கண்ணப்ப நாயனார்
******************************
தங்கை சேதுக்கரசி எழுப்பிய வினாவும்,
அதற்குஎன் விடையும்.
**************************************
என் ஐயத்தை விவரிக்கும் முன் கண்ணப்ப நாயனார் கதையை இங்கே இடுகிறேன். இந்தக் கதையை என்னைப் போல் பலரும் சிறுவயதில் கேட்டிருக்கக்கூடும், சரியாக நினைவில்லாமல் இருக்கக்கூடும், இன்னும் சிலருக்குப் புதிதாக இருக்கவும் கூடும். மேலும், கண்ணப்பரின் பக்தி இமயமலையினும் உயர்ந்தது என்பதையும், ஆழ்கடலினும் ஆழமானது என்பதையும் அவர் கதையை ஓரளவாவது
அறிந்தவர்களால் தான் உணரமுடியும். அந்த அளவற்ற பக்தியோடு தொடர்புடையது தான் என் ஐயமும், அதனால் இக்கதையைச் சைவ சித்தாந்த வலைத்தளத்திலிருந்து எடுத்துச் சற்றே சுருக்கி மொழிபெயர்த்து எழுதுகிறேன்.
கண்ணப்ப நாயனார்
(கண்ணப்பர்)
இயற்பெயர் - திண்ணன்
63 நாயன்மார்களில் ஒருவர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
ஆதிசங்கரர், நக்கீரர் முதலான எண்ணற்ற சான்றோர் ஒரு வேடனை மிகவும் புகழ்வர். அவன் நான்மறைகள் அறியாதவன். அவன் அறிந்ததெல்லாம் வேட்டையாடுதல் மட்டுமே. ஆனால் இன்றும் பக்திக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவன். சிவபெருமான் மேல் எளிமையான ஆனால் ஈடு இணையற்ற அன்புடையவன். அந்த அன்பைச் சான்றோரால் கூட வார்த்தைகளால் அளவிடமுடியாது, அவ்வன்பின்
பிரம்மாண்டத்தை எண்ணினால் பக்தியின் மலையுச்சிக்கே நம்மையழைத்துச் செல்லும்.
பசும் காடுகளும் மலைகளுமாக இயற்கை கொழிக்கும் பொதப்பி நாட்டில் உடுப்பூர் என்ற ஊர் இருந்தது. மலைமுகட்டிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளுக்கும் துள்ளித்திரியும் மான்களுக்கும் இடையே வேட்டையாடப்பட்ட மிருகங்களும் வேட்டைக்கு உபயோகப்படுத்தும் வலைகளும் ஆங்காங்கே காயப்போடப்பட்டிருக்கும். மலை சார்ந்த உடுப்பூரில் உள்ள பாறைகளிலும் கற்களிலும் அந்த மிருகங்களின் உயிரற்ற உடல்களிலிருந்து வரும் துர்நாற்றம் படிந்திருக்கும்.
அங்கே நாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில் தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்துப் ஒரு மகன் பிறந்தான். குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். வேடர்கள் தலைவனின் மகனல்லவா? மிருகங்களின்
உடலிலிருந்த எடுக்கப்பட்ட பற்கள், தந்தங்கள் முதலியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களை அவன் மார்பிலும் இடையிலும் அணிகலன்கலாகப் பூண்டு வளர்ந்தவன். காட்டுப்பன்றிகளுடனும் காட்டுநாய்களுடனும் பாம்புகளுடனுமே விளையாடி வளர்ந்தவன்.
திண்ணனுக்குப் பதினாறு வயதானதும் ஒரு நல்ல நாள் பார்த்து நாகன் அவனுக்கு வேட்டையாடும் கலையைக் கற்றுத்தந்து ஏழு நாள் விழா எடுத்து ஊரார் அனைவரும் கூடியிருக்கப் பிரமாதமாக அவன் மகனை வேட்டையாடுதலுக்கு அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் சிறப்பாக உணவளித்தான்... கசாப்புச் சாப்பாடு தான், வேறென்ன? அன்றிலிருந்து திண்ணனே வேடர்கள் தலைவனானான். சில நாட்களில்
நாகனுக்கு வயதானதும் திண்ணன் பொறுப்பெற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது.
அதிகாலையில் சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனனைப் போல அம்பும் வில்லுமாக ஒரு மாவீரன் போல் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடன் ஏனைய வேடர்களும் சென்றனர். ஏராளமான மிருகங்களைக் கொன்று வீழ்த்தினர். அப்போது ஒரு காட்டுப்பன்றி வேட்டைக்குத் தோண்டியிருந்த குழிகளிலிருந்தும் வேடர்கள் விரித்து வைத்திருந்த வலைகளினின்றும் தப்பியோடியது. மூன்று பேரால் மட்டுமே அந்தப் பன்றியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதைத் துரத்த
முடிந்தது - திண்ணன், நாணன், காடன். ஆயினும் அது அவர்கள் எப்போதும் வேட்டையாடும் காட்டை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்று திருக்காளஹஸ்தி மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் நின்றது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்கே தலைவனான திண்ணன் வீராவேசத்தோடு முன் சென்று அதைக் கொன்று வீழ்த்தினான்.
அப்போது தான் மற்ற வேடர்களை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர். திண்ணன் அந்தப் பன்றியைக் காடனிடம் கொடுத்து மூவரும் பசியாறுவதற்காகச் சமைக்கச் சொன்னான். காட்டுக்கும் மலைக்கும் அந்தப்பக்கம் பொன்முகலி என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர் எடுத்துவருவதற்காக அங்கே சென்றனர். அவ்வாறு காட்டைக்
கடந்து செல்லும்போது திண்ணன் காளஹஸ்தி மலையைக் கண்டு பரவசப்பட்டு அதனருகே சென்றான். மலையுச்சியில் குடுமித்தேவர் (சிவன்) ஆலயம் இருப்பதாகவும் அவரைத் தரிசிக்கலாமென்றும் நாணன் கூற, அதுவே சிவனின் பாற்செல்ல திண்ணன் எடுத்த முதல் அடியாகும்.
முற்பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலன், திண்ணனை சிவபெருமானின் பால் ஈர்க்க உதவின. அவரிடம் அவன் கொண்ட ஈடிலா அன்பானது பெருவெள்ளமாகப் பொங்கி வளரத் தொடங்கியது. அவனுடைய தூய அன்பும் உடன் வந்த நாணனும் அவனை மலைமேல்
அழைத்துச் சென்றன. உள்ளம் கவர் கள்வனாகிய சிவபெருமானை அவன் காண்பதற்கு முன் அந்தக் கள்வனே திண்ணனுடைய பிறப்பின் ஆதாரமும் அவனுடைய பிறப்புக்கும் வாழ்க்கைக்குமிடையேயான உறவாகிய வேட்டையெனும் கலையைக் களவாடிவிட்டார்.
திண்ணன் அங்கே ஒர் சிவலிங்கத்தைக் கண்டான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்களினால் பருக, அக்காட்சியின் அருமை அவன் நெஞ்சில் நிரம்பி வழிந்தது. அவன் நினைவு தன் வசமில்லாமல் போயிற்று. அந்த அன்புப் பரவசத்தில் அவனை ஆழ்த்திய சிவனிடம் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டான். அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது.
அதே சமயம் அவன் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் வழிந்தது.
"எம்பெருமானே! இந்த அடர்ந்த காட்டில் கொடிய மிருகங்களுக்கிடையே உன்னைக் காக்க ஆளில்லாமல் இப்படித் தனிமையில் இருக்கிறாயே? இது முறையன்று! இது முறையன்று!" என்று கதறினான். அவனுடைய வில் கீழே விழுந்தது கூடத் தெரியாமல், நாணனிடம், "யார் இப்படி எம்பெருமானுக்குப் பச்சிலையும்
பூக்களுமாக உணவளித்திருப்பார்கள்?" என்று வினவினான். அதற்கு நாணன், "ஒரு முறை நான் இங்கே வேட்டையாட வந்தபோது ஓர் அந்தணர் அபிஷேகம் செய்து பூச்சொரிந்ததைக் கண்டேன். அவர் தான் இன்றும் செய்திருக்கவேண்டும்" என்றான். திண்ணனுக்குப் பொறுக்கவில்லை. "எம்பெருமான் இப்படித் தனியே இருப்பதா? அவருக்கு மாமிச உணவு, இறைச்சி உணவளிக்க ஆளில்லை! அவரை எப்படித் தனியே விட்டு வருவேன்? என் செய்வேன்? அவருக்குப் பசியாற நல் இறைச்சி கொண்டுவரவேண்டும் நான்!" என்று கூறினான்.
திண்ணன் சிவனுக்கு இறைச்சி கொணர முற்படுவான், ஆனால் அவர்
தனிமையிலிருப்பது நினைவுக்கு வரவும் ஓடோடி வந்து அவருக்குத் துணையிருக்க எண்ணுவான். மீண்டும் இறைச்சி கொணர முற்படுவான், மீண்டும் ஓடோடி வந்து துணையிருப்பான். இப்படியே ஒரு பசு தன் இளம் கன்றை விட்டு அகலாதது போல் சிவனுக்கு முன் நின்று அவரிடமிருந்து தன் கண்களைப் பறித்தெடுக்க இயலாமல்
தடுமாறினான். ஒரு கணம், "எம்பெருமானே! உனக்கு மிகச்சிறந்த இறைச்சி கொண்டுவரப் போகிறேன்!" என்று உறுதிமொழி கூறுவான். மறுகணம், "உன்னைத் தனிமையில் விட்டு எங்ஙனம் செல்வேன்?" என்பான். பின், "ஆனால் நீ மிகுந்த பசியுடனிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லையே... என் செய்வேன்!" என்று புலம்புவான். கடைசியில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அனைத்தும் உடைய சிவபெருமானுக்கு வேண்டியதைக் கொண்டு வந்தே தீரவேண்டுமென்ற ஒரு முடிவோடு சென்றான்.
இவ்வுலகிலுள்ள எல்லாவற்றின் மீதும் உள்ள ஆசைகளனைத்தும் எரிந்துபோய் சிவனின் மீதுள்ள ஆசை மட்டுமே அவனிடமிருக்க, திண்ணனும் நாணனும் பொன்முகலி நதிக்கரையிலிருந்த ஓர் அழகிய சோலையை வந்தடைந்தனர். அப்போது காடன் வந்து காட்டுப் பன்றியைச் சமைத்து முடித்த செய்தியைச் சொல்லி மூவரும்
உணவருந்தலாமென்று அழைத்தான். நாணன் அவனிடம், திண்ணன் சிவனைத் தரிசித்தபின் தான் வேடர்களின் தலைவன் என்ற உண்மையை மறந்து (மெய் மறந்து) அந்த எண்ணத்தைத் துறந்து, தன்னை இப்போது சிவனின் அடிமையாகவே கருதுகிறானென்று சொன்னான். அதைக் கேட்டதும் காடன் அதிர்ச்சியடைந்தான்.
திண்ணனோ எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் பன்றிக்கறியின் மிகச்சுவையாக இருக்கக்கூடிய பாகங்களை ஒரு அம்பினால் குத்தியெடுத்துத் தன் வாயிலிட்டுச் சுவைத்துப் பின் அதை வாயினின்றும் வெளியிலெடுத்துத் தான் சுவைத்தவற்றுள்
மிகச்சிறந்தவையைத் தனியே சேகரித்தான். மற்ற இருவரும், "இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! இறைச்சியைச் சுவைத்தபின் அதையெடுத்துச் சேகரிக்கிறானே! அவனுக்குக் நிச்சயமாகக் கடும் பசியிருக்கும், ஆனாலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறானே! நமக்கும் உணவளிக்க மாட்டேனென்கிறான்! அவனுடைய தந்தை நாகனையும் மற்றவர்களையும் அழைத்து வந்து
என்ன செய்வதென்று பார்ப்போம்" என்று அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.
எந்தச் சலனமுமில்லாமல், திண்ணன் இறைச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அபிஷேகம் செய்யச் சிறிது தண்ணீரைத் தன் வாயில் நிரப்பிக்கொண்டு, சிவனுக்குச் சமர்ப்பிக்க அழகிய மலர்கள் சிலவற்றைக் கொய்து தன் தலையில் சூடியெடுத்துக்கொண்டு, சிவனுக்குப் பசிக்குமே என்றெண்ணி மலையுச்சிக்கு விரைந்து சென்றான். சுயம்புவாகத் தோன்றிய அந்தச் சிவலிங்கத்தின் தலையிலிருந்த பூக்களைத் தன் கால்களால் களைந்து வீசித் தன் வாயிலிருந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, தன் தலையில் சூடி வந்த மலர்களால் அலங்கரித்துப் பணிந்தபின் தான் சுவைத்து எடுத்து வந்த இறைச்சியை உணவாக அளித்தான். அப்படியும் அவனுக்குச் சமாதானமாகவில்லை. சிவனுக்கு மேலும் உணவளிக்க வேண்டுமென்றெண்ணினான்.
சூரியன் அஸ்தமனமாகிப் பொழுது சாய்ந்தது. அச்சமென்றால் என்னவென்றே அறிந்திராத வேடர்கள் தலைவன் திண்ணன், வனவிலங்குகள் இரவில் வந்து சிவனைத் துன்புறுத்துமோ என்று அஞ்சினான். அதனால் அருகிலேயே தன் வில்லும் அம்பும் உடனாகக் காவலிருந்தான். மறுநாள் பொழுது புலரும் சமயம் சிவனை விழுந்து
வணங்கிவிட்டு அவருக்கு மீண்டும் உணவளிப்பதற்காக வேட்டையாடக் கிளம்பினான். ஈரேழு புவனங்களையும் என்றென்றும் காக்கும் பெருமானை அருகிலேயே நின்று காத்ததற்காக அவன் பெயர் எப்போதும் நிலைத்து நிற்கட்டுமாக.
அவன் சென்றவுடன் சிவகோச்சாரியார் என்ற முனிவர் வந்தார். சிவலிங்கத்துக்கு முன் சிதறிக் கிடந்த இறைச்சியையும் எலும்புத் துண்டுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். "இது அந்தப் பொல்லாத வேடர்களின் வேலையகத்தானிருக்கும்" என்றெண்ணிச் சன்னதியை மிகவும் சிரத்தையாகச் சுத்தம் செய்தபின் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு விரைந்து வந்தார். பின்னர் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்து அவருடைய திருநாமங்களை மொழிந்து அந்த ஒப்பிலாப் பரம்பொருளைப் பல முறை விழுந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினார்.
நம் அன்பு வேடன் திண்ணன் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியை தீயில் வேகவைத்தான். சிவனுக்கு மிகுந்த சுவையுள்ள உணவையே அளிக்கவேண்டுமென்பதால் இறைச்சித் துண்டங்களைச் சுவைத்து அவற்றுள் மிகச்சுவையானவற்றையே தேர்ந்தெடுத்தான். அவற்றை மேலும் சுவையுள்ளவையாக்க அவற்றின் மேல் தேன் வார்த்துக்
கொடுத்தான் திண்ணன். ஹோமம் செய்யும்போது நெருப்புப் பிழம்புகளுக்கு வார்க்கப்படும் நெய் தேவர்களைச் சென்றடைவது போல் திண்ணன் சுவைத்துக் கொடுத்த உணவை சிவபெருமான் மிகவும் விருப்பப்பட்டு ஏற்று மகிழ்ந்தார்.
தினமும் பூசைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பிறப்பிறப்பிலாப் பெருமானை மிகுந்த அன்புடன் வழிபடச் செல்வான். முனிவர் இட்டிருந்த மலர்களை அவன் காலால் அப்புறப்படுத்தி மான்கறி, காட்டுப்பன்றிக்கறி அளிப்பான். இரவு உறக்கத்தை மறந்து சிவனைக் காவல் காப்பதையே கருத்தாகக் கொள்வான். மீண்டும் பகலில் சிவனுக்கு இரை தேடுவதற்காக வேட்டையாடச் செல்வான். பகலில் வழிபட வரும் சிவகோச்சாரியாரோ சன்னதியில் தகாத பொருட்கள் இருப்பதைக் கண்டு வேதனைப்பட்டு அவற்றை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து முறைப்படி வழிபடுவார். இப்படியாகப் பல நாட்கள் கழிந்தன. இதற்கிடையே நாணனும் காடனும் திண்ணனின் தந்தை நாகனையும் மற்றவர்களையும் அழைத்து வந்தனர். ஆனால் யார் சொல்லியும் திண்ணன் கேட்பதாக இல்லை. பற்றற்ற இறைவனின் பதமலர் மேல் ஒருவன் மட்டற்ற அன்பு வைத்திருந்தானென்றால் இவ்வுலகில் எந்த சக்தியாலும் அவர்களைப் பிரிக்க இயலுமா?
