Thursday, December 27, 2007

இந்த பொய்" யான உடலை ஏன் மெய்" என்று அழைக்கின்றோம்?

இந்த பொய்" யான உடலை ஏன் மெய்" என்று அழைக்கின்றோம்?
**************************************************************************
மெய் = மெய்யெழுத்து, உடல், உண்மை(உள்+மெய்)
இந்த உடலை(மெய்யாகவிருந்தும்)ஏன் பொய் என்கிறோம்?

உடல் அழியும். நிலையில்லாததால் மெய் பொய்யாகிறது.

ஆனால் மெய் (உடல்) , மெய்யே!
என்ன இது குழப்பம்என நினைக்கிறீர்களா?

"தேகமென்னுஞ் சிவாலய மாமதிற்
சென்னி சிறுவாயிற் கோபுரமாம்
காகமான விரண்டு கரக்கோடுங்
கையாங் கேளடி ஞானப் பெண்ணே." (ஞானக் கும்மி)

உடல் சிவாலயம்.ஏனெனில் சிவனாம் சீவன் இருப்பிடம்.
சென்னியாம் தலை சிறு வாயிலின் கோபுரமாம். இவ்வளவையும் தாங்கி நிற்பதால் மெய் மெய்யே.
அதன் நிலையற்றதன்மையை குறிக்குங்கால் அது பொய்.

<<<உடல் சிவாலயம்.>>>

இதே கருத்து விவிலியத்திலும் கூறப்பட்டிருக்கிறது. "நீங்களே தேவாலயமாக
இருக்கிறீர்கள்" என்று ஆண்டவர் மக்களை பார்த்து சொல்லுவார்.

~காந்தி ஜெகநாதன்~

அன்பு காந்தி,

எல்லா புனித நூல்களும் ஒன்றைத்தான் கூறுகின்றன. மனிதன்தான் மதம் பிடித்து மதத்தையும் உண்டாக்கி மனிதர்களின் மனத்தைக் கெடுத்து, தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்து, அடுத்தவர்களை அழித்து அதில் இன்பம் கண்டு இறுதியில் அவனும் சீர் அழிந்து இறக்கிறான்.

"நீங்களே தேவாலயமாக இருக்கிறீர்கள்" புனித விவிலியம்.
உடனே அடுத்த வினா உங்களிடமிருந்து வரவேண்டியது "அப்படியெனில் இயேசு பிரான் யார்?"

விடை: இந்த உடலாம் தேவாலயத்துக்குள் இருக்கும் உயிப்பு (மூச்சு)தான்
இயேசு பிரான். அது புனித ஆவி.

இவ்வாறாகத் தனக்குத்தானே வினாவெழுப்ப தனக்குள்ளேயே விடை கிடைக்கும்.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்"
அண்டம் = முட்டை, உலகம், பிரபஞ்சம்

இனி சிந்திக்க ஆரம்பியுங்கள்.
சிந்திக்க சிந்திக்க தெளிவு பிறக்கும். சித்தம் இனிக்கும்.

ஞானவெட்டியான்
******************
அன்பு நண்பர்களே,

இத்தகைய கருத்துக்கள் மதம் மற்றும் ஆன்மிகத்துக்கு இடையிலான வேறுபாட்டைச் சிந்திக்கச் செய்கின்றன.

மதங்கள் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. மனிதன் எப்போதுமே தான் செய்ததை உயர்ந்தது, அது மட்டுமே பின்பற்றத் தக்கது என்று அறிவிப்பவனாய்
இருக்கிறான். எனவேதான் மதநூல்கள்--அவை கடவுளால் தீர்க்கதரிசிகளின்
வாயிலாகச் சொல்லப்பட்டதாகச் சொன்னாலும்கூட--பலமுறை தமது மதத்தை
ஏற்காதவர்கள் மீது வன்முறையை ஏவுவதைப் பார்க்க முடிகிறது. நாம்
மதநூல்களின் நல்லவற்றை மட்டுமே பார்த்து எல்லா மதங்களும் அன்பைப்
போதிக்கின்றன என்று கிளிப்பிள்ளை போலச் சொல்லி வருகிறோம். அது உண்மையல்ல.

ஆனால், ஆன்மிகம் என்பது மதத்தைக் கடந்த நிலை. ஞானியர், யோகியர்,
சித்தர்கள் அடைந்த நிலை. அத்தகைய மேன்மக்களை எல்லா மதத்திலும் காணலாம்.

ஆனால் மதத்தின் வழியேதான் மதத்தைக் கடக்க வேண்டும். மதம் மனிதனை
ஆன்மிகத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

ஓர் விமானத்தில் ஏறவேண்டுமானால் அதற்குமுன்னால் நீங்கள் விமானநிலையப் பேருந்தில் ஏறி விமானத்தின் அருகே செல்கிறீர்கள். அந்தப் பேருந்து போன்றதுதான் மதம். அந்தப் பேருந்து பறக்காது. ஆனால் பறக்கின்ற
விமானத்துக்கு உங்களை இட்டுச் செல்லும்.

விமானம் போன்றது ஆன்மிகம். ஆனால் பலரும் பேருந்தே தம்மை வெளிநாட்டுக்கு (முக்தி, நிர்வாணம், விடுதலை) இட்டுச் செல்லும் என்று
நினைத்துவிடுகிறார்கள். மதமாகிய தமது பேருந்தை விட்டு இறங்க
மறுக்கிறார்கள். தனது பேருந்துதான் உயர்ந்தது என்று சச்சரவு
செய்கிறார்கள். அதற்காக ரத்த ஆறுகூட ஓடவிடுகிறார்கள்.

'மெய்ப்பொருள், அதனைச் சான்றோர் பல விதமாக அழைக்கிறார்கள்' (ஏகம் சத்,
விப்ரஹ பஹ¤தா வதந்தி) என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். 'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்று
கூக்குரலிட்டார்கள். அதற்கு என்ன பொருள்? எல்லா நாட்டவரும் சிவ வழிபாடு
செய்கிறார்கள் என்றா? இல்லை, 'இங்கே நாங்கள் சிவனே! என்று அழைக்கிற
நீயேதான் பலநாடுகளில் பல பெயர்களில் வணங்கப்படுகிறாய்' என்பதுதான்
பொருள்.

எனவே உண்மையான உயர்வு வேண்டுகிறவன், தன் மதத்தை நம்ப வேண்டும். அதை அனுசரிக்க வேண்டும். பிற மதங்களை மதிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல, தவம் தியானம் ஆகிய பயிற்சிகளால் பெயரும் வடிவமும் கடந்த, மனதுக்கும் சொல்லுக்கும் அப்பால், சுத்த சத்தியமாக இருக்கின்ற மெய்ப்பொருளை உணரவேண்டும்.

அவனுக்கு அன்பு ஒன்றே மதம். வள்ளலாரும், ரமணரும், ராமகிருஷ்ண
பரமஹம்சரும், சித்தர் பெருமக்களும் நமக்கு விட்டுச் சென்ற வழி இதுவே.

அன்புடன்
மதுரபாரதி

1 Comment:

Anonymous said...

அத்தனையும் முத்துக்கள்தான். ஐயமே இல்லை.