Saturday, February 20, 2010

கந்தர் கலிவெண்பா - 25

25.அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவற்
கன்னியொடுஞ் சென்று (அ)வட்குக் காதலுருக்காட்டுதலும்
அன்னவள்கண் டவ்வுருவ மாறினையுந் - தன்னிரண்டு
கையா லெடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து
மெய்யாறு மொன்றாக மேவுவித்துச் - செய்ய


அன்னவள் = கங்கை
சரவணத்தில் = சரவணப் பொய்கையில்
சரவணம் = நாணல்

சென்னி = தலை, நாணல் முனை
திருவுருவாய் = திருவடிவு எடுத்து

அறுமீன் = ஆறு நற்சேத்திரப் பெண்களாகிய கார்த்திகைப் பெண்டிர்

நறுநீர் = கங்கை
குறுமுறுவல் = புன்சிரிப்பு

கன்னி = உமையம்மை(உலகையெல்லாம் பெற்றாலும் இறைவி கன்னியே என ஞான நூல்கள் கூறும்)

கந்தன் = ஒன்று சேர்க்கப்பட்டவன்
மெய் = உடல்
மேவுவித்து = பொருத்தப்பட்டு
செய்ய = சிவந்த

கங்கையும் அப்பொறிகளின் சூட்டைப் பொறுக்க இயலாது, நாணல் நிறைந்த சரவணப் பொய்கையில் அவற்றை வைத்தனர். அப்போது அவை ஆறு திரு உருவங்களாக மாறி முதலில் கார்த்திகைப் பெண்டிர் கொடுத்த திருமுலைப் பாலை உண்டு அழுது விளையாடும்போது நறுமணமுடைய கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவபிரான், புன்சிரிப்புடைய கன்னியாகிய உமையம்மையுடன் சென்று குழந்தையைப் பார்த்து அன்பு செலுத்துதற்குரிய பிள்ளைத் திருவடிவத்தை அம்மைக்குக் காட்டவும், அவள் ஆறு திருவுருவத்தையும் தன் இரு கைகளால் எடுத்துத் தழுவி ஒன்று சேர்த்து ஓர் உருவாக்கி, "கந்தன்" (சேர்க்கப்பட்டவன்) என்னும் திருப்பெயரையும் தந்து அத்திருவுருவைச் செம்மாயான தன் திருமுகத்தோடு சேர்த்து.........

"சேயவன் வடிவம் ஆறுந் திரட்டி யொன்றாகச் செய்தாய் - ஆயதனாலே கந்தனாம்மெனு நாமம் பெற்றான்" - என்கிறது கந்த புராணம்

0 Comments: