Friday, December 14, 2007

குறவஞ்சி(41 - 45)

41.கற்பக வாசி கலந்திடும் எவ்விடம் சிங்கி? - அது
உற்பன மூலத்தி னுள்ளொளி யல்லவோ சிங்கா!

கற்பக வாசி = மூலவாசி
உற்பனம் = உண்மை = உள்மெய்

மூலவாசியெனும் உயிர் மூச்சு கலந்த இடம் எதடி சிங்கி?
அது, உள் மெய்க்குள் இருக்கும் உள்ளொளி உற்பத்தியாகும் மூல ஆதரத் தானமாகுமடா, சிங்கா.

42.சத்தம் பிறந்திடுஞ் சற்குரு வேதடி சிங்கி? - அது
உற்ற சுவாசம் உயிர்நிலை யல்லவோ சிங்கா!

ஒலி பிறக்கும் இடத்தில் உள்ள ஆசான் எதடி,சிங்கி?
அது, நடமாடும் சுவாசமும் ஒலி பிறக்கும் இடமும் சங்கமாகும் இடமே, சிங்கா.

43.கண்டு தொழுஞ்சிவ காரண மேதடி சிங்கி? - அது
உண்டு படுத்திய வுள் ளொளியானதே சிங்கா!

காரணம் = மூலம்
கண்டு தொழும் சிவ மூலம் எதை, சிங்கி?
அது, உயிரினங்களின் உள்ளொளியே, சிங்கா.

44.எப்படிக் கண்டே இறையை வணங்கலாம், சிங்கி? - அது
நட்புடன் இரண்டு நடுநிலை காண்பது சிங்கா!

இறைவனை எப்படி உணர்ந்து வணங்கவேண்டும் சிங்கி?
இரு கண்களின் நடுநிலையில் நட்புடன் நோக்கிக் கண்டு வணங்கவேண்டும், சிங்கா.

45.நடுநிலை யானதை நாடுவதெப்படி, சிங்கி? - அது
நாட்டந்தேட்டம் மோட்ட மாட்டமொன்றா கினால் சிங்கா!

அந்த நடுநிலையை அடைவதெப்படி, சிங்கி?
ஓட்டம், ஆட்டம் ஆகியவை இன்றை ஒன்றாக்கினால், தேட்டம் வரும்; நாட்டமும் பிறக்குமடா, சிங்கா.

2 Comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான சிங்கன் சிங்கி உரையாடல் ஞானம் ஐயா!

//எப்படிக் கண்டே இறையை வணங்கலாம், சிங்கி? - அது
நட்புடன் இரண்டு நடுநிலை காண்பது சிங்கா!//

இடுக்கண் களைவதாம் நட்பு-ன்னு குறள்!
நட்புடன் நடுநிலை காண்தல்-னா, என்ன ஐயா? அதை நட்புடன் காணச் சொல்வதின் நோக்கம் என்ன?

//நாட்டந் தேட்டம் ஓட்டம் ஆட்டம் ஒன்றாகினால் சிங்கா!//

சொல்லும் பொருளும் அருமையிலும் அருமை!

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
இங்கு நட்பு என்பது ஒற்றுமையுடன் சலனமின்றி ஒன்றையொன்று ஒன்றியிருத்தலைக் குறிக்கும்.
சலனமென்றால் சண்டையிடுதல்.