Monday, December 31, 2007

56. மங்குலம் பதினாயிரம் யோசனை

விவேக சிந்தாமணி
**********************
56. மங்குலம் பதினாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும்
தங்குமா நூறாயிரம் யோசனை தாமரை முகம்விள்ளும்
திங்களா மதற்கிரட்டி யோசனை யுறச்சிறந்திடு மரக்காம்பல்
எங்கணாயகனு மன்பா யிருப்பவ ரிதயம்விட் டகலாரே.

ஐம்பதினாயிரம் யோசனை தூரத்தில் உள்ள மேகம் கண்டு மயில் நடனமாடும்.
நூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ள சூரியனைக் கண்டு தாமரை மலரும்.
இருநூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ள சந்திரனைக் கண்டு செவ்வல்லி மலரும்.
அதுபோல, எவ்வளவு தூரத்தில் இருப்பவராயினும் அன்பராயிருப்பவர்கள் இதயத்தை விட்டு அகலார்.

8 Comments:

Anonymous said...

அன்புடன் ஐயாவுக்கு!
பாட்டின் படி பூமிக்கு சந்திரன்;சூரியனை விடத் தூரத்தில் இருப்பது போல் கூறப்பட்டுள்ளது.இயற்கையில் அப்படியா? அடுத்து "தூரப் போனால் காதல் தேயு "மெனப் படித்துள்ளேன்.இவர்கள் என்ன? சொல்ல முற்படுகிறார்கள்.
நன்றி
யோகன்
பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,

சூரியன் நூறாயிரம் யோசனை தொலைவில் இருக்கிறது;
சந்திரன் இருநூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ளது; எனப் பொருள் கொள்ளாது, நூறாயிரம் யோசனை தொலைவில் இருக்கும் சூரியனைத் தாமரை உணரும்;
இருநூறாயிரம் யோசனை தூரத்தில் உள்ள சந்திரனைச் செவ்வல்லி உணரும்; எனப் பொருள்கொள்ள வேண்டும்.

Anonymous said...

வணக்கம் ஐயா!
ஓ; அப்படிக் கொள்ளவேண்டுமா?
யோகன்
பாரிஸ்

Anonymous said...

50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கிடையே இப்பாடல் பெரிதும் கவர்கிறது காரணம் வயதா? இல்லை தற்போதைய மன நிலையா? :)) ஒன்றும் புரிபடவில்லை ஐயா.......

Anonymous said...

ஐயா,
சமீப காலமாக உங்கள் வருகை குறைந்துவிட்டதே ? எப்படி இருக்கிறீர்கள்

Anonymous said...

அன்பு செந்தில்,
தற்போதைய மனநிலைதான் காரணம்.
ஒவ்வொருபாடலுக்கும் தனித்தனி பொருள் ஒவ்வொரு நாளைக்கும் கிட்டுகிறதே! அது ஒவ்வொரு மனிதனின் அன்றாட அநுபவங்களுக்குத் தக்கவாறு பொருள் தருகிறது.

Anonymous said...

ஐயா!
நலமாக இருக்குறீங்களா!
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,கோவி.கண்ணன்,
நான் நலமே. 20நாட்களாகக் கண்ணில் வேனல்கட்டிகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால் கணினியில் கொத்துவது சரவலாயுள்ளது.
இருப்பினும், ஞானம் எட்டியில் பல பாடல்கள் இடைச் செருகல்களாக உள்ளன. அவற்றைப் படித்து ஆய்ந்து மெய்யான 1500 பாடல்கள் எவையென ஆய்ந்துகொண்டுள்ளேன்.
அதிவிரைவில் வருவேன்.