Wednesday, December 26, 2007

நவராத்திரி - 1

நவராத்திரி
*************
முன்னுரை
************
இக்கட்டுரை சாதாரணமான, பாமர மக்களுக்கும், பக்தி மார்க்கம் மட்டுமே அறிந்தவர்க்கும் எழுதப்படுகின்றது. இது யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், பகுத்தறிவாளர்களுக்குமல்ல. இதன் பிண்ணணிக் கதைகள் பலவுண்டு. "நம்பினால் நடராசா; இல்லையேல் எமராசா."

பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவைகள் ஒருவரின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதாகும். இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும், இந்தியர்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும், மற்றும் ஈழத்திலும் இத்திருவிழா மகிழ்வுடன் கொண்டாடப் படுகிறது. இதுவே 10நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இடத்துக்கு இடம் கொண்டாடும் முறைகளில் வேறுபாடுகள் இருப்பினும் வேண்டுவது அன்னை சக்தியைத்தான். கல்வி, செல்வம், வீரம் ஆகிய குண நலன்களைத் தருபவள் சக்தி.

சக்தி யார்?

அண்டம் வெடித்துச் சிதறியபோது ஒளிப்பிழம்பாய் வெளிவந்தவளே அன்னை பராசக்தி. அகிலத்தையும்(உலகையும்) இயக்குவது அச்சக்தியே. அன்னையும் அவளே; அன்னையாகும் சக்தியும் அவளே. இல்லத்தில் அன்னையைப் பூசிப்பதுபோல் அகிலத்தில் பராசக்தியைப் பூசித்தல் வேண்டும்.

அவளே மூம்மூர்த்திகளையும் படைத்து முத்தொழிலையும் கொடுத்து, மூவிடத்தையும் கொடுத்து, அவர்கட்கு இச்சா சக்தி, கிரியா சக்தி(செயல் திறன்), ஞான சக்தி ஆகிய முத்தேவியரையும் படைத்து அவர்கட்கு அளித்தாள்.

இச்சா சக்தி - மலைமகள்
கிரியா சக்தி(செயல் திறன்)- அலைமகள்
ஞான சக்தி - கலைமகள்

இம்மூன்று சக்திகளும் ஒன்றுபட்ட நிலையே சண்டிகாதேவி.
மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரையும் 9 நாட்களில் 9 உருக்களில் வணங்கும் திருவிழாவே நவராத்திரி.

சாற்றிறங்கள் 4 நவராத்திரிகள் கொண்டாடப்படல்வேண்டும் எனக் கூறுகிறது.
அவைகள் - சித்திரை, ஐப்பசி, ஆடி, மாசி மாதங்களில் கொண்டாட வேண்டும். அதில் இப்பொழுது புழக்கத்தில் இருப்பவை சித்திரையிலும், புரட்டாசியிலும்(ஐப்பசி) வரும் நவராத்திரிகள்தான். அதிலும் புரட்டாசி(ஐப்பசி) யில் வரும் திருவிழாதான் அதிகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சூரியனது கதிர் வீச்சில் கோடை காலத்தின் ஆரம்பமும் குளிர் காலத்தின் ஆரம்பமும் இரண்டு முக்கிய கால கட்டங்கள். இந்த இரண்டு காலப் பகுதிகளிலும் மனிதருக்கு நோய்கள் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் அந்தக் காலங்களில் எதிர்ப்பு சக்தியை வேண்டி சக்தியை வழிபட்டு வந்தார்கள்.

இதையே, "பங்குனியும் புரட்டாசியும் யமனின் இரு தாடைகள் போன்றவை. அவற்றில் அகப்படாமல் தப்பவேண்டுமானால் இந்த இரு காலங்களிலும் சக்தியை வழிபடவேண்டும்" என்று கூறுகிறது அக்கினி புராணம். தேவி பாகவதமும் இக்கருத்தையே கூறுகிறது. இதனாலேயே வருடத்தில் இரு தடவைகள் நவராத்திரி கொண்டாடப் படுகின்றது. ஒன்று சித்திரையில் அதாவது வசந்த நவராத்திரி. மற்றது குளிர் காலத்தில் அதாவது புரட்டாசி ஐப்பசியில் கொண்டாடப்படும் சாரத நவராத்திரி.

சோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது:
சூரியன் கோட்சாரத்தில் புரட்டாசி மாதத்தில் கன்னி இராசிக்கு வருகிறான். மிதுனமும் கன்னியும் புதனின் வீடுகள். புதன் அறிவை வளர்ப்பவன். ஆகையால் புஅரட்டாசியில் வளர்பிறையில் அறிவோடு சேர்ந்து ஆதவனின் மூலமாக மாயையாகிய பராசக்தியை வழிபடுவது சிறந்தது.

முப்பெரும் தேவிரை 9 சக்தி உருக்களாக உருவகித்துள்ளனர் பெரியோர்.
1.மகேசுவரி
2.கெளமாரி
3.வராகி
4.மகாலட்சுமி
5.வைணவி
6.இந்திராணி
7.மகாசரசுவதி
8.நரசிம்மி
9.சாமுண்டி.

சக்தி தத்துவங்கள் திருமந்திரத்தில் 400 பாடல்களில் சொல்லப் பட்டுள்ளன. அவைகளை எழுத ஆரம்பி்த்தால் அடுத்த நவராத்திரி வந்துவிடும்.

முதல் மூன்று நாட்களில் மகாகாளி எனும் உருத்திர துர்க்கையையும், அடுத்த 3 தினங்களில் இலட்சுமி துர்க்கையையும், இறுதி 3 தினங்களில் சரசுவதி துர்க்கையையும் பூசித்தல் மரபு.

தொடரும்...

0 Comments: