Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 19

நாள் பத்தொன்பது - பாடல் பத்தொன்பது

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு.

உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனெனில் அது தேவையற்ற ஒன்று. எங்களின் பெருமானே! உனக்கு ஒன்று சொல்லுகிறோம். கேடபாயாக. நாங்கள் உன் மெய் அடியார்களையே மணந்துகொள்வோம். உனக்கே நாங்கல் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் உன்னையே நாங்கள் எப்பொழுதும் காணவேண்டும். இறைவா! இவ்வாய்ப்பினை நீ எங்களுக்குத் தந்தருள்வாயாகில், பிறகு கதிரவனே செல்லும் தடம் மாறினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பாவையே! இப்பெரு நிலையை ஓர்ந்து உணர்ந்து ஏற்றுக்கொள்.

பாவை நோன்பிருக்கும் கன்னியர் இப் பாடலில் தங்களின் வேண்டுதல்களை வெளியிடுகிறார்கள். முதலில் எடுத்த பிறவிதோறும் இறைவனுக்குத் தாம் தொண்டர்களாக இருந்ததை அறுதி செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களாகிய நாங்கள் உன்னிடம் கூறிக் கொள்ள ஒன்று உண்டு என்று சொல்லும் போது சொல்ல வருவது வைராக்கியத்தை அறிவித்துக் கொள்வதே.

அவன் அடியார்களுக்கே தாம் அடியார்களாவோம். வாழும் எவரும் வாழும் வரையிலும் உலகியலைத் தவிர்க்க முடிவதில்லை. எனவே இல்லறம் கூட அறத்தாற்றில் நடத்த வேண்டுமானால் அதற்கு இலக்கால் ஒன்றிய வாழ்க்கைத் துணை தேவை. அத்தகைய தேவை அமையப் பெற்றபின் எங்கு என்ன நடந்தால் என்ன என்ற விட்டேற்றி மனப்பான்மையை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.

பாவையர் இறைப் பணிக்கான வாழ்வை வரமாகக் கேட்பது தெளிவாகிறது.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: