Thursday, December 24, 2009

திருப்பாவை - 9

நாள் ஒன்பது - பாடல் ஒன்பது

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

ஒன்பதாம் பாடல், இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்பும் விதத்தில் அமைந்த முந்தைய பாடல்களின்
தொடர்ச்சியே.

இந்தப் பாடலின் தொடக்க வரிகள் அந்தப் பெண் உறங்கிக் கொண்டிருக்கும் அறையை வருணிக்கிறது. பழைய தமிழ் இலக்கியம் படிக்கும் எவரும் உரிச் சொற்கள் பெருமளவில் புழக்கத்தில் இருந்திருப்பதைக் காண முடியும். இங்கு பயன்படுத்தப் பட்டுள்ள உரிச் சொற்கள் உரைகாணப் பெரும் துணையாக இருக்கின்றன. தவிரவும் உரிச் சொற்களைப் பயன்படுத்துவதில் ஓர் இயல்பான அழகைக் காண முடியும். சமயங்களில் ஏறக்குறைய ஒரே பொருள் தரும் உரிச் சொற்கள் வரிசையாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காண முடியும். ஆனால் அவற்றுக்கு ஒரே பொருள் தந்து உரையெழுதுவதோ விளக்கம் அளிப்பதோ பழந்தமிழ் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதாக ஆகிவிடும். இந்தப் பாடல் தமிழ் உரி எப்படிப் பயன்படுகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாக அமைகிறது.

தூமணி மாடம் என்கிறார் ஆண்டாள். தூய்மை என்ற பொருளில்
தூய்மையான மணிகளால் அலங்கரித்த மாடம் என்று பொருள் கொள்ள வேண்டும். நம்மாழ்வார் திருத்துவளை என்ற
தலத்தின் மகிமையைக் குறிக்க “துவளில் மாமணிமாடம் கொண்டு” என்ற தொடரைப் பயன்படுத்துவார். துவளாத
என்ற பொருளில் துவள் இல் என்ற உரி பயன்பட்டது. ஒரு சமயம் துவண்டு போயிருந்து பின்னர் அதிலிருந்து மீண்டதோ என்ற ஐயத்தைக் கிளப்புவது போல அமைந்து விட்டது அந்தத் தொடர். ஆனால் தூமணி மாடம் என்று சொன்ன போது தூய்மை அதன் இயல்பே ஆகிப் போய்விட்ட மணிமாடம் என்ற பொருள் தருவதால் இறைவன் பால் சீரிய கடப்பாட்டை உடைய என்ற பொருளில் விளங்கத் தோன்றுகிறது.

விளக்கொளியில் படுக்கை அறை இருப்பதாகக் குறிக்கப்பட்டு இருப்பதற்கும் காரணம் உண்டு. பிற பெண்கள் வைகறை இருளில் நோன்பிருக்கக் குளத்தில் நீராடப் புறப்பட்ட பின்னரும் இவள் விளக்கு வெளிச்சம் நிறைந்திருந்த அறையில் படுத்திருக்கிறாளே என்று அவள் மேல் குறை சொல்வது நோக்கம். தூபம் கமழ என்னும் போது கண்ணுக்குப் புலனாகாமல் நாசிக்கு மட்டுமே புலனாகும் வாசனைப் புகையைக் குறித்தார். துயிலணை என்ற போது படுத்தவுடனே உறக்கத்தை வரவழைக்கும் மென்மையான படுக்கை என்பது குறிக்கப்பட்டது. பிற பெண்கள் அத்தகைய தத்தம் படுக்கையை விட்டு எழுந்து வந்தபின்னும் இவள் வரவில்லையே என்ற குறை நன்கு வெளிப்படுகிறது.

மாமான் மகளே என அவளை அழைப்பது அவளொன்றும் அயல் வீட்டுப் பெண் அல்ல என்பதைக் குறிக்கவே. அப்பெண்கள்
அனைவருக்கும் பொதுவான பக்தியே அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து உறவாக்கும் இயல்பாகிறது.

எத்தனை அழைத்த போதும் மறுமொழி தராது அவள் படுத்திருக்க அவளது தாயை அழைக்கிறார்கள். அழைத்து மாமீர் அவள் எழுப்புங்களேன் என்கிறார்கள். கூடவே என்னதான் ஆகிவிட்டது உம் மகளுக்கு என்ற கேள்வியையும் கேட்கிறார்கள். மறுமொழி கூற வழியில்லாமல் போவதற்கு செவிடாகிவிட்டாளோ? அல்லது உறக்கம் என்ற மந்திரத்தின் வசப்பட்டு விட்டாளோ?

அப்படிச் சொல்லக் கேட்ட அவளின் அன்னை, "இறைவனின் பெயரைச் சொல்லிப் பாருங்கள்; அவள் எழுந்துவிடுவாள்" என மறுமொழி கூறியிருக்கலாம். எனவேதான் பாடலின் இறுதியில் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும்
சொன்னோம் என்கிறார்கள்.

மாயன் என்ற பெயருக்குப் புரிந்து கொள்ள முடியாத செயல்களை உடையவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மாதவன் என்ற பெயருக்கு செல்வத்துக்குக் கடவுளாகத் தாமரையில் இருக்கும் இலக்குமியின் நாயகன் என்ற பொருள்.

வைகுந்தன் எனும் போது எல்லாவுலகுக்கும் தானே தனி நாயகன் என்பது பொருள்.

ஏற்கெனவே இறை உணர்வை அனுபவித்திருந்த போதும் மாயையில் உழன்று பாவை நோன்பில் சேரத் தயங்கி
நிற்பவளை உணர்த்துமாறு அமைந்தது இந்தப் பாடல். அன்னையின் மொழி கன்னியருக்கு இதுதான் வழி என்று
வழிகாட்டலாகக் கொள்ளல் வேண்டும்.










2 Comments:

வடுவூர் குமார் said...

அருமை அருமை.விளக்கம் அபாரமாக இருக்கு.

ஞானவெட்டியான் said...

அன்பு குமார்,
நன்றி