இப்படியாக நம் நாயனார் (திண்ணனார்) இறைவருக்கு இறைவனான சிவபெருமானைத் தனக்குத் தெரிந்த முறையில் வழிபட்டுக் கொண்டிருக்க, சிவகோச்சாரியார் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டித் தவித்தார். இப்படியொரு தகாத செயலைச் செய்பவனை நீ தான் அடையாளம் காட்டி அவனை அகற்ற வேண்டுமென்று சிவனிடம் முறையிட்டார். நாயனாரின் மெய்யான அன்பை விளக்க, சிவகோச்சாரியாரின் கனவில் சிவன் தோன்றி, "அவனை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணாதே! என்னுடைய அன்பே அவனை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவன் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறான். அவன் செயல்கள் எனக்கு ஆனந்தமளிக்கின்றன. அவன் வாயிலிருந்து என் மேல் அவன் துப்பும் தண்ணீர் கங்கையைவிடப் புனிதமானது, அவன் தலையில் சூடிக்கொண்டுவந்து எனக்கு அளிக்கும் மலர்கள் தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்களை விடப் புனிதமானவை. இவையெல்லாம் அவனுடைய அன்பின் அடையாளம். நாளை அவன் வரும்போது மறைந்திருந்து பார்த்தாயானால் அவனுடைய பக்தியின் மகிமை உனக்குத் தெரியும்!" அச்சமும் பிரமிப்பும் கலந்த எண்ணங்களோடு சிவகோச்சாரியார் அன்றிரவு முழுவதும் உறங்க இயலாமல், சூரியன் உதித்தவுடன் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு காளஹஸ்தி ஈசுவரனின் சன்னதியை அடைந்து மறைவாக இருந்து கவனித்தார்.
அன்று ஏழாவது நாள்... திண்ணனார் என்றும் போல் அளவிலா அன்புடன் பூசைப் பொருட்களைக் கொண்டுவந்தார். பூசைக்குத் தாமதமாயிற்றே என்றெண்ணிய திண்ணனாருக்குப் போகிற வழியெல்லாம் அபசகுனங்கள் பல தோன்றின. சிவனுக்கு ஏதேனும் ஆயிற்றோ என்றஞ்சி விரைந்தோடினார். சிவகோச்சாரியாருக்குத் திண்ணனாரின் அன்பைக் காட்டுவதற்காக சிவன் தன் முக்கண்ணில் ஒன்றிலிருந்து
இரத்தம் கசியச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார் அம்பும் வில்லும்
இறைச்சியும் ஆங்காங்கே சிதற அஞ்சி அதிர்ச்சியடைந்து மிகவும்
வேதனைப்பட்டார். சிவனருகே ஓடிச்சென்று குருதியை நிறுத்த முயன்றார், ஆனால் அது நிற்கும்படியாக இல்லை. இச்செயலைச் செய்த குற்றவாளி யாராக இருக்குமென்று உக்கிரமான கோபத்துடன் எல்லாப் பக்கமும் தேடினார். மக்களையோ மிருகங்களையோ யாரையும் அருகே காணவில்லை. மனமுடைந்து சன்னதிக்குத் திரும்பியவர், தன் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதார். பிறவிப்பிணி முதலாய
எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் மருந்தான சிவபெருமானின் பிணிதீர்க்க மருந்து தேடிக் காற்றைப்போல் மிகவிரைவாகச் சென்று காட்டிலிருந்த மூலிகைகளிலிருந்து மருந்தெடுத்துக் கொண்டுவந்தார். அப்படியும் ஒரு பிரயோசனமுமில்லை! உண்மையான காயமாக இருந்தால் ஆறியிருக்குமே... ஆனால் அந்தக் கள்வன் தான் ஒரு விசயத்தை நிரூபிக்கவே இந்நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறாரே!
சிவன் கண்ணினின்றும் வழியும் குருதியை நிறுத்தமுடியாத தன் இயலாமையை எண்ணி வாடி வருந்திய திண்ணனாருக்குத் திடீரென்று ஒரு யோசனை உதிக்க, அம்பினால் தன் கண்ணைத் தோண்டியெடுத்து சிவனின் கண் இருக்குமிடத்தில் வைத்தார். உடனே இரத்தம் வழிவது நிற்கவும், அவர் பேரானந்தமடைந்து வான் வரை குதித்துத் தான் செய்த வீரச்செயலையெண்ணி மகிழ்ந்தார். இங்ஙனம் செய்வதால் அவருடைய
பக்தியின் எல்லையைக் காண்பிக்க முயற்சிக்கிறாரா?
செல்வந்தர்களும் முனிவர்களும் இறைவனிடம் ஏதாவது யாசித்து வரும்போது திண்ணனாரால் மட்டும் எப்படித் தன் கண்ணையே ஒரு நொடியில் பறித்தெடுத்துச் சிவனுக்கு அளித்து இப்படி ஆனந்தக்களியாட்டம் ஆட இயல்கிறது? அவர் மிருகங்களை வேட்டையாடிக் கொன்று வாழும் பரம்பரையில் வந்தவராயிருக்கலாம், ஆனால் அவர் செய்கைகளால் வானோரையும் விண்ணோரையும் விட மிகவும் உயர்ந்துவிட்டார்.
ஆனால் சிவபெருமானோ அவருடைய பக்தி இதைக்காட்டிலும் எல்லையற்றது என்பதை நிரூபிக்க முடிவெடுத்தார். அவர் வலது கண்ணில் குருதி நின்றதும் இடது கண்ணினின்று குருதி வழியத் தொடங்கியது. ஒரு கணம் அதிர்ச்சியடைந்த நாயனார், "ஓ... இப்போது தான் இப்பிணிக்கு மருந்து என்னவென்று எனக்குத் தெரியுமே... என்னிடம் இன்னொரு கண் உள்ளதல்லவா? அதுவே இதைத் தீர்த்து
வைக்கும்!" என்று தெளிந்தார். முன்பு போலவே அம்பினால் கண்ணைத் தோண்டப் போனவர் அதையும் எடுத்துவிட்டால் கண்ணில்லாமல் (பார்வையிழந்த பின்) எப்படிச் சிவலிங்கத்தின் கண் எங்கேயிருக்கிறது என்று தேடி வைப்பது என்று குழம்பி அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் காலைத் தூக்கிச் சிவலிங்கத்தின் கண் இருக்குமிடத்தைக் குறித்துக் கொள்வதற்காகத் தன் கால் கட்டை விரலை வைத்துக் கொண்டார். பின் அவர் அம்பை எடுத்துத் தன் இன்னொரு கண்ணைத் தோண்டியெடுக்க எத்தனித்தார்.
இதை விவரிக்க வார்த்தைகளேயில்லை. (திண்ணனார்) கண்ணப்ப நாயனாரும் பக்தியும் வெவ்வேறில்லை, இரண்டும் ஒன்றே என்று சொன்னாலும் போதாது. இதைக் கண்ட சிவபெருமானுக்கே பொறுக்கமுடியாமல் கண்ணப்பருக்குக் காட்சியளித்ததோடு
மட்டுமல்லாமல் "ஓ... நில் கண்ணப்பா! நில் கண்ணப்பா!" என்று அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி மற்றொரு கண்ணைப் பறித்து எடுக்க விடாமல் தடுத்தார். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் கண்ணப்பரின் அளவிலாப் பேரன்பையும் அதற்கு அவருக்குக் கிட்டிய அருளையும் கண்டார். அப்பேர்ப்பட்ட சுயநலமிற்ற அன்பே சிவபெருமான் மிருகங்களின் இறைச்சியையும் இனிய கனியாக ஏற்றுக்கொண்டதற்குக் காரணம்.
"ஓ! அன்பிலும் பக்தியிலும் ஒப்பற்றவனே! நீ என் வலப்பக்கமாக இருப்பாயாக! கண்ணப்ப நாயனாரின் அளவுகடந்த பக்தி எல்லோர் சிந்தையிலும் நிற்க!" என்று சிவபெருமானே வாழ்த்துவதைக்
காட்டிலும் இவ்வுலகில் வேறென்ன வேண்டும்?
கண்ணப்ப நாயனாரைப் பற்றிய பாடல்கள் - இவ்விரு பாடல்களும் மேற்படி வலைத்தளத்தில் இருந்தன:
சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிருள் நீங்க நின்றார்
(அரிய தவங்கள் செய்த முனிவரும் தேவரும் காணுதற்கரிய சிவபெருமானைக் கண்ணப்பர் தன்னுள்ளிருந்து பெருகி வந்த ஆர்வத்தினாலும் ஈடிலா அன்பினாலும் கண்டுகொண்டு இரவு முழுவதும் முன்னின்று காவல் காத்ததைச் சொல்கிறதென்று நினைக்கிறேன்...)
பேறினி இதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர்தங் கையால் பிடித்துக்கொண்டு என்வ லத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னுபேர் அருள்பு ரிந்தார்
(சிவபெருமானின் கண்களில் குருதி வழியக் கண்டு தன் கண்ணைத் தோண்டியெடுத்து அவருக்கு வைத்தார் கண்ணப்பர். அப்படியாகப்பட்டவன் "என்றென்றும் என் வலப்பக்கம் இருப்பான்" என்று சிவன் வரமளித்ததால் இதைக்காட்டிலும் பெரும்பேறு வேறொன்றுமில்லையென்று சொல்கிறதென்று நினைக்கிறேன்...)
"இடந்தப்ப உதவுங் கையை" - ஏன் கையை? இரண்டாவது கண்ணை இடம் தப்பாமல் வைக்கத் தன் காலை அல்லவா அடையாளத்துக்கு வைத்துக்கொண்டார்?
எனக்குத் தெரிந்த விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் இட்டிருக்கிறேன்.
இப்பாடல்களுக்கும் என் ஐயத்துக்கும் சம்பந்தமில்லை தான்,
விளக்குங்கள்...
ஒரு கொசுறு விசயம்:
கண்ணப்பர் சிவனுக்கு ஏன் இறைச்சி உணவளித்தார் என்பது நமக்கு எளிதில் புரியும், எனினும் 2-3 மாதங்களுக்கு முன் என் சகோதரர் ஒரு யாகூ குழுமத்திலிருந்து எனக்கு அனுப்பி வைத்த மடலை என் பெயருக்குக் கீழே இடுகிறேன். ஆங்கிலத்திலிருக்கிறது, அதையெழுதிய X-Man என்பவரின் சொந்தக் கருத்துக்களை மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று சிதைத்துவிடுவேனோ என்றெண்ணிமுயற்சிக்கவில்லை.
என் ஐயம்:
சரி, இனிமேல் தான் என் ஐயத்துக்கே வருகிறோம்! (இதுவரை பொறுமையாகப் படித்தவர்களுக்கு நன்றி!)
என் நெருங்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் நாத்திகம்
பேசிக்கொண்டிருந்தார். இந்துக் கடவுள்களின் அட்டூழியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். ஆனாலும் அவர் முழு நாத்திகர் இல்லையென்பதை அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் ஸ்படிக மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பாராம் (அப்போது அவரை எனக்குத் தெரியாது) ஆனால் ஒரு கட்டத்தில் மாறிவிட்டாராம்.
ஏனென்று கேட்டதற்குக் கண்ணப்ப நாயனார் கதை பற்றிப் பேசி என்னைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்... அவருடைய மடலிலிருந்து சில வரிகள் - இதைப் படித்தால் அவர் சொல்வது பளிச்சென்று புரியும் (தமி-ங்கிலத்திலிருந்து மாற்றி யுனிகோடில் தட்டச்சியிருக்கிறேன்)
"he took an arrow (இதுல சரியான feeling வரல, தமிழ்ல சொல்றேன்...) அம்பு ஒண்ணை எடுத்துத் தன்னோட கண்ணை நோண்டி அதை லிங்கத்தோட கண்-ல வைக்கிறார். imagine the pain, ஒரு அம்பு ஒண்ணை எடுத்து நம்மளோட கண்ணை side-ல நோண்டற மாதிரிக் கற்பனை பண்ணிப் பாருங்க. அவர் அப்படி வச்சதும் அந்தக் கண்-ல
வந்த ரத்தம் நின்னு போச்சு. ஆனா அடுத்த கண்-ல ரத்தம் வர ஆரம்பிச்சிடுது. இப்போ இவர் ரெண்டாவது கண்ணையும் நோண்டணும். நோண்டினாக் கண்ணை எப்படி லிங்கத்துக்கு வைப்பார்? அதனால அவர் என்ன பண்ணினார்-ன்னாக் கால்
கட்டைவிரலைத் தூக்கி லிங்கத்தோட ரத்தம் வழியிற கண்-ல வச்சுக்கிட்டு இன்னொரு கண்ணையும் நோண்டப் போறார். இதெல்லாம் சிவன் பாத்துக்கிட்டே இருந்துட்டு நேர்ல வந்து அவருக்குக் கண் கொடுக்கிறார். கதை ஓகே-வா?
(இப்பக் கேள்வி) தன்னையே நினைச்சு உருகி உருகி வழிபட்டுட்டு இருக்கற ஒருத்தர் கிட்ட சோதனை-ங்கற பேர்ல சொல்ல முடியாத அளவுக்கு pain கொடுக்கிறாரே? அவரை என்னன்னு சொல்றது?"
அவரை என்னவென்று சொல்வது என்று என் நண்பர் கேட்டதற்கு பதில் சொல்லத் தெரியாமல் இருந்தேன்... அடுத்த மடலில் அவரிடமிருந்தே பட்டென்று பதில் வந்தது - "SADIST" என்று! இப்படி ஒரு அற்புதமான பக்தனைச் சித்திரவதை செய்ததற்காக! (பொதுவாக என்னிடம் யாரும் நாத்திகம் பேசுவதை விரும்ப மாட்டேன், அதிலும் இறைவனை யாரும் இழிவாகப் பேசுவதைக் கேட்டுக்கொள்ள மாட்டேன், ஆனால் இந்த நண்பர் சற்றே வித்தியாசமானவர்... எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் வகை... என்னையும் யோசிக்க வைத்தார், அதற்கும் மேல் அவர் ஒரு நல்ல நண்பர் என்பதால் இதை நான் அவ்வளவாகப்
பொருட்படுத்தவில்லை)
சிறுவயதில் கண்ணப்ப நாயனார் கதை கேட்டபோது நான் இப்படியெல்லாம் யோசித்ததில்லை, அலசி ஆராயும் பக்குவமும் அப்போதில்லை. இப்போது என் நண்பர் இந்தக் கண்ணோட்டத்தில் இறைவனை இப்படிக் குற்றம் சாட்டி வசைபாடியவுடன் தான் யோசிக்க ஆரம்பித்தேன்... இந்துக் கடவுள்கள் பலர் இப்படித்தான்
பக்தனைச் சோதிக்கிறேனாக்கும் என்று இல்லாத அட்டூழியம் செய்வார்கள் சில சமயம்... இல்லாத துன்பத்திலெல்லாம் ஆழ்த்துவர். எல்லாம் வல்ல இறைவனாயிற்றே? ஏனென்று கேட்பாரில்லை. அப்படியே கேட்டாலும் "சோதனை" என்று அதற்கு ஒரு பெயர் சூட்டி நியாயப் படுத்துவர். அதிலும் சிவனும் முருகனும் பக்தனைச் சோதிப்பதில் பெயர் போனவர்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
என் நண்பர் சொல்வது போல் கண்ணப்பர் சிவபெருமானையே நினைந்து நினைந்து உருகினாரல்லவா? அவரை இரவில் காட்டு விலங்குகளுக்கிடையே தனியே விட்டுச் செல்ல அஞ்சினார். அவருக்கு மலர்கள் மட்டும் போதாது, அவர் வயிராற நல் உணவு உண்ண வேண்டுமென்று பார்த்துப் பார்த்து சுவைத்து மிகவும் சுவையான
இறைச்சியையே கொணர்ந்து கொடுத்தார். கைகளில் இறைச்சி இருக்க, வாயிலாவது அபிஷேகத் தண்ணீர் கொணர்ந்து ஊற்றினார். பூக்களை எங்கே சுமப்பது? தலையில் சூடிக் கொணர்ந்து அளித்தார். வேடர்களின் தலைவன் என்ற பதவியையே மறந்து, குடும்பத்தை மறந்து, உற்றார் உறவினரை மறந்து சிவனே கதியென்றிருந்தார்.
அவர் மனதில் எந்நேரமும் சிவன் சிவன் சிவன் தான். மிகச்சிறந்த சிவபக்தர்.
அப்படியொரு மிகச்சிறந்த பக்தரைச் சோதிக்கிறேன்டா பேர்வழியென்று இப்படித் துன்புறுத்துவானேன், அப்புறம் ஓடோடி வந்து அவருக்குக் காட்சியளித்துப் பின் இழந்த கண்ணையும் அளிப்பானேன்? அதற்குச் சோதிக்காமலேயே இருக்கலாமல்லவா? சோதிக்காமலேயே எப்படிப்பட்ட பக்தியுடையவர் அவர் என்று
சிவனுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரியாததா? இப்படிச் சித்திரவதை செய்து தான் அதை நிரூபிக்க வேண்டுமா? அப்படிப் பெரிதாக யாருக்கு நிரூபித்துவிட்டாராம்? சிவகோச்சாரியாருக்குத் தானே? கண்ணப்பரைத் துன்புறுத்தாமலேயே சிவகோச்சாரியாருக்கு அவரைப் பற்றி அழகாக எடுத்துச் சொல்லவா தெரியாது எல்லாமறிந்த இறைவனுக்கு? சரி மனித இனத்துக்கே நிரூபித்திருக்கிறாரென்று வைத்துக் கொள்வோம். கண்ணப்பரை இப்படிப்பட்ட துன்பத்துக்கு ஆளாக்குவதால் சிவனுக்கு என்ன லாபம்?
(என் நண்பரின் கதை, சுருக்கமாக: அவருக்கு இறைபக்தி குறையக் காரணம் கடவுளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த சமயம் 25-30 வயதே நிறைந்த roommate மற்றும் நெருங்கிய நண்பர் மூளையில் இரத்தக்குழாய் வெடித்து (brain hemorrhage) கோமாவில் கிடந்து இறந்தார். பின் அதே வருடம் அவருக்குப் பிடித்த பெண் ஒருத்தி இருக்க, அவளுக்கும் அவரைப் பிடித்திருக்க, அந்த ஈர்ப்பு (அது காதலா என்று எனக்குத் தெரியாது) ஒரு குறிப்பிட்ட காரணத்தால் திருமணத்தில் முடியாமல் போயிற்று... "என்ன இது? சில மாதங்களுக்குள் எனக்கு அடுத்தடுத்து இரண்டு பேரிடியா? நான் என்ன தவறு செய்தேன்? உன் மீது எனக்கு பக்தி இருந்தும் இப்படி என்னைத் தவிக்க விட்டுவிட்டாயே? இது
நியாயமா?" என்று வேதனைப்பட்டவர் இதற்குத் தான் கண்ணப்ப நாயனார் கதையை இழுத்தார்! பின் தன்னையறியாமலோ அறிந்தோ அவருடைய இறைபக்தி குறைந்துவிட்டது)
குழப்பத்துடன்,
சேதுக்கரசி
****************************************************************
கதைகள் தத்துவங்களை(உண்மைகளை) விளக்கஎழுந்தன. பக்தி மார்க்கத்தின் உன்னதத்தை விளக்க இக் "கண்ணப்ப நாயனார்" கதை எழுந்தது. பக்தி எவ்வாறிருக்க வேண்டும் என்று சொல்வதுதான் இக்கதையின் சாரம்.
அவன் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறான்.
கண்ணப்பன் தன்னைக்கூட மறந்துவிட்டு இறைவனைமட்டுமே நினைந்து அவனுக்குத் தெரிந்த வழிகளில் பூசனைகள் செய்தான். அவனுக்குத் தெரிந்தது அக்கல்லில் இறைவன் இருக்கிறான்என்னும் நம்பிக்கையே. நம்பிக் கை தொழுதவனின் சிறப்புக்களை வெளிக்கொணரவே இக்கதை எழுந்துளது.
ஒரு மனிதனுக்குக் கண் அவசியம். அதிலும் இரண்டு கண்களையும் (தன் தொழிலுக்கு மூலதனமான, வாழ்விற்கு அத்தியாவசியமான கண்களைக்கூட தியாகம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டான். ஆனால், இன்று அவ்வாறு யாரேனும் செய்ய இயலுமா? சாத்தியமே இல்லை.
வெறும் பக்திமட்டும் இருந்து பலனில்லை. நினைவு ஒன்றவேண்டும். இதுவே கதையின் கருத்து. கருத்தைஎடுத்துகொண்டு கதைகளைப் புறம் தள்ளுவோம்.
நான் புரிந்துகொண்டபடி தங்களின் ஐயங்கள்:
1. நம்மைப் படைத்த இறைவன் நம்மைக் கண்டபடி துன்பம் தந்து சோதிப்பதேன்?
அதில் பலகோடியில் ஒருவருக்கு மட்டும் சுவர்க்கம் தருவதேன்?
2. கண்ணப்பன் கண் தந்தான். அவனுக்குச் சுவர்க்கம். சும்மா இருந்த
சிவாச்சாரியாருக்கும் ஏன் சுவர்க்கமீந்தான்?
3. இப்படியெல்லாம் நாமும் செய்தால்தான் சுவர்க்கம் கிட்டுமா?
4. இறுதியாக இறை நம்பிக்கை தேவைதானா?
5. இறைவன் இருக்கிறானா? இல்லையா?
அவ்வளவுதானே?
இறைவன் இருக்கிறானா? இல்லையா?
இறைவன் ஒருவனே. அவன் இருக்கின்றான். சந்தேகமே இல்லை.
ஞானிக்கு சந்தேகத்தில் (சந்+தேகத்தில் = ஒளிபொருந்திய உடலில்) இருக்கிறான்.
பக்திவழி செல்வோனுக்கு ஆலயத்தில் உள்ள கல்லில் இருக்கின்றான்.
சித்தர்களுக்குச் சித்தமாக இருக்கின்றான். குழந்தைக்குத் தாயாக உள்ளான்.
அவன்தான் நம்மைப் படைத்தானா?
ஆம்.
நம்மைப் படைத்த இறைவன் நம்மைக் கண்டபடி துன்பம் தந்து சோதிப்பதேன்? அதில் பலகோடியில் ஒருவருக்கு மட்டும் சுவர்க்கம் தருவதேன்?
விதிஎன்பார் சிலர். விதி என்பது நாம் நமக்கு வரைந்துகொள்ளும் ஒரு
எல்லைக்கோடு. நமக்கு நாமே விதிக்கும் விதி. இது தவிற
தலையெழுத்தொன்றுமில்லை.
புடம் போடுகிறான். அப்பொழுதுதானே நாம் தங்கமென்பது புரியும் என்பார் சிலர். இவன் தங்கமென அடுத்தவருக்குப் புரிந்து இவனுக்கு ஆவதென்ன?
இறைவன் படைத்தவன்.
தெய்வம் வழி நடத்துவது.
இறைவன் மனிதனை நித்தியத்திற்க்காகவே படைத்தான்.
நாமும் குழந்தைகளைப் பெறுகிறோம். அதற்கு உடல் நலமில்லயெனில் எங்ஙனம் துடிதுடித்துப் போகிறோம்? அந்த டாக்டரிடம் போகலாமா? இந்த டாக்டரிடம் போகலாமா? டாக்ஸியைக் கூப்பிடு. என பதைபதைத்துப் போகிறோம். நம் குழந்தைக்கு நாமே இவ்வளவு அக்கரை காட்டி அல்லோகலப் படுத்தும்பொழுது, சர்வ வல்லமை கொண்ட இறைவன் தன் பிள்ளைக்குத் துன்பம் தர இசைவானா?
ஆயிரத்தெட்டு அண்டங்களையும், அதில் உள்ள சகல சீவராசிகளையும் நமக்காகத்தான் படைத்துள்ளான். வேப்பம்பூவில் உள்ள தேனைஎடுக்க தேனீயைப் படைத்து, அதற்குப் பூவினுள்ளே நுழையும் அளவிற்கு உறிஞ்சுகுழல் கொடுத்துள்ளான். தேனீ அங்ஙனம் உறிபஞ்சிச் சேர்த்து வைத்திருக்கும் தேன் மனிதனுக்காக. இவ்வளவு இரக்கமுள்ள இறைவன் தன் பிள்ளைக்குத் துன்பம் தருவானா?
நல்லவைகள் நடக்கும்போது "இது என் வலிமையால்"என மார்தட்டி மகிழ்பவன், துன்பம் வரும்போது "இருந்தாலும் இந்த ஆண்டவனுக்கு இரக்கமே இல்லை.என்னைக் கொடுமைப் படுத்துகிறான்"எனப் புலம்புவது நியாயமா? பின்னர், இப்படிக் கொடுமைப்படுத்துவன் இறைவனில்லை என பேசுவதும் நியாயமில்லை.
கண்ணப்பன் கதைமூலம் எந்நேரமும் இறையை நினைவில் நிறுத்துபவனுக்கு இறையண்மை (அண்மை = அருகில்)கிட்டுமென்பதே.
இறைவனே சூனியத்தில் இருள். அதற்கு வலம்எங்கே? இடம்எங்கே? இடப்புறம்எங்கே? புராணங்கள் கதைகளின் கருத்தை மட்டும்
எடுத்துகொள்ளுங்கள். சக்கையைத் தள்ளிவிடுங்கள்.
இறுதியாக இறை நம்பிக்கை தேவைதானா?
அவசியம் தேவை. அவரவர் நிலைஎன்னவோ அதற்குத் தகுந்தவாறு நம்பிக்கை கொள்ளுங்கள். ந(து)ம்பிக்கை இல்லை எனில் அடுத்த நாளேது.
செய்யவேண்டியது:
சிந்திக்க ஆரம்பியுங்கள். வினாவெழுப்புங்கள். விடை(நந்தி = சிவனின்
வாகனம்) தானே கிட்டும். நந்தி (நம்+தீ) வழிகாட்டும்.
ஒரு வழியாக உங்களையும் குழப்பிவிட்டேன்.
ம்..ம்..ம்..ம்
Thursday, December 27, 2007
கண்ணப்ப நாயனார்
Posted by ஞானவெட்டியான் at 1:01 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment