்கள் போல்) மாற்றம் இல்லாததாய், போதல், வருதல், சேர்தல் , பிரிதல் இல்லாத ஆதாரப் பொருளே!. இவ்வுலகில் இந்திரஜால வித்தை செய்பவன், எல்லோரையும் மயக்குகின்ற தந்திரத்திலே தான் மயங்காது, அதன் சார்பாய் நின்று தொழில் செய்வது போல, தனக்கு ஒரு முதற்காரணம் இல்லாமல், தானே முதற்காரணமாகச் சார்ந்து நிற்பவனே!