Friday, December 28, 2007

ஞானம் எட்டி - அறிமுகம்

ஞானம் எட்டி - அறிமுகம்
****************************

"அரிது அரிது மானிடராதல் அரிது" என்னும் வாக்கியத்திற்கிணங்க, உலகில் பலகோடி சீவன்கள் உதித்து, தீயதாகிய அஞ்ஞான இருளைப் போக்கி, நல்வழியைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு எல்லாத் தத்துவங்களையும் விளக்கிக் காட்டி மெய்ப் பொருளை அடைவதற்குரிய வழிமுறைகளை உள்ளங்கை நெல்லியெனத் தரும் நூல்களில் இதுவும் ஒன்று.

"ஞானவெட்டியான்" என வழங்கப்பெறும் நூல் முன்னர் "ஞானம் எட்டி" எனத் திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்டதென்பர். ஆயினும் அதில் காணப்பெறும் கிரந்த எழுத்துக்களும், வடமொழிச் சொற்களும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவரால் எழுதப்பட்டருக்காது என ஆய்வு செய்தவர்களின் கருத்து. என் கருத்துமதே. இதன் நடையைக் கூர்ந்து நோக்கின், 16 அல்லது 17 நூற்றாண்டு எழுதப்பெற்றிருக்கலாம். ஔவையில் பலரிருந்ததைப்போல் திருவள்ளுவர் (2) எனும் புனைப் பெயரில் அடையாளம் காட்ட விரும்பாத ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம்.

இந்நூல் "ஞானம் வெற்றி" என வழங்கியதாகவும், இதுவே பின்னர் "ஞானம் வெட்டி"என்றாகி "ஞானவெட்டியான்" என்றாகியது எனவும் மெய்வழி குழந்தைசாமிக் கவுண்டர் கூறுவார்.

என்னிடம் உள்ளது 1960ல் திருவண்ணாமலை திரு.சிதம்பரம் அவர்களிடமிருந்த ஏட்டுச் சுவடியிலிருந்து கைப்படி எடுக்கப்பட்டது; 1970ல்தீண்டாப்பளையம் திரு.அ.பெரியசாமிப் பண்டிதரிடமிருந்த 1931ல் சென்னை வித்தியாரத்நாகரம் அச்சகத்தாரால் பதிப்பிக்கப்பட்ட நூலுடன் சரிபார்க்கப்பட்டது. இரண்டுக்கும் பல வேறுபடுகள் உள்ளன. வழக்கிலில்லாத நூலை வரும் தலைமுறைக்குத் தரவேண்டுமென்றே இதை என் வலைப்பூவில் இடுகின்றேன்.

கிரந்தம் தவிற்கும்பொழுது பாவிலக்கணம் சிதையுண்டுவிடலாகாதே என்னும் அச்சத்தினாலும், வடமொழிக் கலப்புடன் விளக்க உரை எழுத மனம் இல்லாததாலுமே சுணங்கியுள்ளேன். திரு. இராமச்சந்திரன் என்பவர் பாக்களைமட்டிலும் தொகுத்து 1999ல் தாமரை நூலகத்தார் உதவியுடன் அச்சேற்றியுள்ளார் எனவும் தெரிகிறது. அந்நூலையும் நான் கண்டேனில்லை.

"எது வரினும் வருக!" எனத் துணிந்து, இயன்றவரை கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்துப் பாக்களையும், விளக்க உரையில் ஏலும்வரை வடமொழி தவிர்த்தும் எழுதியுள்ளேன். இதிகாச புராணங்களிலுள்ள அனைத்து வேதாந்த சாரமெல்லாம் எல்லோருக்கும் ஐயம்தெளியத் தெரியும் பொருட்டு "ஞானமெட்டி" என்னும் வழக்கொழிந்த அரிய நூலை திருவருள் ஆணையின் பேரில், குருவின் ஆசியுடன் அடியேனால் மின்வலை ஏற்றப்பட்டது.

மூத்தோர் ஆசி கூறுக. இளையோர் இறையை வணங்கிப் பலன் பெறுவீராக.

0 Comments: