முருகன் - உருவ விளக்கம்
******************************
கீழ்கண்ட அநுபவமுத்துக்கள், குன்றுதோறாடல், கந்தபுராணம் ஆகியவைகளில் கூறப்பட்டவைகளிலிருந்தும், என் பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் அவ்வப்போது ஆங்காங்கே கூறியவைகளிலிருந்தும் புரிந்துகொண்டவை.
முருகனை ஏன் படங்களிலும், பாடல்களிலும் சித்தரித்துள்ளனர் என்று கொஞ்சம் சிந்தித்தல் அவசியமே :
முகம் ஆறு -
ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும், ஆறுதலையுடையதாக இருப்பதால்
முகம் ஆறுதலைத் தருவதாலும் ஆறு முகமுண்டாயிற்றென்று விளம்பலுமுண்டு.
கால் இரண்டு -
தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு - என்ற இரண்டறிவாகிய விடய
உணர்வும், நிர்விடய உணர்வும் ஆகும்.
கை பன்னிரண்டு -
ஆறு ஆதாரங்களிலுமுள்ள பிரகாச, அப்பிரகாசமாகும்.
தசாயுதம் - வச்சிரம் - தீட்சண்ய உணர்வு
வேல் - சக்தி (இச்சா, கிரியா, ஞானா சக்திகள்) - Potential & kinetic energy.
அருள் - அறிவு
மணி - ஆன்ம விளக்கமாகிய நாதம்.
த்வஜம் - புகழாகிய கீர்த்தி
ஸரஸிஜம் - தயவு
குக்குடம் - மாச்சரியமில்லாத நிறைவு.
பராகம் - பாச நீக்கம்.
தண்டம் - வைராக்கிய அறிவு.
பாணம் - அன்பு(அம்பு).
அபயம் - சமாதான உணர்ச்சி
வரதம் - நிராபரமாகிய ஆதரவென்னும் சகிப்பு.
கடப்ப மாலை - சர்வ தத்துவ கண்டனம்.
மயில் -
விசித்திர வடிவுடையதாகியதும், பல வர்ணமுள்ளதும், மறதி முதலிய
குணங்களுக்குக் காரணமானதும், விசித்திர மாயைக்கு இருப்பிடமானதுமான
மூலப்பிரகிருதி, மாயை.
சூரன் -
அண்டத்திலும், பிண்டத்திலும், மூல அஞ்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய மகா அகங்காரமென்னும் இராக்கத அம்சமாகியதுவே.
மாமரம் - மாயை
கோழி - மாச்சரியம்
யானை முகம் - மகாமதம்
சிங்க முகம் - ஆதி குரோதம்
தெய்வ யானை - தாந்தர தத்துவம்
வேடர்கள் - இந்திரியங்கள்
வள்ளி - மானசமாகிய மானின் வயிற்றிலுதித்த சுத்த மனம்
வடிவு - நினைப்புக்கும் மறதிக்கும் இடையில் - விவேக உருவு
பாத முதல் நாபி வரை - அக்கினி உருவு
நாபி முதல் கண்டம் வரை - தார நாடி உருவு
கண்ட முதல் புருவ மத்தி வரை - மணி உருவு (சுப்பிரமணியன்)
உச்சியில் - ஒளி உருவு
புத்தியில் - சுத்த அறிவு
அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும், கோணத்தில்
ஆறாயும்(ஆராயும்),மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும் விளங்குபவனே சுப்பிரமணியம்.
படை வீடுகள் - 6 :
1.ஏரகம் - அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம்.
2.திருவாவினன்குடி - இலக்குமியாகிய மகிழ்ச்சியும், பசுவாகிய சீவனும், இனன்(சூரியன்) ஆகிய புத்தியும், ஒன்றுகூடி விளங்கும் ஆன்ம அறிவின் சுத்தகாரிய இடம்.
3.பழமுதிர் சோலை - (இந்திரிய,ஆலரண,சீவ) அநுபவப் பழக்கங்களாகிய பிரயோசன இன்பங்கள் நீங்கி குறைவற்ற அறிவாய் விளங்குமிடம்.
4.திருச்சீரலைவாய், திருச்செந்தில்,செயந்திபுரம் : சுத்த மனத்தில்
(விடயக்)கடலில், அவாவாகிய அலை அடித்துக்கொண்டிருக்கும் இடமாகிய கரை,செந்துக்களின் இருதய(இரு+உதய) தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை வதைத்து மகிழ்ச்சியைப் பெற்ற பதிமனத்தின் (பதி+மனம்) விளக்கம்.
5.திருப்பரங்குன்றம் - அசைதலில்லாத விளக்கத்தையுடைய விவேக உல்லாச இன்ப நிறைவு.
6.குன்றுதோறாடல் - மலையென்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமாயுள்ள துரிய நன்னிலை. சீவதுரியம், பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம்,சத்திதுரியம் ஆகிய துரிய மலைகளுக்கு உடலிலிடம், கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு,நெஞ்சு ஆக ஆறு.
ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும், யோகிகள் இருதயத்தில் கண்டு வணங்குவரென்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் கண்டு வணங்குவரென்றும், பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும் விதித்துள்ளது.
ஆகவே, அவரவர் நிலக்கு ஒத்தவாறு இறையை வணங்குவோமாக.
1.இறை உருவம் உருவகப்படுத்தப் பட்டவையே.
அவன் உருவிலி.
2.உருவ வழிபாடு அறிவின் கீழ்மட்டத்தில் இருப்போருக்கென உண்டாக்கி வைக்கப்பட்டது.
3. ஆம். குணாதிசய்ங்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்பனை உருவம்.
4. இவ்வடிப்படைகள் இல்லாது ஞானப் பாடல்களின் உள்ளே மறைந்திருக்கும் இரகசியங்களையும், மரும முடிச்சுகளையும் புரிந்துகொள்ள இயலாது.
Thursday, December 27, 2007
முருகன் - உருவ விளக்கம்
Posted by ஞானவெட்டியான் at 12:40 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
ஞான நிலையிலே யார் பெரியவர், யார் சிறுவன்?
ஞானநிலை நினைவு.
உண்மையிலேயே ஞான நிலையிலே யார் பெரியவர், யார் சிறுவன் என்பதல்ல.
அறிந்ததை, அநுபவித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளல் வேண்டும். அதற்காகவே "பிரும்ம இரகசியம்"என மறைக்கப்பட்டு இருப்பவைகளை எல்லாம் அள்ளி வீசிக்கொண்டுள்ளேன்.
இன்னுமொன்று சொல்கிறேன். யுனிகோடு என்னஎனத் தெரியாமலிருந்தபோது எத்தனை
மடலாடல்கள் செய்து, அவைகளை கற்று, ஒத்தை விரலால் கொத்தி தற்பொழுது அனுப்பி வருகிறேன்.
"கற்றது கைமண்ணளவு .
கல்லாதது உலகளவு."
"ஏற்பது (ஞானம்)இகழ்ச்சி அல்ல"
அருமையான விளக்க்ம்
ரொம்ப நன்றி
ஆனா சில கேள்விகள்
> 1.இறை உருவம் உருவகப்படுத்தப் >பட்டவையே.
> அவன் உருவிலி.
இந்த உருவம் ஏன் வந்திச்சு ?
இது மனிதனே உருவாக்கியதா ?
இல்லை இதுவும் கடவுள்
சித்தமா ? கடவுள் சித்தமில்லாம அவன் / அவள் உருவம் வருமா ?
இத்தினி காலம் நிலைக்குமா ?
ஆனா படிச்சவங்க படிக்காதவங்கன்னு
எல்லோரும் இதையே செஞ்சு
இருக்காங்களே அப்ப உருவ வழிபாட்டுக்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருக்கணுமே ?
அது என்ன ?
நன்றி
அன்பு சுப்பு,
> இந்த உருவம் ஏன் வநதிச்சு ?
> இது மனிதனே உருவாக்கியதா ?
> இல்லை இதுவும் கடவுள்
> சித்தமா ? கடவுள்
> சித்தமில்லாம அவன் / அவள்
> உருவம் வருமா ?
தெய்வ வழிபாடு - மூலம் எது?
தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன்,அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.
"அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்."
எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர்.
உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக,தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே
மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில்
மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.
போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர். இவர்களைக் காவல் தெய்வமாக்கினர். இவர்களுக்கு உருவம் கொடுத்து, சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
ஆக, மனிதன்தான் இறைவனை உருவகப்படுத்தி சிலை வைத்தான். தங்களின் வினாவில் கேட்டபடி அவனுள்ளிருக்கும் தெய்வம்தான் அவனைத் தூண்டி சிலை வைக்க
வைத்திருக்கும்.
சைவநெறிகள் குலதெய்வ வழிபாட்டை எவ்வாறு அணுகுகின்றன?
சைவ நெறிகளில் குலதெய்வ வழிபாட்டைப் பற்றி ஏதுமிருப்பத்தாகத் தெரியவில்ல. சைவம் சிவத்தையே பாடித் துதிக்கிறது.
>குலதெய்வங்களைச் சிலர்
>சிறுதெய்வங்கள் என்கின்றனர். சிறு தெய்வங்கள் என்றால் பொருள் >என்ன?
முதலில் தெய்வம் என்றால் என்ன? தெய்வம் மக்களுக்கு எதற்காக வேண்டும்?
என்னும் வினாக்களுக்கு விடையறிதல் வேண்டும்.
என்பத்துநான்கு நூறாயிரம் சீவராசிகளில், மனிதனுக்குத்தான் எல்லாம் தெரியும். தனக்கு வேண்டிய உணவைத்தேடிக்கொள்ள, நோய் வந்தால் போக்கிக்கொள்ள, கல்வி கற்க ஆகியஎல்லாவற்றையும் செய்ய மனிதனால் முடியும். அப்படியிருக்க, இவனுக்குத் தெய்வம் எதற்கு? பணம் சம்பாதிக்கவா? பணத்தை உண்டாக்கியவனே இவன்தானே? விந்து வெளியேறி நாறிச் செத்தால்,நரகமென
ஒன்றிருந்தால், அங்கே கற்பகோடி காலத்திற்கும் அவத்தைப்பட வேண்டியதுதான்.
அதற்காகவா இறைவன் மனுவுக்கு அறிவைக் கொடுத்தான்? இதற்காகவா வேதங்களும் கலைஞானங்களும் இவனுக்கு இறக்கப்பெற்றது? எந்தக் குறை இருப்பினும் பரவாயில்லை. ஏழையாயினும், பிள்ளைப்பேறு அற்றவனாயினும், நோய்நொடியில்
அவத்தையுருபவனாயினும், அவன் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. வேறு எது இல்லா விட்டாலும் தெய்வம் கட்டாயம் அவனுக்கு வேண்டும். எதற்காக? எமனிடம்
போராடிப் பிறவிப்பிணியைப் போக்கவே இறைவன் வேண்டும். எமபடரை நீக்கிச் சிவமயமாக்கும் (விந்தடங்கிச் சாவதே சைவம்) ஒரு செயலுக்குத்தான் தெய்வம்
தேவை. சாகாக் கலையாகிய பிரும்மவித்தை யார் கையிலிருப்பினும் அவரே
தெய்வம். அதுவே நிசமான செயல்.
ஆக, குலதெய்வம், தெய்வமா? இல்லையா? என முடிவெடுப்பது உங்கள் கையில்.
பின்னர் வந்த சிலர் சாங்கியங்களுக்கு முக்கியத்துவம் ஈந்தனர்.அவர்கள்தான், பெரிய தெய்வம், சிறு தெய்வம் எனப் பாகுபாடு செய்தனர்.
பிரும்மவித்தை ஒன்றுதானே? அதில், பெரியது சிறியது எனப் பாகுபாடு உண்டோ?
இல்லையே. அப்படியிருக்க, பெரிய தெய்வம், சிறு தெய்வம் எனக்கூறல் நியாயமா?
தெய்வங்களுக்குச் சிலை வடிப்பதுண்டா? இதில் சரி தவறு என்று உண்டா?
சிலைவடித்ததால்தானே, நாம் குல தெய்வங்களுக்குச் சிலை வடிப்பதுண்டா? என வினாவெழுப்புகிறோம். ஞானமறியா மக்களுக்குத் தெய்வம் இருப்பதைப்
புரியவைக்கவே சிலை வடிக்கப்பட்டது. உருவ வழிபாடு தோன்றிற்று. இது பாமர மக்களைப் பொருத்தவகையில் சரி; ஞானப் பாதையில் செல்லுபவர்களுக்குத் தவறு.
சரியும் தவறும், அவரவர் நிலைக்குத் தகுந்தது.
குலதெய்வங்களில் எந்த வடிவம் அதிகமாகக் காணப்படுகிறது: ஆணா, பெண்ணா?
எமக்குத் தெரிந்தவரை, பெண் தெய்வங்கள்.
குலதெய்வங்களை வழிபட்டு அருள் பெற்றோர் வரலாறு உண்டா?
வரலாறுகள் ஏராளம். கதைகள் சொல்லுவதில் தமிழர்கள் நிபுணர்கள்.
வழிபாட்டிற்கு அவரவர் மனம்தான் காரணம். குலதெய்வத்தை வழிபட்டேன்; பலன் கிட்டியது என்றால், நல்லது; மனம் திருப்தி அடைந்து விட்டது; பலன்
கிட்டாதபோது, குலதெய்வம் கோபமாக உள்ளது; சாந்தி செய்ய வேண்டும்;
என்னும்போதுதான் மடமை வெளிப்படுகிறது.
எம்மைப் பொருத்தவரையில், தெய்வம் ஒன்றே; பெரியது, சிறியது அதில் கிடையாது; தெய்வம் கோபம் கொள்ளுமெனில், நம்மைச் சுற்றி நாம் அனுபவிக்க இத்தனைகோடி இன்பங்களை அளித்தது ஏன்? தெய்வம் கருணைக் கடல். நாமே,இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்திடு எனக் கூறும்போது,
நம்மைவிடப் பெரியவன், நம்மைப் படைத்தவனுக்குத் தண்டிக்க மனம் வருமா?
>
> இத்தினி காலம் நிலைக்குமா ?
> ஆனா படிச்சவங்க
> படிக்காதவங்கன்னு
> எல்லோரும் இதையே செஞ்சு
> இருக்காங்களே
> அப்ப உருவ வழிபாட்டுக்கு
> ஏதோ ஒரு முக்கியத்துவம்
> இருக்கணுமே ?
>
> அது என்ன ?
மனிதர்களுக்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனச் சரியாக விளக்க ஞானாசிரியர்கள்(குரு) கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் இயந்திரமயமான
வாழ்க்கையில் ஞானப் பயிற்சி செய்யப் போதுமான காலம் கிடைப்பதில்லை.
கிடைத்தாலும் அவனின் அறியாமை திரையிட்டு விடுகிறது. கோவிலுக்குப் போனால் போதும் என்று விட்டு விடுகிறான்.
அதனால்தான் இத்தனை காலம் உருவ வழிபாடு நிலைத்து இருக்கிறது. இது தவறும் ஆகாது. அவர்களை வழிப்படுத்த அவனுடைய மனத்தில் இருக்கும் இறைவன் சந்தர்ப்பங்களை அளிப்பான். பிடித்துக் கொள்வதும் விட்டு விடுவதும் மனிதனின் கையில்.
நீண்ட விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா. இரண்டு வாரத்திற்கு முன்பே படித்திருந்தாலும் இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது.
மிக்க நன்றி, குமரன்.
ஞானவெட்டியான் ஐயா...மிகவும் அருமையான விளக்கங்கள். நன்று. நன்று.
அன்பு இராகவன்,
மிக்க நன்றி.
Post a Comment