Saturday, April 07, 2007

சுடர்வழியே செய்தி

அன்புத் தம்பி நாக.இளங்கோவன் சுடரை எனக்கு அனுப்பி நாடகள் 4 ஆகிவிட்டன. இன்னும் சுடரினை மற்றவருக்கு அனுப்பாது காலதாமதம் செய்தல் நல்லதல்லவே!
இன்று அனுப்பி விடலாம்; நாளை அனுப்பி விடலாம் என எண்ணி நாட்கள் நகர்ந்ததுதான் பலன். கண்ணில் புரை வந்ததால், படிக்க எழுத இயலவில்லை.
எனக்கு இட்ட நான்கு வினவல்களுக்குத் தனியே விடை இடுகிறேன்.
5ம் வினவல்:

தமிழ் மொழியின் எதிர்காலம்
*********************************

ஞாலம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளில் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் மக்களின் அறியாமை, அலட்சியப் பாங்கு ஆகியவைகளால் நெருப்பு, நீர், கரையான் ஆகியவற்றால் அழிந்துபட்டது போக எஞ்சியிருக்கும் எண்ணற்ற நூல்களும், அவைகள் சுட்டும் கருத்துக்களும் தமிழ் தொன்மையானது என்பதற்கு ஆதாரம். தமிழர்களின் நாகரீகத்தின் மேம்பட்ட நிலையினை தெள்ளத் தெளிவாய்க் காட்டும் ஆடியாகவும் விளங்குகிறது. இலக்கிய வளம், இலக்கணச் செறிவு, தத்துவப் பான்மை ஆகிய எல்லாம் அமைந்த மொழி. நெறிகளில் உயர்ந்த திருநெறியைச் சுட்டுவதால் “திருநெறியத் தமிழ்” எனவும், தெய்வத்தன்மை வாய்ந்ததாலும், தெய்வத்திடம் வழிப்படுத்தும் மொழியாகவிருப்பதாலும் “தெய்வத்தமிழ்” எனவும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். மும்மூர்த்திகளாம், குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் ஆகியோர், இறைவனையும் இறை உணர்வினையும் உரைநடைகளாக ஆக்கி பேச்சுமொழியைத் தெய்வத் தன்மை பொருந்தியதாகச் செய்தனர்.

தோற்றம்:
***********

கத்தொலிகள்(ஓ, கோ, கூ), ஒப்பொலிகள்(கூ, மா, குர்), வாய்ச்சைகை ஒலி(வா, போ), இன்னும் பிற ஒலிக்குறிகள் ஆகியவைகளிலிருந்து ஒலிகள்(சொற்கள்) பிறந்தன. விலங்கு, பறவை முதலிய உயிரினங்களின் ஒலிக்குறிப்புகளும் சொற்பிறப்பிற்கு அடிப்படையாயின. இதைவைத்து முதன் முதலில் தோன்றியவை தனிச்சொற்களே. குறிஞ்சியில் வாழ்ந்தபொழுது தமிழர்கள் புழங்கியது சில சொற்களே. பின்னர், முல்லை முதலிய ஏனைய திணைகளுக்குப் புலம் பெயர்ந்தபொழுது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச் சொற்கள் தோன்றின. பல சொற்கள் மருதத்தில் தோன்றியவை. மருத நிலத் தலைவன் மற்ற திணைகளில் புழங்கிய சொற்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்க ஒரு முழு மொழியாகியது. அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்றபோது சொல்வளம் பெருகிற்று.

வளர்ச்சி:
**********
இடம், பொருளீட்டல், தொழில் ஆகியன விரிவுபட்டபோது புதுச் சொற்கள் தோன்றின. சொற்களை வைத்து சொற்றொடர்கள் தோன்றின. சொற்றொடர்களை வைத்து இலக்கியம் தோன்றிற்று. முதலிலக்கியம், காதல் வெளிப்பாடுகள், முன்னோர் சரித்திரம், போர்ப்பாடல்கள், திருமன்றாட்டுகள், மறைநூல் என்னும் வரிசையில் வெளிவந்தன. பின்னர், இலக்கணிஞர்கள் இலக்கணம் யாத்தனர். அதன் பின்னர், எழுதுபவரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே இலக்கியம் வளர்ந்தது. அறநூல் எழுதும்பொழுது, எழுதுபவரின் சொல்லாக்கமும், இறைச்சிந்தனையாளர்கள் பெருநெறியாம் திருநெறி பற்றி எழுதும்பொழுது அவர்களின் சொல்லாக்கமும் தமிழை வளப்படுத்தின. தமிழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாயிருந்தது திருநெறி இலக்கியமே. அப்பொழுது, தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழை வளர்த்தன.

பிறமொழிக் கலப்பு:
**********************
வேதங்களை (ரிக், யசுர், சாம, அதர்வணம்) தமிழருக்கு அறிமுகப்படுத்துங்கால், அதிலுள்ள சமக்கிருதச் சொற்களுக்கிணையான தமிழ்ச் சொல் வேர்களையெடுத்துக்கொண்டு, முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கினர். பின்னர், அதுதான் மூலம்; அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தது என வாதிடவும் செய்தனர். வைணவம் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் செங்கிருதமும் தமிழும் கலந்த நடை உருவாயிற்று. அதை மணிப்பிரவாள நடை என்றனர். இதன் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க பல சமயக் குறவர்கள் போராடியுள்ளனர்.

அத்துடன் நில்லாது, தெலுங்கு, கன்னட, கேரள மன்னர்களின் ஆதிக்கத்திற்குள் சென்ற பகுதியினர் அம்மொழிகளின் சொற்களையும் தமிழுடன் கலந்து பலுக்க(பேச) ஆரம்பித்தனர்.

இதனால், பல வேர்ச்சொர்கள், கிளைச் சொற்கள் ஆகியன மறைந்து விட்டன. மறைமலையடிகள் போன்ற ஆன்றோர்கள் தமிழைக் காக்க அரும்பாடுபட்டு, தங்களின் ஆக்கங்களில் இனம் காட்டியுள்ளனர். மெக்காலேயின் முயற்ச்சியால் ஆங்கிலமும் துளிர்த்தது.

தற்பொழுது கிளைத்துள்ள தமிங்கிலத்திலிருந்து இளைய தலைமுறையைக் காப்பது மிகக் கடினமான ஒன்றாகவே கருதுகிறேன்.

நிகழ்காலத்தில் தமிழ்:
************************
நிகழ்காலத்தின் தமிழ் மிகவும் வருந்தத்தக்க நிலயில் உள்ளது. மடிக்குழைப் பள்ளிகளில் கல்வி பயின்றுவந்த தலைமுறையினர் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும், மற்றையோரும், ஆங்கிலம் கலந்து உரையாடுவதுதான் மதிப்பைத் தரும் என்னும் கருத்துகொண்டு, தாய்மொழிச் சொற்களைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கின்றனர். கல்வி நிலையங்களிலும், இல்லங்களிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதையே மதிப்பாகக் கருதுகின்றனர்.

அதிலும் கொடுமை, ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுவது.
எடுத்துக்காட்டாக:”எனக்கு health சரியாக இல்லைங்கிறதால lateஆ எந்திரிச்சு shave பண்ணாம autoவில collegeக்குப்போய் first period attend பண்ணிட்டு ப்ரொபெசர்கிட்ட half day leave கேட்டுகிட்டு hostelல்ல என் friend roomல rest எடுத்தேன்.”

ஆங்கிலம் வேண்டாமெனக் கூறவரவில்லை. புழங்கினால் முழுவதும் ஆங்கிலத்திலேயே புழங்கவேண்டும்(அலுவலகம் போன்ற இடங்களில், அல்லது தமிழ் மொழி தெரியாதோரிடம்). அதில் தமிழ் கலப்பு கூடாது. மற்ற இடங்களில், முக்கியமாக, இல்லத்தில், தமிழ் தெரிந்தோரிடத்தில் உரையாடும்போது, தமிழில் மற்றமொழிக் கலப்பின்றி உரையாடுதல் வேண்டும். செந்தமிழில் உரையாடாவிடினும், பேச்சுத் தமிழில் கலப்பின்றி பேசுதல் வேண்டும்.

ஊடகங்களில், தமிழ் எழுத்துக்களின் ஒலிக்குறிப்பு கொலை செய்யப்படுகிறது. யாருக்கும் கவலை இல்லை. எடுத்துக்காட்டு:
“ச” என்னும் எழுத்து “ஸ” என பலுக்கப்படுகிறது(ராசா=ராஸா).

“பலனியில் மளை பேஞ்சதால் பக்தர்கள் மளை ஏறமுடியாமல் வலுக்கி விளுந்தனர்.”

ஊடகங்களைத் திருத்த முடியாது. அவர்களின் குறிக்கோள் “பணம்….பணம்.” விளம்பரப் படங்களின் தரம் கொடிது. அவர்கள் செய்யும் தமிழ்க்கொலையை காணக் கண்கூசும்; கேட்கும் செவிப் பறை கிழிந்து போகும்.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளம் குறைவு. அதனால், பிறமொழிகளிலுள்ள சொற்களைக் கடன் பெற்றது. அப்பொழுதும் அது ஆங்கில ஒலிக்குறிப்பிலேயே அச்சொல்லைப் பலுக்கியது. தமிழ் பெருவளமொழி. இல்லாத சொற்களேயில்லை எனலாம். கடன்பெற வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், இதுவரை புகுத்தப்பட்ட பிறமொழிச்சொற்கள் எல்லாம் தமிழின் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைத்து வந்துள்ளன. பல சொற்கள் வழக்கிழந்தன.

சற்றொப்ப இருநூறு ஆண்டுகளாக ஆங்கில் வல்லாண்மையை எதிர்த்துப் போராடி வந்தும் முன்னேற்றமின்மை தமிழனின் அக்கறையின்மையையும், ஆங்கில மோகத்தையும்தான் காட்டுகிறது.”பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்”, “உண்பாடின்றேல் பண்பாடில்லை” என்னும் முதுமொழிக்கிணங்க, தரமுடன் வாழ்ந்த தமிழரில் சிலர், தவத்திரு மறைமலயடிகளைத் தவிர, பொருளுக்கும், புகழுக்கும் ஆசைகொண்டு தமிழ் முழக்கத்தையே கைவிட்டிருக்கின்றனர்.

தமிழின் இந்நிலையை நீக்க:
*******************************

இவ்விழிநிலையிலிருந்து தமிழைக் காக்க, தமிழ் கற்றறிந்த ஆன்றோரும், மாணாக்க சமுதயமுமே ஏற்றவர்கள். இவர்கள்தாம் எதிர்காலக் குடிவாணர்கள்; அமைச்சர்கள்; அரசு. நம் தமிழைக் காக்க, வரும் இளைய தலைமுறையினர் தவறுவார்களேயாயின், பின்னர் தமிழன் என்ற இனம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

சில வழிமுறைகள்:
**********************

1.முன்னோர் ஆக்கிய சொற்களைக் கையாளுதல் வேண்டும்.
2.பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.
3.நேர் தமிழ்ச் சொல் இல்லாத பிறமொழிச் சொல்லுக்கு வேர்ச்சொல் அறிந்து, அதர்கொப்ப புதிய தமிழ்ச் சொல் உருவாக்குதல் வேண்டும். அதையும் தமிழொலிக்குறிப்பில் பலுக்குதல் வேண்டும்.
4.பிற மொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்தல் வேண்டும்.
5.திரைப்படம், சின்னதிரையில் அழுகை, புலம்பல் நாடகங்கள், பண்பலை வானொலியின் பண்பற்ற உரையாடல்கள் ஆகியவைகளைப் பார்த்தோ அல்லது கேட்டோ, அதை உள்வாங்கி அப்படியே பலுக்கக் கூடாது.
6.தமிழில் புகுத்தப்பட்ட சொற்களில் நாளொன்றுக்கு ஒரு சொல் நீக்கிப் புழங்க முயன்றால் போதும்.
7.ஒவ்வொருநாளும், அகரமுதலியிலிருந்து முன்னர் புழக்கத்தில் இருந்த தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு சொல் புதியதாகத் தெரிந்து கொள்ள முயலவேண்டும்.

மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியே. அவரினும் வேறான ஓர் உயிர் அல்லது உருவமல்ல. மக்கள் தம் தாய்மொழியைப் பேசினால் அது வாழும்; இல்லையேல் மாளும்.

தமிழின்றேல் தமிழனில்லை. தமிழ் அழிந்தால் தமிழன் என்னும் இனமும் அழியுமென்பதில் ஐயமேதுமில்லை. தமிழின் தூய்மையைக் காப்பது தமிழனின் தலையாய கடமை.


இத்துடன் பின்வரும் வினவல்களுடன் சுடரை அனுசுயாவிடம் தருகிறேன்.

1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?

2.இணைய அனுபவம் எப்படி உள்ளது? வலைப்பூக்களில் நிலவி வரும் சாதி சமய, ஆத்திக நாத்திக விவாதங்களால் அவைகளைப் படிப்பவரின் மன நிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? இவைகளால் பயனுண்டா? அல்லது கால விரயமா?

3. "தமிழ் வாழவேண்டும்; அழிந்துவிடலாகாது." இது குறித்து இன்றைய இளைய தலைமுறையினரின் கருத்து என்ன? செயல்கள் எப்படி உள்ளன?

4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.

5.தங்களுக்குப் பிடித்த தங்களின் பதிவு, அல்லது மிகவும் பிடித்த தலைப்பில் ஒரு பதிவை இடவும்.


13 Comments:

வல்லிசிம்ஹன் said...

ஞான வெட்டியான் ஐயா,
இந்தப் பதிவைப் பார்த்தபிறகு
என் தமிழும் எப்படியெல்லாம் மாறியது என்று உணருகிறேன்.

சூழ்நிலை,அக்கம்பக்கம்,நம்மை மேலாத்திக்கம் செய்பவர்கள்
என்று சூழ்நிலை வரும்போது வளைந்து கொடுக்க வேண்டி வன்ருகிறது.
இனிமேலாவது உங்கள் சொற்களை யோசித்துச் செயல் படுகிறேன்.
நன்றி.

Anonymous said...

நல்லதொரு பதில்கள்....அனுவுக்கும் நல்ல கேள்விகள்...

Osai Chella said...

மன்னிக்கவும்.. சிறிது காலம் தொடர்பற்று இருந்ததற்கு. மிக மிக அருமையான அழகான சுடர் பதிவு கண்டு மகிழ்ந்தேன். ஆனாலு ஒரு கேள்வி... விளிம்புநிலை மனிதர்கள் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு வழக்குத் தமிழில் உரையாடினால் எழுதினால் அவற்றைக் கொச்சைத்தமிழ் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனல் உணர்ச்சிப்பிரவாகமான அவர்கள் இலக்கியம், கானாப் பாடல்கள் போன்றவை இலக்கியங்களாகாதா? மனிதனுக்காக உருவானது கூட்டு ஒலிக்குறியீடுகளான மொழிகள். அவை மனிதனை விட குறியீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா? தமிழுக்காக உயிர்கொடுப்போம்என்று மேடைகளில் முகழங்குவது சரியா? ( மயிரைக்கூட கொடுக்க மாட்டார்கள் நிசத்தில்!)

G.Ragavan said...

மிகச்சிறப்பு. சுடர் மீண்டும் ஒளிரத்தொடங்கியுள்ளது. அருமையான தகவல்கள். இன்றைய நிலையை அப்பட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.

அடுத்து சுடர் அனுசுயாவிடம். காத்திருக்கிறேன் அவரது பதிவிற்கு.

ஞானவெட்டியான் said...

அன்பு அம்மா,
இயன்றவரை முயன்றால் நம்மால் மாற்ற இயலாதது ஒன்றில்லை. தேவை சிறிது முயற்சியே. முயலுங்கள். நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு செந்தழல் இரவி,
மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு ஓசை செல்லா,
//விளிம்புநிலை மனிதர்கள் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு வழக்குத் தமிழில் உரையாடினால் எழுதினால் அவற்றைக் கொச்சைத்தமிழ் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.//

அது செந்தமிழ் அல்ல, கொஞ்சம் கொச்சையாக உள்ளது, என்று கூறுகிறார்கள் அவ்வளவுதானே. ஆயினும் தமிங்கிலத்தைவிட, பண்ணித்தமிழைவிட மேல்தானே!

//ஆனல் உணர்ச்சிப்பிரவாகமான அவர்கள் இலக்கியம், கானாப் பாடல்கள் போன்றவை இலக்கியங்களாகாதா?//

இலக்கியத்திற்கென வரைமுறைகள் உண்டு. அவற்றிற்குட்பட்டவை மட்டுமே இலக்கியமாக முடியும்.

//மனிதனுக்காக உருவானது கூட்டு ஒலிக்குறியீடுகளான மொழிகள். அவை மனிதனை விட குறியீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா?//

மனிதனாக மட்டும் இருப்பதென்றால் குறியீடுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம். ஆயினும் தமிழனாக இருப்பதெனில் குறியீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.

//தமிழுக்காக உயிர்கொடுப்போம்என்று மேடைகளில் முகழங்குவது சரியா? ( மயிரைக்கூட கொடுக்க மாட்டார்கள் நிசத்தில்!)//

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு நாம் என்ன செய்கிறோம்; என்ன செய்யப் போகிறோம் என எண்ணிப் பார்ப்பது நலம் பயக்கும்.

இறுதியாக,செந்தமிழில் உரையாடாவிடினும், பேச்சுத் தமிழில் கலப்பின்றி பேசுதல் வேண்டும்.

ஞானவெட்டியான் said...

அன்பு இராகவா,
//இன்றைய நிலையை அப்பட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.//
மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

பலுக்கியது.
முதல்முறையாக கேள்விப்படுகிறேன்.
அர்த்தம் புரிகிறது.
அந்த "பலனி" சிரிப்பை அடக்கமுடியவில்லை.

ஞானவெட்டியான் said...

அன்பு குமார்,
வேதனையுடன் எழுதியது. தற்காலத்தைய நிலை அப்படித்தான் உள்ளது. அது மாறவேண்டும்.

அனுசுயா said...

Ayya ennai sudaruku alaithatharku nandri. Ennal tamilil elutha mudiya villai kadantha oru vaaramaga. athanal than thankalukku pathi koora mudiyavillai.
En sudarai paaraattiyatharku nandri.

ஞானவெட்டியான் said...

இளையவர்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் தமிழ் வளர்க்க முடியும். நான் வளர்க்கிறேன் எனப் பேசுவதால் பயன் இல்லை; உண்மையிலேயே அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.
வாழக! வளர்க!!

அப்பா டக்கர் அமீர்பர் said...

தமிழ் அழியாது,எத்தனையோ மொழிகள் அழிந்து,அருகி போய் விட்டன(உதா;சமஸ்கிருதம்).ஆனால் தமிழ் அப்படியல்ல,அது பிறமொழிகளை தன்னூல் அடக்கி கொள்ளும் திறமை உள்ளது.ஆங்கிலத்தில,இந்தியில்,ஏன் பிற மொழிகளில் எனக்கு தெரிந்த வரை மொழி கலப்பு செய்து பேச முடியாது,பிறமொழி சொற்களை தம் சொற்களாக அவை மாற்றி கொள்ளும்.
(english-> cattamaran கட்டுமரம். hindi- tomater, TOMATO IN ENGLISH).
ஆனால் தமிழ் அப்படியில்லை,தொல்காப்பியர் காலம் தொற்று தற்சமயம் வரை மாறவில்லை.உதா..பழையன கழிதலும்,புதியன...இது தொல்காப்பியர் வாக்கு.இதில் பழையன என்கிற சொல்லை இன்னும் பயன் படுத்துகிறோம்.அதே மாதிரி பிற மொழிகளை கலந்து தமிழை எளிதில் பேசலாம்.உதா...அச்சா ஜி,மதியம் லஞ்சசுக்கு ...இப்படி ஆங்கிலம்,இந்தி கலந்து தமிழை சரளமாக பேசலாம்.எளிமையான தமிழ் தன்னை தானே பாதுகாத்று கொள்கிறது.