ஞானக் குறள்
**************
2. திருவருட்பால்
********************
14. கலை ஞானம் (131-140)
*****************************
131.சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது.
“இரவி சங்கரன் - ஈசுவரி திங்கள்” என வீமேசுவரம் கூறுகிறது. ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின் கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு மூலமாம்.
வாசிட்டக்காரர் கூறுவது:
“விராவிவரும் புறநின்று மபான னென்னும் வியன்மதிய மேனியெல்லாங் குளிரவிக்கும்
பிராணனெனுஞ் சூரியன்றான் கனலாயுள்ளே பேசியவிவ் வுடற்பாகம் பிறக்குப் பண்ணு
மிராதுழலும் பானனெனு மதியினுட் சேரியற் கலலிகள் பிராணனெனு மிரவியாலே
யுராவி விழுங்கப் பட்டதெங்கே யந்தவுயர் பதமுற்றாற் பின்னையொரு நோயுண்டோ.”
132.அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு.
அயனங்கொள் சந்திரன் = தேய்வும் வளர்ச்சியும் பெற்ற சந்திரன் நோக்கி(கண்களினால்) சூரிய சந்திர கலைகளை ஒன்றித்தால் அதுவே முத்திக்கு வீடு.
திருமூலர்:
“அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.”
கதிரவனைச் சுற்றிச் சுழலும் எழுவகைக் கோள்களும், அகண்டமாகிய பல்வேறு அண்டங்களும், ஆங்குள்ள ஆவிகளும், இயங்குதிணை நிலைத்திணை உயிர்களும், அவைகளின் பண்புகளும், மிகப் பழைய மறையாம் திருவைந்தெழுத்தும், படைத்தல் காத்தல் முதலிய தொழில்களும் சிவன் என்னுடன் விளங்கி நின்று அறிவில் காட்டுவதால் அவைகளின் அனைத்து உண்மைகளும் என் அறிவுக் கண்ணிற்கு எட்ட இயலா நிலயில் உள்ளது.
133.அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு.
அறம் - ஆன்ம தெரிசனம்(தெரி+சன்+அம்)
பொருள் - ஆன்மாவொடு இருக்கும் அழியாச் செல்வங்கள்
இன்பம் - ஆன்ம ஆநந்தம்
சாகாமல் சாகும் வல்லமையுடையோர் (துஞ்சாதார் = நித்திரையை வென்றவர்கள்). ஐம்பூதங்களாலுண்டாகும் இந்திரிய சலனங்களை வெறுப்பதே அறம், பொருள், இன்பம் அடையச் சிறந்த வழி. (முக்கியமாக விந்து விரையம் தடுக்கப் படல்வேண்டும்)
134.ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம்.
சீவனாகிய சிவத்தொடு ஒன்றில், எல்லாப் பொருளும் இசைந்து வரும்; உலகத்தின் ஒளி போல, இத் தேசமாகிய உடலினுள்ளே ஒளி தெரியும்.
135.தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து.
அகத்தவத்தால் தன்னைத் தானேயுணர்ந்து அறிந்தால் அவன் நினைவினில் உதிக்கும் கருத்துக்கள் பொன்போலாகிவிடும்.
136.கூடகமான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து.
ஆதியெழுத்தாம் மெளன எழுத்தை அறிந்து ஞான வினையாற்ற உடல் மோட்சவீடாகும். (சாத்திரப் பூட்டுடைக்க அதிகாரமில்லை)
சொரூபசாரம்:
“தேகா லயத்திற் சிதாகாச தேவதையை
வாகாய சாந்தி மலராலே - யேகாந்த
மந்திரத்தால் பூசைசெயு மாதவரை யாதரித்து
சந்ததம் வாழ்வார்க்கார் சரி.”
வள்ளலார்:
“அள்ளிக் கோவிலை என்னா வாசானயே
நள்ளிக் கோவிலை நத்திப் பெற்றாங் கொளிர்
யுள்ளக் கோவிலை யூன்றிப் பாராதவர்
கள்ளக் கோவிலைக் காமுறு வார்களே.”
137.வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று.
ஒல்லை - விரைவாக
உடல் விரைந்து முத்தியாக வேண்டுமெனில், கூடாகிய இவ்வுடலினுள்ளே இருக்கும் ஓங்கார சோதியைக் கண்டு கலந்துணரல் வேண்டும்.
138.பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து.
அகத்தவத்தால் கருத்தைப் பொன்னாக்கினால் அருளொளியோடு கூடிய சிவத்தொடு ஒன்றலாம்.
திருமந்திரம்:
“நிலைபெற நின்றது நேர்தரு வாயு
நிலைபெற நின்றது தீபமு மொத்துக்
கலைவழி நின்ற கலப்பை யறியின்
மலைவறி வாகும் வழியிது வாமே.”
நடுநாடி வழியாக மேலேறும் உயிர்ப்பு ஒடுங்கி நின்று, தூண்போல அசையாமலும் ஒளிபோல விளக்கமாகவும் அமைய, அமுத கலையிடத்து சிவசக்தி இணைந்து இயக்கும் நிலையை உணர, மலைவாகிய மயக்கம் மாறும். இதுவே தாள் தலைக்கூடும் வழி.
139.இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்.
இரேசகம்: 32 மாத்திரை அளவு
உயிர்க் காற்றை (வாசிக் குதிரையை) உள்ளே இழுத்தல்.
அகத்தவத்தால் மன அசைவின்றி நிற்கில் உடலினுள்ளே சிவம் பூரித்து நிற்கும். அதுவே இரேசகம். இரேசகம் என்பது வெளிவாயுவை மூக்கின் மூலமாய் உள்ளே இழுப்பதென்பது தவறாகும். அதற்குப் பலனில்லை.
திருமந்திரம்:
"ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யிரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே."
ஆறாதாரங்களெனப்படும் நிலைக்களங்களை அறிந்து, யோகத்தால் அவைகளைத் தூண்டித் தொழிற்படுத்தும் தெய்வங்களாம் ஆனைமுகன், அயன், அரி,யாரன், ஆண்டான், ஐம்முகன் ஆகியோரின் துணையுடன் மேலான இடத்தில் விளங்கும் சிவத்தொடு பதினாறு கலைகள் பொருந்திய திங்கள் மண்டிலத்தையுடைய மனம் கழியநின்ற பரவெளியில் யோகமாம் ஒடுக்கம் உண்டாகும்.
ஆறு ஆதாரங்கள்
*******************
இவை இரு வகைப்படும்.
1.கீழாதாரங்கள் - 6
2.மேலாதாரங்கள் - 6
இவைகள் கண்ணுக்குப் புலப்படாது.
கீழாதாரங்கள் உடலிலும், மேலாதாரங்கள் தலைக்குள் மட்டும் இருப்பவை.
கீழாதாரங்கள் பிண்ட ஆதாரங்கள்.
மேலாதாரங்கள் சூக்கும ஆதாரங்கள்.
கீழாதாரங்கள் ஆறு:-
***************************
1.மூலம் - மூலாதாரம்
2.கொப்பூழ் - சுவாதிட்டானம்
3.மேல்வயிறு - மணிபூரகம்
4.நெஞ்சம் - அநாகதம்
5.மிடறு - விசுத்தம்(விசுத்தி)
6.புருவநடு - ஆக்ஞேயம்.
தாயுமானவர்:
“துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யுருக்கி லென்னாஞ் சிவயோகமெனுங்
குருத்தை யறிந்து முகமாறுடைக் குருநாதன் சொன்ன
கருத்தை மனதிலிருத்துங் கண்டீர் முத்திகை கண்டதுவே.”
140.சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு.
சத்தியாகிய சந்திரகலையை அறிவு உடலில் (சிதாகாயத்தில்) பாய்ச்ச சாக்கிரத்தில் இருப்பதுபோல் உணர்வு எட்டும்.
திருமந்திரம்:
“வண்ணா னொலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாற் பாய்ச்சிக் குளத்தை நிறப்பினா
லண்ணாந்து பார்க்க வழுக்கற்ற வாறே.”
வண்ணான் - பிராணன்
சதுரப் பலகை - நாற்சந்தி
மோழை - வீணாக்காது
குளம் - கபாலக்குகை, மனம்
உயிர் வெளிச் செல்லும் வாயில்களான, கண், செவி, நாசி, வாய் என்னும் அறிகருவி நான்கும் ஒன்றுகூடும் அண்ணாக்கிடத்து அதன் மேலிருக்கும் அமிழ்தொழுகும் தாரையிலிருந்து அமிழ்து ஒழுகும். அதை வீணாக்காது உச்சித்துளைக் குகையில் நிரப்பி அத்துளையை
நாநுனியாலடைத்து அதை நடுநாடி வழியே செலுத்தி
அக்குளத்தை நிரப்பினால் மேல்நோக்கு எண்ணம் தோன்றும்.
குணங்குடியார்:
“விண்ணுக்குள் வெளியிருள் மாற்றி, அதில்
வேதாந்த மூல விளக்கினை யேற்றிக்
கண்ணுக்குள் மணியாகத் தோற்றி, வருங்
காரணமான கடவுளைப் போற்றி
இரக்கத் துணிந்து கொண்டேனே.”
Sunday, December 30, 2007
ஞானக் குறள் - 14. கலை ஞானம் (131-140)
Posted by ஞானவெட்டியான் at 11:20 AM
Labels: ஞானக் குறள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//சாகாமல் சாகும் வல்லமையுடையோர் (துஞ்சாதார் = நித்திரையை வென்றவர்கள்). ஐம்பூதங்களாலுண்டாகும் இந்திரிய சலனங்களை வெறுப்பதே அறம், பொருள், இன்பம் அடையச் சிறந்த வழி. (முக்கியமாக விந்து விரையம் தடுக்கப் படல்வேண்டும்) //
அன்பு ஐயா,
பஞ்ச பூதங்களினால் ஆனது உடல். பிறவி எடுப்பது கடமையை ஆற்றவதற்கு என்பது தானே. ஒருவன் இந்திரிய சுகங்களில் இருந்து முற்றிலும் விடுபட முடியுமா ? உலகவாழ்வியலை துறப்பது என்பது செய்து கொண்டிருக்கும் கடமையில் தவறுவது அல்லது தவிர்ப்பது என்பது போலத் தானே ? இவற்றை துறப்பதற்கு என்று ஒரு காலகட்டம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதையும் சொல்லிவிட்டால் பொதுவான கருத்துப் போல் இல்லாமல் நிறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் எந்த வயதில் செய்ய வேண்டும், செய்ய முடியும் என்று விளக்குவீர்களா ?
அன்பு கண்ணன்,
//பஞ்ச பூதங்களினால் ஆனது உடல். பிறவி எடுப்பது கடமையை ஆற்றவதற்கு என்பது தானே. ஒருவன் இந்திரிய சுகங்களில் இருந்து முற்றிலும் விடுபட முடியுமா ?
இவற்றை துறப்பதற்கு என்று ஒரு காலகட்டம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதையும் சொல்லிவிட்டால் பொதுவான கருத்துப் போல் இல்லாமல் நிறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//
விரயம் என்பது தேவைக்கதிகமாகச் செலவு செய்வது.
இல்லறத்தில் ஈடுபட்டுத் தன் வாரிசுகளை உருவாக்குவது அவர்களுடைய கடமை. கடமை முடிந்தவுடன் தன்னைக் கட்டுக்குள் கொண்டுவந்து விரயத்தைத் தடுக்கவேண்டும். இதற்கெல்லாம் வயது வரம்பு (thumb rule) கிடையாது. அதற்காக இச்சை வரும்போது உடல் உறவு கூடாதெனவும் சொல்லவில்லை.
இயன்றவரை கட்டுக்குள் வைத்து விந்து சக்தியை ஆன்ம சக்தியாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஞானம் ஐயா!
மூலாதாரத்து மூண்டு எழு கனலை என்றும்,
அமுத நிலை, ஆதித்தன் இயக்கம், குமுத சகாயன் குணத்தையும் கூறி...
என்ற விநாயகர் அகவல் பாடல் அப்படியே நினைவுக்கு வருகிறது, உங்கள் பதிவைப் படிக்கப் படிக்க!
நன்றி ஐயா!
அன்பின் இரவி,
ஆமாம். அடிப்படையே அதுதான்.
கையில் இருப்பதையெல்லாம் முடித்துக்கொண்டு, பின்னர் விநாயகர் அகவலைத் தொடும் எண்ணமொன்றுண்டு. இறையருள் எப்படியோ?
Post a Comment