Friday, February 12, 2010

கந்தர் கலிவெண்பா - 24

24.திருமுகங்க ளாறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த்தீப் பொறியா றுய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும்
பொங்கு தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்
எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதியென் றெம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்(று)

செந்தழற்கண் = சிவந்த அக்கினி தேவனிடத்தே
உய்ப்ப = செலுத்த
அடுத்ததொரு பூதம் = வாயுவுக்கு அடுத்த பூதமாம் தீ
அதன் தலைவன் = தீக்கடவுள்
கொடுபோதி = கொண்டு போவாய்
பகீரதி = பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை
உய்ப்ப = செலுத்த
போது = பொழுது
ஒரு சற்று = சிறிது

சிவந்த அனல் போன்ற ஆறு திருக்கண்களிலிருந்தும் ஒரே வழியாக ஆறு நெருப்புப் பொறிகளை வெளிவிடவே, அந்தப் பொறிகள் விரிந்த உலகமெங்கும் செல்லுவதைப் பார்த்துத் தேவர்கள் அஞ்சியபடியால், தம் அழகிய திருக்கைகளால், அவற்றை எடுத்துச் சேர்த்துக் காற்று தெய்வத்திடம் தந்து,"நீ இவற்றை எடுத்துக்கொண்டு போ" என்றவுடன், வாயு பகவான் அவற்றை எடுத்துக்கொண்டு போய், ஐம்பூதங்களில் தனக்கு அடுத்த பூதத்துக்கு அதிபதியாம் அக்கினியிடம் கொடுக்க, அவன் அவைகளைக் குளிர்ச்சி மிக்க கங்கையிடம் சேர்க்கவும்.............

0 Comments: