Tuesday, January 01, 2008

சிவவாக்கியர் பாடல்கள்

சிவ வாக்கியர்




"சிவவாக்கியர் வாழ்க்கைக் குறிப்பு"
***************************************
இவரின் வரலாறு பற்றி ஆதாரமேதும் கிட்டவில்லை. செவிவழிக் கதைகள்தான் நிலவி வருகின்றன. இவைகளில் சில: "துவாபர யுகத்தில் திருமழிசையில் வாழ்ந்து வந்த பார்க்கவ முனிவருக்கு ஆண்மகவொன்று பிறந்தது. "கணிக்கண்ணன்" எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிறக்கும்போதே "சிவசிவ" எனக்கூறிப் பிறக்கவே சிவவாக்கியர் ஆனார்." அடுத்த கதை:-"திருமழிசையில் வாழ்ந்துவந்த அந்தணர் ஒருவருக்குப் பிறந்த இவர், தன் குலவழியாம் மாலியத்தைப் பேணாமல், சைவத்தில் திளைத்தார். பின்னர், திருமால் காட்சியளித்து, அருளிய பின்னர் இவர் திருமழிசை ஆழ்வார் ஆனார்." மற்றுமொரு கதை:- "திருமழிசையில் வாழ்ந்துவந்த அந்தணர் ஒருவருக்குப் பிறந்த இவர், தன் குலவழியாம் சைவத்தில் சில காலமிருந்து "சிவவாக்கியம்" இயற்றினார். பின்னர், திருமால் காட்சியளித்து, அருளிய பின்னர் இவர் மாலியத்தைத் தழுவித் திருமழிசை ஆழ்வார் ஆனார்." பின்னுமொருகதை:- சிவவாக்கியர் திருமழிசையில் தோன்றியவர். கணிக்கண்ணன் இவரது இயற்பெயராம். சைவராயிருந்து பின்னர் சமணம், பௌத்தம், சைவம், மாலியம் ஆகிய சமயங்களைச் சார்ந்து அதன்பின் மாலியத்தைத் தழுவி, "திருமழிசை ஆழ்வார்" என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். அபிதான சிந்தாமணி கூறுவது:- "வேதியர் குலத்தில் பிறந்த இவர் காசி சென்று வதிந்தபோது, இல்லறத்தில் ஆசை கொண்டபோது, இறைவன் சக்கிலி உருவெடுத்து வந்து ஒரு பேய்ச்சுரைக்கயையும் கொஞ்சம் பொருளும் கொடுத்து, "இதைச் சமைத்து எப்பெண் உணவளிக்கிறாளோ அவள்தான் உன் மனைவி" எனக் கூறி மறைந்தார். அங்ஙனமே சமைத்தளித்த ஒரு குறப் பெண்ணை மணந்தார்." பின்னர், கொங்கணரால் உண்மை உணர்த்தப்பட்டு சித்தனாரானார்.

சிவவாக்கியர் திருமணம் :



இவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாயிருக்கலாமெனவும், இவர் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, இவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு.

சித்தர்கள் பதினெண்மரில் இவர் இடம் பெறாதவர் என்பர் சிலர். அகத்தியரோ, தம் பண்ணிரெண்டாயிரம் எனும் நூலில், "வெய்யபுகழ் பதினெண்பேர் சார்பில் சென்று - வேதாந்த சிவவாக்கியர் ஆனார் காணே." எனக் குறிப்பிடதால் சித்தர்வழி வந்தவர்தாம் என விவாதிப்பவரும் உண்டு. இவ்வகத்தியர் எக்காலத்தவர் என்பதும் தெரியவில்லை. அகத்தியர் கூறியது, "வாக்கிலே சிவத்தையுடையவர் ஆவர்" எனும் பொருளிலேயே எனும் விவாதமும் உண்டு. சமணம், பௌத்தம், சைவம், மாலியம் ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார்.

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிச் சமய சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தன் காப்புச் செய்யுளிலேயே தன்னைச் சிவவாக்கியன் என அறிமுகப் படுத்திக்கொள்கிறார். அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடிக் காலத்தை வீணடிக்காது, சுட்டும் விரலை நோக்காது சுட்டும் பொருளை நோக்குவோம்.

0 Comments: