சொர்க்காதி போகமெலாந் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணஞ் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னூற் பரசமயந் தோறுமது வதுவே
நன்னூலெனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்
விரதமுத லாயபல மெய்த்தவத்தி னுண்மைச்
சரியைகிரி யாயோகஞ் சார்வித் - தருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்
தாலோகந் தன்னை யகற்றுவித்து - நால்வகையாம்
சொர்க்காதி = சொர்க்கம் முதலிய
துய்ப்பித்து = அனுபவிக்கச் செய்து
காரணம் = புண்ணியம்
முன்னூல் = முன்னே சொல்லப்பட்ட பழமையான அருள் நூல்
மெய்த்தவம் = உடலுக்குள் (உண்மையாகச்) செய்யும் தவம்
உண்மைச் சரியை = மந்திர நூலில் சொல்லப்பட்ட முறை
பிவிப் பிணி நீங்கி முக்தியெனும் விடுதலையடைய நான்கு வழிகள்:
1.இறைனிடம், ஆண்டானும் அடிமை போலும் பழகி பக்தி செய்தல்(தாத மார்க்கம்).
2.அப்பனும் பிளையும் போலிருந்து பக்தி செய்தல்(சற்புத்ர மார்க்கம்)
3.நண்பன் நண்பனிடம் பக்தி செய்யுதல்(சக மார்க்கம்)
4."நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்)
இவற்றை முறையே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்.
1.முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது சரியை.
2.அதன்பின், அருள் வேறென்றும், தான் வேறென்றும் பகுத்து நோக்காது புறச்செயல் புரிவது கிரியை.
3.இறைவனை அடைய, நல்ல ஒரு குரு காட்டிய நல்வழியில் மனதையடக்கச் செய்யும் பயிர்ச்சி யோகம்.
4.மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம்.
இவற்றால் அடையும் முக்திகள்:
1.இறையுலகமாம் அறிவு உடலில்(சிதாகாயத்தில்) வாழுதல் சாலோகம்.
2.இறைவனின் அருகில் வாழுதல் சாமீபம்.
3.இறை உருப்பெற்று வாழுதல் சாரூபம்.
4.இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல் சாயுச்சியம்.
இவற்றுள், முத்தி முடிவென ஞானத்தையும், ஏனைய மூன்றையும் பத முத்தி எனவும் சான்றோர் கூறுவர்.
ஆலோகம் = தெளிந்த அறிவு
அகற்றுவித்து = விரிவித்து
நால்வகையாம் = அருள் பதியும் முறைகள் நான்கு; அதாவது, மிக மந்தம், மந்தம், தீவிரம், மிகத்தீவிரம்
கொடிய நரகம், தேவ உலகம் ஆகிய இடங்களில் அனுபவிக்கவேண்டிய வேண்டியவைகளை எல்லாம் அனுபவிக்கச் செய்துவிட்டு, பிறவா வழிக்குக் காரணமாகிய நல்லறிவை உயிர்கள் பெற்றவுடன், அவைகள் மதங்களில் கூறப்பட்ட வழிகளில் படிப்படியாகச் செல்லும்பொழுது ஒன்றோடொன்று விவாதம் செய்கின்ற பழைய நூல்களில் கூறிய அந்நிய சமயங்களில் நிற்கும்போது அச்சமயங்களின் சாற்றிறங்களே நல்ல சாற்றிறங்கள் எனத் தோன்றச் செய்து, அம்மத ஒழுக்கங்களில் நிலைபெறச் செய்து, ஆதி நூற்களில் கூறப்பட்டுள்ள விரதமிருத்தல் முதலான பல தவ நெறிகளை உண்மையாகக் கடைப்பிடித்தபின், மெய்ச் சமயமாகிய சைவ சமயத்தில் உள்ள, பணிவிடை நெறி, பூசை நெறி, யோக நெறி ஆகியவைகளில் நிற்கும்படி செய்பவனே! அவற்றின் பயனாகத் திருவருள் பெருகுவதற்கு ஏதுவாகிய பதவிகளாம் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகியவைகளை அடையும்படி செய்து நல்லறிவை விசாலப் படுத்துவோனே!
Friday, December 01, 2006
கந்தர் கலிவெண்பா - 9
Posted by ஞானவெட்டியான் at 6:40 PM
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
நான்கு வித முக்தி நிலைகளைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா!
நல்ல பதிவு
ஐயா,
இதெல்லாம் எங்கு போயிற்று.கண்ணிலேயே பார்க்க முடியவில்லை அல்லது நாம் வேறு திசையில் நடக்க ஆரம்பித்துவிட்டோமா?
அன்பு SK,
மிக்க நன்றி
அன்பு என்னார்,
மிக்க நன்றி
அன்பின் குமார்,
//இதெல்லாம் எங்கு போயிற்று.கண்ணிலேயே பார்க்க முடியவில்லை அல்லது நாம் வேறு திசையில் நடக்க ஆரம்பித்துவிட்டோமா?//
கண்ணை மூடிக்கொண்டு எதிர் திசையில் சென்றுவிட்டோம். திரும்பி வாருங்கள் என அழைப்பது நமது கடமை.
Post a Comment