Saturday, December 29, 2007

56.தில்லையெனு மம்பரமாங்

ஞானம் எட்டி
**************
56.தில்லையெனு மம்பரமாங் கமலபீடஞ் சிறந்தவிந்து
..........................நாதமதில் செனித்தவாறும்
வல்லவர்கள் போற்றுந்திருமண்டபத்தில் வழிகடந்து
........................ஆறுதலந் தாண்டியப்பால்
சொல்லரிய முக்கோண வீடுந்தாண்டி சோதிமதிநடுவணை
........................முப்பாழுந்தாண்டி
எல்லையெனு மூலமதினாதவிந்து வின்பமுடனுதித்த
........................வகையினிசொல்வேனே.

அம்பரம் = அழகிய பரமாகியா ஆகாயப் பெருவெளி

திருமண்டபம் = கண்கள்

ஆறு ஆதாரங்கள
******************
1.மூலம் - மூலாதாரம்
2.கொப்பூழ் - சுவாதிட்டானம்
3.மேல்வயிறு - மணிபூரகம்
4.நெஞ்சம் - அநாகதம்
5.மிடறு - விசுத்தம்(விசுத்தி)
6.புருவநடு - ஆக்ஞேயம்.

முப்பாழ் = விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயைகள்.

முக்கோண வீடு = மூலாதாரம்

தில்லை என்று சொல்லப்படுவது ஆகாயமாகிய தாமரை மலர். சிறப்பான விந்து, நாதத்தில் கலந்து நாம் உலகில் பிறந்த விதத்தையும், வல்லமை பெற்றோர் துதிக்கின்ற திருமண்டபத்தின் வழியைக் கடந்து ஆறு ஆதாரத் தலங்களையும் தாண்டி, அப்புறம் சொல்ல முடியாத முக்கோண வடிவில் உள்ள வீட்டையும் தாண்டி, அதன்பின் விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயைகள் ஆகிய முப்பாழையும் தாண்டும் வகையையும், எல்லை எனச் சொல்லப்படும் மூலத்தில் நாதவிந்துக்கள் உண்டான விதத்தையும் நான் இனிச் சொல்லுகிறேன்.

4 Comments:

Anonymous said...

//திருமண்டபம் = கண்கள் ... முக்கோண வீடு = மூலாதாரம்//

அருமையான விளக்கம்.

//துதிக்கின்ற திருமண்டபத்தின் வழியைக் கடந்து ஆறு ஆதாரத் தலங்களையும் தாண்டி//

அதனால் தான் கோவில்களில் ஆறு பிரகாரங்களை வைத்தனரோ!

Anonymous said...

அன்பு சிவமுருகன்.
நன்றி.
ஆமாம்.

Anonymous said...

இந்த அரிய விடயங்களை ஏன்? சூக்குமமான மொழிநடையில்; கூறினார்கள்!;புரியாமையும் ;இளைஞர்கள் அஞ்சுவதற்குக் காரணமாக உள்ளதே!
யோகன் -பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
எளிமையாய்ச் சொல்லிவிட்டல் மதிப்பு இல்லையே!
இப்பொழுது உடைத்துச் சொல்லியிருக்கிறேன். எத்தனை பேர் இதைப்படித்து பயன் அடைவார்கள்?