கிரந்திகள் - முடிச்சுகள்
***************************
கிரந்தி எனில் முடிச்சு, மாசு,மறப்பு (யாவற்றையும் மறத்துக்கொண்டிருக்கும் திரைகள்).
பிரபுலிங்க லீலையில், சிவன்,உருத்திரன்,திருமால்,நான்முகன் ஆகியோரது தோற்றத்தை கீழ்க்கண்டவாறு விளக்கப் பட்டுள்ளது:
சிவத் தோற்றம்:
“பரமசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி
உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கந் தன்னின்
வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைபொ ருந்தும்
அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.”
சிவலிங்கத்தினின்று சதாசிவன் தோன்றுவான். ஞானசத்தி அவனைப் பொருந்துவதால் சிவன் தோன்றுவான்.
(திரிவு - மாறுபாடு; உரைமனம் இறந்து நின்ற - வாக்கையும் மனத்தையும் கடந்து நின்ற)
உருத்திரன், திருமால் ஆகியோரின் தோற்றம்:
“சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியவ் விருவ ரானும்
தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி
மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும்
போற்றுறும் அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால்.”
(சாற்றும் - சொல்லும்; போற்றுறும் - போற்றுதலைப் பெறுகின்ற; அரி - திருமால்; பொறி - திருமகள்)
சிவனுக்கு இச்சா சக்தி சத்தியாவாள். இவ்விருவராலும் உருத்திரன் தோன்றுவான். உருத்திரனுக்குக் கிரியா சக்தி சத்தியாவாள். இவ்விருவராலும் திருமால் தோன்றுவான். திருமாலுக்குத் திருமகள் சத்தியாவாள்.
நான்முகன் தோற்றம்:
“அத்திரு மாலு மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு
மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச்
சத்திவெண் கமலை அன்னோர் தரவரும் உலகின் தோற்றம்
நித்தனங் குகு கேச னினைவுமாத் திரையி நாமால்.”
(மா - திருமகள்; இசைமுரலும் - இசைபடுகின்ற; செங்கேழ் முளரி - செவ்விய நிறத்தையுடைய தாமரை; வெண்கமலை - வெண்டாமரையில் இருக்கும் கலைமகள்; குகேசன் - அல்லம தேவன்,(உள்ளக்)குகையிலிருக்கும் ஈசன்; னினைவு மாத்திரை - எண்ணம் ஒன்றாலே;
திருமாலும் திருமகளும் நல்கலால் நான்முகன் தோன்றுவான். அவனுக்குக் கலைமகள் சத்தியாவாள். இவ்விருவராலும் உலகத் தோற்றங்களெல்லாம் உண்டாகும். இவ்வளவும் குகேசனது ஓர் எண்ணத்தினால் உண்டாவதாகும்.
மும்மலங்கள் : ஆணவம்,மாயை,கன்மம்
மூலப்பொருள்: உருத்திர கிரந்தி, விட்டுணு கிரந்தி, பிரம்ம கிரந்தி
ஆணவத்தின் மூலம் “நான்” என்னும் அகந்தை. அது வெளிப்படும்போது ஆணவமாக விளிக்கப்படுகிறது. அது உருத்திர கிரந்தி.
விட்டுணுவே மகாமாயை. ஆகவே, மாயை விட்டுணு கிரந்தி.
கிரியையைத் தலையாக உடையவன் பிரம்மா. தோற்றங்கள் அவனால் உண்டாகின்றன. ஆகையினால், கன்மம் பிரம்ம கிரந்தி.
இம்மலங்கள் மூன்றினுக்கும் மூலம் மறப்பு(நினைவற்ற நிலை). இதுவே பெரிய கிரந்தி.
உருத்திரன், பிரமன் ஆகியோரது தோற்றங்களை வைத்து கிரந்திகளின் பெயர்களை மாற்றிச் சொல்வதும் உண்டு. ஆகவே, அவர்களின் தோற்றங்களுக்கு நூலாதாரமும் தந்துள்ளேன்.
Thursday, December 27, 2007
கிரந்திகள் - முடிச்சுகள்
Posted by ஞானவெட்டியான் at 5:09 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment